திங்கள், 12 ஆகஸ்ட், 2019

உலக இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.


சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.
1998ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரனைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.


விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்" என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?" என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று" என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்" என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.


இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். 'ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது". அது போல, 'கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.'அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது" என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up" என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி" என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

2001ம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும், உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும்,

2008ம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. குறிப்பாக சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.
நன்றி புன்னியாமீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக