புதன், 28 ஆகஸ்ட், 2019

தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29.


தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29.

தயான் சந்த் (29, ஆகஸ்ட், 1905 - 3, டிசம்பர், 1973)  பிறந்த நாள். இதைத்தான் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம்.. அந்த அளவுக்கு தயான் சந்த் செய்த சாதனை என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில், உலகில் ஒரு காலத்தில் இந்தியா கொடி கட்டி பறந்தது. அதற்கு துவக்கத்தை கொடுத்தவர் தயான் சந்த். 1928 ஆம்ஸ்டர் டாம் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்றது. அப்போது, கப்பல் மூலம் சென்ற அணிக்கு வாழ்த்து கூறி வழியனுப்பியர்கள், 5 பேர். அதே அணி, நாடு திரும்பியபோது, மும்பை துறைமுகத்தில் நிற்பதற்கு கூட இடமில்லை. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற இந்திய அணியின் சூப்பர் ஹீரோவாக இருந்தவர் தயான் சந்த். அந்த ஒலிம்பிக்கில், 5 ஆட்டங்களில், 14 கோல்களை அடித்தார் தயான் சந்த். இந்தியா தங்கம் வென்றவுடன், ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் வந்த செய்தியின் தலைப்பு இது ஹாக்கியே இல்லை. ஏதோ மாயஜாலம் நடந்தது. அதை நடத்திய மந்திரவாதி தயான் சந்த்' இந்த ஒன்றே போதும், தயான் சந்தின் பெருமையை கூறுவதற்கு,

இந்தியாவுக்கு, 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்தவர் தயான் சந்த். 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்த அவருடைய உண்மையான பெயர் தயான் சிங். இரவில் அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டார். அப்போதெல்லாம், தற்போதுள்ள அளவுக்கு மின்விளக்கு வசதிகள் கொண்ட மைதானம் கிடையாது. நிலவின் வெளிச்சத்தில் பயிற்சி மேற்கொண்டதால், அதை குறிக்கும் வகையில், சந்த் (நிலவை இந்தியில் சந்த் என்றழைப்பர்) தயானுடன் சந்த் சேர்ந்தது. அதுவே அவருடைய பெயராகவும் மாறியது.

ஹாக்கி போட்டிகளில், 200க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். ராணுவம் மற்றும் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், பயிற்சியாளராக தனது சேவையை தொடர்ந்தார். அவரிடம் பந்து சென்றுவிட்டால், அது கண்டிப்பாக கோலாகிவிடும் என்று, மற்ற வீரர்கள் நம்பிக்கையுடன் திரும்பி விடுவார்கள். மைதானத்தில் தயான் சந்தின் வேகத்தை குறிக்கும் வகையில், ஆஸ்திரியாவின் வியன்னாவில் அவருடைய சிலையை வைத்துள்ளனர். அதில் நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டையுடன் தயான் சந்த் இருப்பார்.

பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள தயான் சந்த் நினைவாக, 2012 முதல், அவருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம். விளையாட்டு துறையில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக