வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

தமிழறிஞர் திரு. வி.கலியாணசுந்தரனார் பிறந்த தினம் ஆகஸ்ட் 26.1883.



தமிழறிஞர்  திரு. வி.கலியாணசுந்தரனார் பிறந்த தினம் ஆகஸ்ட் 26.1883.

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க. , ( ஆகத்து 26 , 1883 - செப்டம்பர் 17 , 1953  ) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர்
தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன்
வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.
கல்வி
தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில்
இராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், 1894 இல் வெஸ்லி பள்ளியீல் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார்.
1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.

தமிழ்க் கல்வி
வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த
யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரெவேற்பிள்ளை நீலகிரிக்குச் சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும்
சைவ நூல்களையும் பாடம் கேட்டார்.
ஆசிரியப் பணி
1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத்
திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.
பத்திரிகைப் பணி
பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன் ,
நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
அரசியல் பணி
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
எழுதிய நூல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
நாயன்மார் வரலாறு - 1937
முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
உள்ளொளி - 1942
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944
உரை நூல்கள்
பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941
அரசியல் நூல்கள்
தேசபக்தாமிர்தம் - 1919
என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930. (இதன் ஒரு பகுதியை ஒலிப்பு வடிவில் இங்கு காணொலி)
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
இந்தியாவும் விடுதலையும் - 1940
தமிழ்க்கலை - 1953
சமய நூல்கள்
சைவசமய சாரம் - 1921
நாயன்மார் திறம் - 1922
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
சைவத்தின் சமசரசம் - 1925
முருகன் அல்லது அழகு - 1925
கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
சைவத் திறவு - 1929
நினைப்பவர் மனம் - 1930
இமயமலை (அல்லது) தியானம் - 1931
சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
சமரச தீபம் - 1934
சித்தமார்கக்ம - 1935
ஆலமும் அமுதமும் - 1944
பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949
பாடல்கள்
முருகன் அருள் வேட்டல் - 1932
திருமால் அருள் வேட்டல் - 1938
பொதுமை வேட்டல் - 1942
கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
புதுமை வேட்டல் - 1945
சிவனருள் வேட்டல் - 1947
கிறிஸ்து மொழிக்குறள் - 1948
இருளில் ஒளி - 1950
இருமையும் ஒருமையும் - 1950
அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
முதுமை உளறல் - 1951
வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
இன்பவாழ்வு - 1925
பயண இலக்கிய நூல்கள்
இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்).


சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
தமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்.

இந்திய சுதந்திரப் போர் பல அரிய தலைவர்களைக் கண்டிருக்கிறது. அரசியல் மட்டும் சார்ந்தவர்கள்தான் இவர்களில் பெரும்பாலோர். அரசியல் வாதியாகவும், மொழிப்புலமையும் பெற்ற பலரும் சுதந்திரப் போர் வீரர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர் அரசியல், மொழிப்புலமை, சைவம், தொழிற்சங்கப் பணி, சமூக சீர்திருத்தங்கள் என்று பல துறைகளிலும் பாடுபட்டவர் இவர் போல வேறு யாரும் உண்டா என்பது தெரியவில்லை. தலைவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் தமிழ்த்தென்றல் என்று போற்றப்படும் திரு வி.க. ஆவார். இவரது தனித்தமிழ் எழுத்தும் பேச்சும் இவருக்குத் தனி முத்திரைப் பதித்தது.
திருவாரூர் விருத்தாசல கலியாணசுந்தர முதலியார் என்பதன் சுருக்கமே திரு. வி.க. என்பது. இவர் 1883இல் பிறந்தார். இவரது பாட்டனார் காலத்திலேயே இவர்கள் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டது. இவரது தந்தையார் விருத்தாசல முதலியார். இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி இறந்த பின், சின்னம்மாள் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் பிறந்தனர். இவர்களில் ஆறாவது குழந்தைதான் திரு.வி.க.
இவரது தந்தையாருக்கு சென்னை ராயப்பேட்டையில் வியாபரம் தொழில். இவர் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை மராமத்து செய்யும் பணியை ஏற்றுக்கொண்டு துள்ளம் எனும் கிராமத்தில் குடியேறினார். அங்கு இருக்கும்போதுதான் 26-8-1883இல் திரு.வி.க. பிறந்தார். இவருக்கு ஆரம்பகால கல்வியை அவ்வூரில் பள்ளிக்கூடம் இல்லாததால் இவரது தந்தையே புகட்டி வந்தார். பின்னர் சென்னையில் வந்து பள்ளியில் சேர்ந்தார். இவரது குடும்ப சூழல் காரணமாகவும், இவரது சொந்த காரணங்களாலும் பத்தாவதோடு இவரது பள்ளிக்கல்வி முடிவடைந்தது. ஆனால் இவரது புறக்கல்வி தேவாரம், திருவாசகம் என்று தொடர்ந்தது. இவரது மரியாதைக்கு உரியவரான கதிரைவேற் பிள்ளை என்பவரிடம் இவர் தமிழ் பயின்றார். அவர் காலமான பின் மயிலை வித்வான் தணிகாசல முதலியார் என்பவரிடம் தமிழ் பயின்றார். தமிழோடு இவர் சமஸ்கிருதமும் நன்கு பயின்றார். இவரது சொந்த முயற்சியால் ஆங்கிலம், வேதாந்தம், பிரம்மஞானதத்துவம் போன்ற பல துறைகளில் இவர் முயன்று கற்றுத் தேர்ந்தார்.
கல்வி ஒருபுறமிருந்தாலும் வாழ்வதற்கு ஒரு தொழில் வேண்டுமே. அதனால் சில காலம் ஸ்பென்சர் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது தேசிய உணர்வு அந்த கம்பெனியின் வெள்ளை முதலாளிகளுக்குப் பிடிக்காமல் வேலை போயிற்று. அப்போது சென்னை வந்து சொற்பொழிவு ஆற்றிய வங்கதேசபக்தர் விபின் சந்திர பாலின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அரவிந்தரின் பத்திரிகையும் இவரை ஒரு தேசபக்தனாக உருவாக்கின. வேலை போன பிறகு தனது தமையனார் நடத்திய அச்சகம் வாயிலாக பெரிய புராணக் குறிப்புரை எழுதி வெளியிட்டார். திருமந்திரத்துக்கும் விளக்கம் எழுதி வெளியிட்டார். பிறகு சிலகாலம் வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தம்மை இணைத்துகொண்டு பணியாற்றத் தொடங்கினார். 'தேசபக்தன்' எனும் பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தினார். பிறகு அதிலிருந்தும் வெளியேறி "நவசக்தி" பத்திரிகையின் ஆசிரியரானார். 1941இல் இந்த பத்திரிகையும் நின்று போயிற்று. 1917இல் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்ட திரு வி.க. 1934 வரை அதில் முழுமையாக பங்கேற்றார். இவர் காலத்தில் காங்கிரசில் முன்னணி வகித்தவர்கள் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, ஈ.வே.ராமசாமி நாயக்கர், திரு வி.க. ஆகியோராவர். எனினும் கால ஓட்டத்தில் இந்தக் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனி வழியே பயணிக்க வேண்டியதாகி விட்டது. இதில் முதல் இருவரும் காங்கிரசை விட்டுப் போய்விட்டாலும் திரு வி.க மட்டும் கட்சியை விட்டு விலகாமல் சற்று ஒதுங்கியே இருந்தார். 1918இல் வாடியா என்பவராம் தொடங்கப்பட்ட சென்னை தொழிற்சங்கத்தில் இவர் ஈடுபாடு காட்டினார். இந்த சென்னை தொழிலாளர் சங்கம்தான் இந்தியாவிலேயே தொழிலாளர்களுக்கென உண்டான சங்கங்களில் முதல் சங்கமாகும். இவரது காங்கிரஸ் அரசியல் பணியில் இவர் சிறை சென்றதில்லை. ஆனால் 1947இல் நடந்த பக்கிங்காம் கர்நாடிக் மில் தொழிலாளர் போராட்டத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இவர் 1919இல் மகாத்மா காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தார். லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ.சிதம்பரனாருடன் சென்று கண்டு உரையாடினார். அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் என்பவர் இவரை அழைத்துக் கடுமையாக எச்சரித்தார். நாடுகடத்த வேண்டியிருக்கும் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார். அப்படியொரு எண்ணம் கவர்னருக்கு இருப்பது அறிந்து அப்போதிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்த சர் பிட்டி தியாகராசர் கவர்னரிடம் அப்படிச் செய்தால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்று கூறி நாடுகடத்தலைத் தடுத்து நிறுதினாராம்.
1925இல் காஞ்சிபுரம் நகரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் பெரியார் ஈ.வே.ரா. வகுப்பு வாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் திரு வி.க. இந்த தீர்மானத்தை தலைவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த பெரியார் மாநாட்டை விட்டு வெளியேறினார். காங்கிரசுக்கும் தலை முழுகிவிட்டு தனி இயக்கம் கண்டது நாடறிந்த வரலாறாகிவிட்டது.
பன்முகத் திறமை கொண்டவராக திரு வி.க. விளங்கினார். அரசியலில், தொழிற்சங்க இயக்கத்தில், தமிழிலக்கியத்தில், சைவ சமயத்தில் இப்படி இவரது பணி பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. மிக எளிமையானவராக இவர் திகழ்ந்தார். 1943இல் இவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு மலர்கள் வெளியிட்டன. மணிவிழாவுக்குப் பிறகு இவர் மேலும் பத்தாண்டுகள் பயனுள்ள பணிகளைச் செய்துகொண்டு வாழ்ந்தார். ஏராளமான நூல்களை எழுதினார். தொழிலாளர் இயக்கங்களிலெல்லாம் பங்கு கொண்டார். இவரது தொழிற்சங்க பணிகளில் வ.உ.சி.யும் பங்கெடுத்துக் கொண்டு, சென்னை துறைமுகத் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இவ்வளவு பெயருக்கும் புகழுக்கும் உரியவரான திரு வி.க. சொந்த வீடு இன்றி, வங்கிக் கணக்கு இன்றி, காலில் காலணி இன்றி, எளிய கதராடையில் நான்கு முழ வேட்டி, சட்டை, அல்லது சில சமயங்களில் மேல் துண்டு மட்டும் என்று இப்படி மிக எளியவராகவே இருந்தார். இறுதி நாட்களில் சர்க்கரை வியாதியால் கண்பார்வை இழந்து முதுமை வாட்ட தனது எழுபதாவது வயதில் ஒரு வாடகை வீட்டில் 1953 செப்டம்பர் 17ல் உயிர் நீத்தார்.
இவரைப் பற்றி நூல் எழுதியுள்ள பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி இவரைப் பற்றி கூறியுள்ள கருத்து "படிப்பால் இமயம், பண்பால் குளிர் தென்றல், பணியால் திருநாவுக்கரசர், சுருங்கச் சொன்னால் தமிழகம் கண்ணாரக் கண்ட ஒரு காந்தி. பல சாரார்க்குப் படிப்பினை நிறைந்த வாழ்க்கை, இன்று அவரது நூல்களில் ஒளிமயமாய் வாழ்கிறது". வாழ்க திரு வி.க. வின் புகழ்! நன்றி . விக்கிப்பிடியா: தஞ்சை வெ. கோபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக