சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் பிறந்த நாள் ஆகஸ்ட் 20.
அது நாம் பார்த்துகொண்டிருக்கும் ராபர்ட் கிளைவ் காலம், விஷயம் என்னவென்றால் ஒன்றுமில்லை எல்லாம் வரிபிரிப்பு தகறாறு
அதுவரை தென்னக சிற்றரசர்கள் எல்லாம் ஆற்காடு நவாபிற்கு வரிகட்டி கொண்டிருந்தனர், பின்னர் முகலாய அரசிலிருந்து நவாப் வெளியேற நவாப் குடும்பம் வாரிசு சண்டையில் சிக்கும் பொழுது அதன் கீழிருந்த அரசுகள் எல்லாம் வெளியேறின
வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் எல்லாம் இப்படி வெளியேறிய சிற்றரசர்கள்
ஆற்காடு நவாபிற்காக யுத்தம் செய்த கிளைவ் மிக பெரும் தோகை கோரினான், நவப்பால் கொடுக்கவும் முடியவில்லை ஆங்கிலேயரை எதிர்க்கவும் முடியவில்லை "எனக்கு கட்டுபட்ட சிலர் வரிகொடுக்க மறுக்கின்றனர் முடிந்தால் நீனே வசூலித்துகொள் கொள்" என சொல்லிவிட்டான்
இப்படித்தான் ஆங்கிலேயபடை பூலித்தேவன் பக்கம் வரிகேட்க வந்தது , அவன் கட்ட மறுத்தான் யுத்தம் வெடித்தது
இதில் புலித்தேவனுக்கு பல தளபதிகள் இருந்தனர், அட்டகாசமான வீரர்களும் இருந்தார்கள், அவர்களில் ஒருவனே அந்த ஒண்டி_வீரன், தனியாக சென்று வெள்ளையரை மண்ணை கவ்வ வைத்ததால் ஒண்டி வீரன் என போற்றப்பட்டார்.
என்ன செய்தார்?
நெற்கட்டும் செவல் எனும் பூலித்தேவனின் ஊரினை சுற்றி முற்றுகை அமைத்தது வெள்ளையன் படை, வந்திருந்தது யாரென்றால் கர்னல் ஹெரான்
கர்னல் ஹெரான் எனும் வெள்ளையனுக்கு மேலிருந்தவன் மருதநாயகம் எனும் யூசுப்கான், கிளைவின் கண்ணில்பட்ட மிக சிறந்த இந்திய வீரன்
(கமலஹாசனின் கனவில் மய்யத்துக்கு முன்பு அடிக்கடி வந்தவர் அவர்தான்)
பெரும் வீரனான மருதநாயகம் நெற்கட்டும் செவலை முற்றுகையிட்டு சில வேலை காரணமாக மதுரை திரும்பினான்
அவனின் வாளும் பட்டய குதிரையும் முகாமில் இருந்தன, அதாவது மருதநாயகம் வாளுக்கும் குதிரைக்கும் மரியாதை செலுத்தி வரிகொடுத்துவிடுங்கள் என்பது போன்ற மிரட்டல் அது
கர்னல் ஹெரான் தந்திரமாக ஒரு வேலை செய்தான், காரணம் முற்றுகை இட்டானே தவிர யுத்தம் தொடங்கவில்லை, பூலித்தேவனுடன் யுத்தம் தொடர அந்த அறிவிப்பினை செய்தான்
என்ன சொன்னான்?
"இந்த நெற்கட்டும் செவல் சமஸ்தானத்தில் ஒரு ஆண்மகன் இருந்தால் எங்கள் முகாமில் வந்து யூசுப்கானின் வாளினை எடுத்து அவன் பட்டயகுதிரையினை அவிழ்த்து சென்றுவிடுங்கள் பார்க்கலாம்"
(சிலர் அது நவாபின் வாள் என்கின்றார்கள், சிலர் கிளைவின் வீரவாள் என்கின்றார்கள், சிலர் மருதநாயகத்து வாள் என்கின்றார்கள்
அது மருதநாயகத்து வாளாக இருக்கவே வாய்ப்பு அதிகம், காரணம் அவனின் வாள்வீச்சு அப்படியானது)
சொல்லிவிட்டு பீரங்கிகளை எல்லாம் செவல் கோட்டையினை நோக்கி திருப்பி இருந்தான்
அதாவது எவனாவது ஓடிவருவான் யுத்தம் தொடங்கியவுடன் கோட்டையினை தூள் தூளாக்கிவிடலாம் என்பது அவன் கணக்கு
"நீ எல்லாம் ஆம்பிளையா, இந்த கூட்டத்தில் ஒரு ஆம்பிளை கூட இல்லையா" என்பதை தவிர தமிழனுக்கு வெறியேற்றும் விஷயம் கிடையாது, இன்றைய சினிமா வரும் அந்த வசனத்தை அன்றே அறிந்து சொன்னான் ஹெரான்
அப்பொழுது பூலிதேவனின் அந்த வீரன் மாறுவேடத்தில் அலைந்தான், குதிரை வாரினை செப்பனிடும் தொழிலாளி வேடத்தில் வெள்ளையன் முகாமில் ஊடுருவினான்
சில நாட்கள் வேலை செய்துகொண்டே அங்கு எல்லா வழிகள், பாதுகாப்புகள், வாள் இருக்குமிடம், குதிரை , தப்பி செல்லும் வழி எல்லாம் அறிந்துகொண்டான்
ஒரு அமாவசை அன்று பீரங்கிகள் வாயினை எல்லாம் வெள்ளையன் முகாமினை நோக்கி திருப்பிவிட்டு யூசுப்கானின் வாளினை எடுத்துவிட்டான்
மெதுவாக குதிரையினை அவிழ்க்கும்பொழுது சிக்கல் வந்தது
என்ன இருந்தாலும் அது மருதநாயகம் குதிரை அல்லவா? அடங்க மறுத்தது, அத்து மீற துடித்தது. ஆங்கிலேயர் ஓடி வந்தனர்
இதுவரை ஒழுங்காக செல்லும் வரலாறு அதன் பின் இரண்டு கதையாகின்றது
முதல் கதைபடி வெள்ளையரை பார்த்தவுடன் அருகில் இருந்த புற்கட்டுக்குள் அவன் படுத்ததாகவும் கைகளை நீட்டியபடி ஓளிந்திருந்ததாகவும். குதிரையினை கட்ட முளைகம்பு அடிக்கும் வெள்ளையர்கள் அவன் இடது கையிலே அறைந்ததாகவும் வெள்ளையர் சென்றபின்பு அவன் அந்த கையினை வெட்டி குதிரையில் ஏறியதாகவும் ஒரு செய்தி
இன்னொரு செய்தி குதிரையினை தொட்டு அவன் ஏறியவுடன் ஆங்கிலேய வீரன் அவன் கையினை வெட்டினான் என்பது.
எப்படியோ அவன் கை வெட்டபட்டது நடந்த வரலாறு
அந்த வெட்டுபட்ட கையோடு அவன் என்ன செய்தான் என்றால் அபாய முரசை ஒலிக்க செய்தான், இதுதான் அவன் தனித்துவத்தின் சிறப்பு. வெட்டப்பட்ட நிலையிலும் போர் முரசை ஒலிக்க செய்து விட்டு அந்த அமாவாசை இருளில் அவன் தப்ப முயல்கிறான்.
ஆம், அது போருக்கான ஒலி அதை கேட்ட மாத்திரத்தில் பீரங்கிகள் இயக்கபடும், அதே போலவே அந்த ஒலியை கேட்டதும் பீரங்கிக்கு நெருப்பு வைத்தனர் வெள்ளையர்.
ஆனால் அதன் வாயினை அவன் திருப்பி வைத்திருந்ததை அவர்கள் அறியவில்லை காரணம் இருட்டு.
பீரங்கி வெள்ளையர் முகாமிலே பாய்ந்து பெரும் சேதம் உண்டாயிற்று அந்த குழப்பத்தில் உள்ளேயே ஊடுருவி தப்பி வந்தான் ஒண்டி வீரன்.
நிச்சயம் அது பெரும் சாகசம், தனி ஒருவனாக மிக தைரியமாய் வெள்ளையன் முகாமில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய வீரம் அது
அத்தோடு ஆங்கிலபடை சலசலத்தது, ஆயினும் என் வாளை தொட்டவன் எவன்? என பொங்கி வந்த மருதநாயகம் புலித்தேவனை தோற்கடித்தானே அன்றி புலித்தேவனை கைது செய்யவில்லை. அவரின் முடிவு தெரியவில்லை
அவரைப் போலவே ஒண்டிவீரனின் முடிவும் தெரியவில்லை.
இவை எல்லாம் நொண்டி சிந்து, ஒண்டி வீரனை பற்றிய நாட்டுபுறபாடல்களில் இருந்த செய்திகள்
கட்டபொம்மன் முதல் மருதுபாண்டியர் வரை எல்லாம் நாட்டுபுறபாடல் மூலமே நாம் அறியபெற்றோம். துல்லிய குறிப்புகள் ஏதுமில்லை வெள்ளையனின் போர் குறிப்பை தவிர.
கட்டபொம்மனின் வாழ்வினை மபொசி கொண்டு வந்தது போல மருதுபாண்டியரின் வாழ்வும் நாட்டுபுற பாடலில் இருந்து வந்தது போல... ஒண்டிவீரனின் வாழ்வும் வெளிவந்தது.
வந்து என்ன ஆனது?
கட்டபொம்மனுக்கும் மருது சகோதரர்களுக்கும் திருமலை நாயக்கருக்கும் ஆய்வு மையமும் அரசு விழாவும் அறிவித்த இந்த இந்திய மற்றும் மாநில அரசுகள். அந்த ஒண்டிவீரனை மட்டும் அருந்ததியன் என்பதால் அக்கறை காட்டாமலேயே நகர்கிறது.
கட்டபொம்மன் நாயக்கன் , மருது மறவர் ஒண்டிவீரன் அருந்ததியர் என நாட்டுக்காக போராடியவர்கள் எல்லாம் சாதி அரசியலுக்குள் வைக்கப்பட்டனர்.
அந்தந்த சாதியின் அடையாளமாக கொண்டாடபட்டார்கள்.
நாளை ஒண்டி வீரனின் நினைவுக்காக ஒன்றிணையும் நாள்' ஆகஸ்டு 20.
ஆய்வு மையம் அமைத்து தராத அரசு, ஆனால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மட்டும் போட்டுள்ளது.
ஒரு விடுதலைப் போராட்ட தியாகிக்கு மரியாதை நிமித்தமாக கூடும் ஒரு உத்தேச நாளுக்கு கூட தடை உத்தரவாம்.
ஆனால்,ஒண்டி வீரன் புலித்தேவனின் உற்ற நண்பன், புலித்தேவன் படையில் எல்லா சாதியினரும் ஒற்றுமையாக இருந்திருக்கின்றார்கள். சாதியை கடந்த மன்னராக பூலித்தேவன் வாழ்ந்துள்ளார்.
புலித்தேவனுக்காக உயிரை பணையம் வைக்கும் அளவு நாட்டுபற்று ஒண்டிவீரனுக்கு இருந்திருக்கின்றது
இன்று அதே பூமியில் அவர்கள் பெயரில் சாதியால் மோதிகொள்வது நெல்லையின் சாபக்கேடு.
எல்லா சாதியும் ஒன்றாக இருந்துதான் வெள்ளையனை எதிர்த்திருக்கின்றார்கள் , நாடு முக்கியம் என்றுதான் இருந்திருக்கின்றார்கள்
ஆனால் சுதந்திர இந்தியாவில் சாதியால் மோதிகொள்ளுகின்றார்கள் என்றால் எல்லாம் அரசியல் படுத்தும் பாடு.
நாளை புலித்தேவனுக்காகவும் நெற்கட்டும் செவலுக்காகவும் சாதி பாராது, இனம் பாராது செத்த அந்த வீரனுக்கான நினைவு நிகழ்வு.
ஆனால் சாதி என்ற அற்ப காரணத்திற்காக அவன் ஒதுக்கப்படுகின்றான்.
அவனின் தேசபற்றையோ, தியாகத்தையோ யாரும் நினைக்கவில்லை மாறாக அவனின் சாதியினை சொல்லி ஒதுக்கி வைப்பர்.
இவர்களை விட அவன் கையினை வெட்டிய அந்த வெள்ளையன் எவ்வளவோ பரவாயில்லை.
போகட்டும்....
அந்த சுத்தமான ஆண்மகன் மாவீரன் ஒண்டிவீரனுக்கு வீரவணக்கம், அவனை போன்ற மாவீரர்கள் செய்த மகத்தான தியாகமே இன்றைய சுதந்திர இந்தியாவின் விடிவிற்கு விடிவெள்ளி என்பதை மறவாதே இப்பாரதமே...
வந்தே மாதரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக