வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

உலக கடித தினம் செப்டம்பர்-1


உலக கடித தினம் செப்டம்பர்-1

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது.
உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்ட ஒரு விஷயமாகும். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார்.
இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.


கடிதம் எழுதலாம் வாங்க!

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’ என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும். உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில் சேர்ப்பார்கள்.
பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும், கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா? இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து, தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு. பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று. அதனால்தான் அது குறித்துப் பாடப் புத்தகங்களிலும் படித்துவருகிறீர்கள்!.
தனிப்பட்ட வகையில் எழுதப்படும் கடிதங்கள், அலுவலக மற்றும் வணிக நோக்கங்களுக்காக எழுதப்படுபவை, அரசியல்ரீதியானவை எனக் கடிதங்கள் பல வகைப்படும். புகழ் பெற்ற தலைவர், எழுத்தாளர்களின் கடிதங்கள் அவற்றின் ஆழமான கருத்துகளுக்காகப் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் அடைபட்டிருந்தபோது மகள் இந்திராவிற்கு எழுதிய ‘மகளுக்குக் கடிதம்’ இந்த வகையில் புகழ் பெற்றவை.
தகவல் தொடர்பின் முக்கிய அம்சமான கடிதம் எழுதுதலை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டிக் கடிதம் எழுதும் போட்டிகள்கூட நடத்தப்படுகின்றன. கடிதம் எழுதும் கலையை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவரால் தொடங்கப்பட்டது உலகக் கடிதம் எழுதும் தினம்.
சில நாடுகளில் டிசம்பர் 7 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. இதுதவிரப் பல்வேறு நாடுகளும் கடிதம் எழுதுதலை ஊக்குவிப்பதற்காகத் தேசிய கடிதம் எழுதும் நாளை தனியாகக் கொண்டாடுகிறார்கள். கடிதம் எழுதுவதை மறந்துவிட்ட இந்தக் காலத்தில் அதை மீட்பதுதான் அனைவரின் நோக்கம்.
உலகக் கடிதம் எழுதும் நாளை முன்னிட்டு நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு பேனா, பேப்பர் எடுங்கள். ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, விருப்பத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாருக்கேனும் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்களே உங்கள் கைப்பட எழுத முயற்சி செய்யுங்கள். சந்தேகம் எழுந்தால் பெற்றோர், ஆசிரியரிடம் கேளுங்கள்.
கடிதம் எழுதும் பழகத்தால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நட்பு பாராட்டுவது, நயமாக நாம் சொல்ல வருவதைத் தெரிவிக்கும் பழக்கம் பலப்பல திறமைகள் கிடைக்கும். ஊரில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு நீங்கள் கைப்பட கடிதம் எழுதினால் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் கடிதங்கள் உங்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டும்.
குழந்தைகளே, எங்கே போகிறீர்கள்? ஓ… கடிதம் எழுதவா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக