ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உத‌ய‌ நாள் ஏப்ர‌ல் 13

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
பிறப்பு வளர்ப்பு குடும்பம்
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
எழுத்தாற்றல்
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
கம்யூனிஸ ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி

சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதிஎழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்னபண்ணிக் கிழிச்சீங்க?

இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.
பட்டுக்கோட்டையில் ஒரு பாட்டுக்கோட்டை

சாதனை படைத்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தஞ்சை மாவட்டம பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 13.4.1930இல் பிறந்தார். தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4வதாகப் பிறந்தவர் கல்யாணசுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம்.
உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்யாணசுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை.
அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார்.
தந்தை அருணாசல கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். தந்தையைப் போலவே கணபதி சுந்தரமும் கவிதை பாடுவதில் வல்லவர். சிறந்த ஓவியராகவும் விளங்கினார். அத்தகைய அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாணசுந்தரத்திடம் கவிதை புனையும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துவிட்டது.
இளம் வயதிலேயே, பாடல்களைப் பாடுவதில் கல்யாணசுந்தரம் ஆர்வமாக இருந்தார்.
நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பிறகு பார்த்துவிட்டு வந்தவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டிருப்பது கல்யாணசுந்தரத்தின் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும் கம்யூனிசக் கொள்கைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார்.
நல்லதைச் சொன்னா நாத்திகனா?
இதுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முதல் பாடலாகும். இதை எழுதி அண்ணன் கணபதி சுந்தரத்திடம் காட்டி அவரது பாராட்டை பெற்றார்.
சினிமா சிந்தனை மேலோங்க கல்யாணசுந்தரம் கிளம்பி சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி.எஸ்.துரைராஜ் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நாங்கள் எல்லாம் நாடகத்தில் நடித்துவிட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். நீயும் முதலில் நாடகம் முடித்து விட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதான் சிறந்தது என்று டி.எஸ்.துரைராஜ் ஆலோசனை கூறியதோடு சிபாரிசு கடிதம் கொடுத்து சக்தி நாடக சபாவுக்கு அனுப்பி வைத்தார்.
முதலில் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு தரவில்லை. நாடக சபாவுக்கான ஆயத்த வேலைகளையே செய்து வந்தார். பின்னர் அவரது குட்டிக்கதைகளையும், பாடல் திறமையையும் அறிந்ததால், நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். என் தங்கை, கவியின் கனவு ஆகிய நாடகங்களில் நடித்தார்.
கவியின் கனவு நாடகத்தில் முக்கியமான ராஜகுரு வேடமேற்று நடத்து வந்த எம்.என்.நம்பியார் சபாவில் இருந்து விலகி விட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது. அப்போது ஏ.கே.சுந்தரம் என்றே அழைக்கப்பட்டார்.
1954ஆம் ஆண்டில் டி.கே.பாலசந்திரன் தயாரித்த கண்ணின் மணிகள் என்ற நாடகத்தில் கல்யாணசுந்தரம் போலீஸ்காரர் வேடமேற்று நடித்தார்.
அந்த நாடகத்தில் அவர் எழுதிய, தேனாறு பாயுது. செங்கதிரும் சாயுது ஆனால் மக்கள் வயிறு காயுது என்ற பாடல் பிரபலமானது.

இந்த பாட்டுத்தான் பின்னர் சில புதிய கருத்துக்களோடு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு சினிமாப் படத்திலும் இடம் பெற்றது.
பிறகு புதுச்சேரி சென்று தனது மானசீக குருவான பாரதிதாசனை சந்தித்தார். ஏற்கெனவே அறிமுகம் ஆகி இருந்த கல்யாணசுந்தரத்தை அவர் தன்னுடன் தங்கி இருந்து குயில் ஏட்டை வெளியிடும் பணியில் ஈடுபடுமாறு கூறினார். அதன்படியே பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
அந்த சமயத்தில் பாரதிதாசன் எழுதும் கவிதைகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையை கூர்மைப்படுத்தியது எனலாம்.
பாரதிதாசனிடம் மாணவராக இருந்து கவிதை இலக்கணங்களை கற்றுக் கொண்டார். பல நல்ல கவிதைகளை எழுதி பாராட்டும் பெற்றார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுதுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் மாடர்ன் தியேட்டர் சாருடன், பாரதிதாசனுக்கு கருத்து ஏற்பட்டு திரும்பினார். உடனே அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டார். ஆனால் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தை தட்டிக் கொடுத்து நீ முன்னேற வேண்டியவன், பொறுத்துக் கொண்டு இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு போனார்.
குருவின் கட்டளையை ஏற்று கல்யாணசுந்தரம் சேலத்திலேயே தங்கி இருந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா படங்களுக்கு பாடல் எழுதினார்.
இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட உலக பிரவேசத்துக்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில் பாரதிதாசன் துணை என்று எழுதும் வழக்கத்தை கையாண்டார். சில பாடல் எழுதும்போது வாழ்க பாரதிதாசன் என்றும் எழுதி இருக்கிறார்.
1950ஆம் ஆண்டுவாக்கில் சினிமாவுக்கு பாட்டெழுதுவதில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அந்தக் காலகட்டத்திலேயே கல்யாணசுந்தரமும் நுழைந்தார்.
1954இல் கல்யாணசுந்தரம் படித்த பெண் என்ற படத்துக்குத்தான் முதன் முதலாக 2 பாடல்கள் எழுதினார். ஆனால் அந்தப் படம் வெளிவர தாமதமானது.
இதனால் அவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் மகேஸ்வரி என்பதாகும். இந்தப்படம் 13.11.1955இல் வெளிவந்தது. அதற்கு அடுத்து 20.4.1956இல் படித்த பெண் வெளிவந்தது.
மகேஸ்வரி படத்தில் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்: அறம் காத்த தேவியே, குலம் காத்த தேவியே! _ நல் அறிவின் உருவமான சோதியே கண் பார்த்து அருள்வாயே அன்னையே! அன்னையே! என்பதாகும்.
1956ஆம் ஆண்டில் வெளிவந்த பாசவலை, ரங்கோன் ராதா, மர்மவீரன் போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார்.
பின்னர் 1957, 1958ஆம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெறத் தொடங்கின.
அந்த காலத்தில் திரை உலகில் நுழைவது என்பது எளிதான காரியமில்லை. அதற்கு கல்யாணசுந்தரம் விதிவிலக்கல்ல. பல சோதனைகளை அனுபவித்து இருக்கிறார்.
சென்னைக்கு வந்து அவர் குடியேறியது ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் இருந்த 1-0ஆம் நெம்பர் வீட்டில். அங்கு ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார். அது சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே. தேவரும் தங்கி இருந்தனர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆரம்ப காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராக இருந்து வந்திருக்கிறார்.
சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். அதற்குரிய பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றார். பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வேண்ணா வந்து பாருங்கோ என்று பதில் வந்தது. ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தார். நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும் என்று சொல்லிவிட்டு அந்த பட அதிபர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
உடனே கல்யாணசுந்தரம் தனது சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து ஏதோ சில வரிகள் எழுதி அதை மேஜை மீது வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார். கொஞ்ச நேரத்தில் படக் கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார்.
கல்யாணசுந்தரம் அப்படி என்னதான் எழுதி வைத்தார்? இதோ இதுதான்: தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன், நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன், நீ யார் என்னை நில் என்று சொல்ல?
இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.
மாடர்ன் தியேட்டர்சுக்கு அவர் பாடல் எழுதிக் கொண்டிருந்தபோதும் ஒரு சம்பவம் நடந்தது. அதிபர் டி.ஆர்.சுந்தரம் பாடலை திருப்பி அனுப்பி விட்டார். உடனே கல்யாணசுந்தரத்தை நண்பர்கள் சமாதானப்படுத்தி சுந்தரத்தின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே நாற்காலியில் அமர்ந்தபடி சுந்தரம் பேசினார். அவருக்கு எதிரில் நாற்காலி எதுவும் போடப்படவில்லை. அதுதான் அங்கு வழக்கம். இதனால் கல்யாணசுந்தரமும் அவருடன் சென்ற 2 நண்பர்களும் நின்று கொண்டே இருந்தனர். திடீரென்று கல்யாணசுந்தரம் ஒரு பேப்பர் கேட்டு வாங்கினார். அதில் ஒரு வரி எழுதி சுந்தரத்திடம் நீட்டினார்.
அவரும் அதை பார்த்தார். முகம் மாறியது. சற்று நேரத்தில் 3 நாற்காலிகள் வந்தன. 3 பேரும் உட்கார முடிந்தது.
மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும் இது தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிக் கொடுத்தது.
கல்யாணசுந்தரத்துக்கு வெற்றிமேல் வெற்றி குவியத் தொடங்கியது.
1956க்கு பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களோடு பல படங்கள் வெளிவர தொடங்கின. குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் தத்துவப் பாடல்கள் இடம் பெற்றன. அவை அவரை புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்றன.
இயக்குனர் கே.சுப்பிரமணியம், கல்யாணசுந்தரத்தை எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ், ஜானகி, ஆர்.எம்.வீரப்பனுக்கு அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் முதல் சொந்தப்படமான நாடோடி மன்னன் படத்துக்கு கல்யாணசுந்தரம் பல பாடல்களை எழுதினார். அதில் தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. கல்யாணசுந்தரம் புகழின் சிகரத்தை அடைந்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த அரசிளங்குமரி, கலைஅரசி, சக்கரவர்த்தி திருமகள், மகாதேவி, விக்கிரமாதித்தன், திருடாதே போன்ற படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த மக்களை பெற்ற மகராசி, அம்பிகாபதி, இரும்புத்திரை, உத்தமபுத்திரன், பதிபக்தி, தங்கப்பதுமை, பாகப்பிரிவினை, புனர்ஜென்மம் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.
டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாணபரிசு படத்துக்கு எழுதிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆற்றலை கவிஞர் கண்ணதாசன் புகழ்ந்து பாராட்டியுள்ளார். ஒரு கட்டுரையில் அதுபற்றி கண்ணதாசன் கூறியிருப்பதாவது:-
திரை உலகில் பாட்டு எழுதுவோர் வரலாம். போகலாம். ஆனால் ஒரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இனி வரமாட்டான். ஆரம்பமானான் ஒரு பெண்ணுக்குள்ளே, அவன் ஆடி அடங்கினான் மண்ணுக்குள்ளே! திரையுலகில் அவனே தத்துவ ஞானி. ஆழ்ந்த சிந்தனை அழுத்தமான சொல்லாட்சி. ஒரு வரிக்கு ஒரு வரி உயிர் கொடுக்கும் தன்மை. அவன் எழுதிய பாடல் எல்லாம் அப்படி அமைந்ததாகும்.
இவ்வாறு கண்ணதாசன் கூறி இருக்கிறார்.
புகழின் உச்சியில் இருந்தபோது 1959ஆம் ஆண்டு மத்தியில் கல்யாணசுந்தரத்துக்கு மூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. பிறகு அவர் வீடு திரும்பினார்.
மறுபடியும் மூக்கில் தொந்தரவு ஏற்படவே அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். யாரும் எதிர்பாராத வகையில் அவர் 8.10.1959 அன்று மரணம் அடைந்தார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தபோது அவருக்கு 29 வயதுதான். மனைவி பெயர் கவுரவாம்பாள். ஒரே மகன் குமாரவேல் 5 மாத கைக்குழந்தை.
சென்னை ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில் உள்ள எண் 15 வீட்டில் குடியிருந்து வந்தனர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, டைரக்டர்கள் பீம்சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
1981ஆம் ஆண்டு, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு (மறைவுக்குப்பின்) வழங்கப்படுவதாக, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். விருது வழங்கும் விழாவுக்கு, கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவாம்பாள் வந்திருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்.1995ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக, கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவாம்பாளுக்கு ரூ. 5 லட்சமும், மகன் குமாரவேலுக்கு ரூ. 5 லட்சமும் 3.11.1995இல் ஜெயலலிதா வழங்கினார். (குமாரவேலு தமிழக அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுகிறார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவை போற்றும் வகையில், பட்டுக்கோட்டையில் மணி மண்டபம் ஒன்றை அரசு அமைத்துள்ளது.
- ‘தினத்தந்தி’ வரலாற்றுச் சுவடுகளிலிருந்து...
பட்டுக்கோட்டையார் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்:
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்எண் திரைப்படம் வெளியான நாள்
1. படித்த பெண் - 20.4.1956
2. மஹேஸ்வரி - 13.11.1955
3. மர்மவீரன் - 3.8.1956
4. குலதெய்வம் - 25.9.1956
5. பாசவலை - 1.11.1956
6. ரங்கோன் ராதா - 1.11.1956
7. சக்கரவர்த்தித் திருமகள் - 18.11,1957
8. மக்களைப் பெற்ற மகராசி - 22.2.1957
9. அலாவுதீனும் அற்புத விளக்கும் - 29.31957
10. கற்புக்கரசி - 14.6.1957
11. சௌபாக்கியவதி - 22.10.1957
12. ஆரவல்லி - 22.10.1957
13. அம்பிகாபதி - 1957
14. மகாதேவி - 22.11.1957
15. புதையல் - 1957
16. கன்னியின் சபதம் - 10.1.1958
17. உத்தமபுத்திரன் - 7.2.1958
18. பிள்ளைக் கனியமுது - 30.5.1958
19. பெற்ற மகனை விற்ற அன்னை - 30.5.1958
20. தேடிவந்த செல்வம் - 16.7.1958
21. திருமணம் - 18.7.1958
22. நாடோடி மன்னன் - 22.8.1958
23. நான் வளர்த்த தங்கை - 10.11.1958
24. அன்பு எங்கே? - 12.12.1958
25. பதிபக்தி - 1958
26. தங்கப்பதுமை - 10.1.1959
27. பாண்டித் தேவன் - 7.3.1959
28. நல்ல தீர்ப்பு - 9.4.1959
29. கல்யாணப் பரிசு - 9.4.1959
30. கல்யாணிக்குக் கல்யாணம் - 23.4.1959
31. புதுமைப் பெண் - 26.6.1959
32. வாழவைத்த தெய்வம் - 28.8.1959
33. உலகம் சிரிக்கிறது - 2.10.1959
34. அவள் யார்? - 30.10.1959
35. பாகப்பிரிவினை - 31.10.1959
36. கண் திறந்தது - 31.10.1959
37. அமுதவல்லி - 27.11.1959
38. தலை கொடுத்தான் தம்பி - 1959
39. பொன் விளையும் பூமி - 1959
40. கலைவாணன் - 1959
41. இரும்புத்திரை - 14.1.1960
42. ரத்தினபுரி இளவரசி - 13.4.1960
43. மஹாலட்சுமி - 22.4.1960
44. சங்கிலித் தேவன் - 27.5.1960
45. எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1.7.1960
46. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - 15.7.1960
47. ஆளுக்கொரு வீடு - 16.9.1960
48. பாதை தெரியுது பார் - 18.11.1960
49. வீரக்கனல் - 2.12.1960
50. அரசிளங்குமரி - 1.1.1961
51. புனர்ஜென்மம் - 21.1.1961
52. திருடாதே - 23.3.1961
53. குமாரராஜா - 21.4.1961
54. விக்கிரமாதித்தன் - 27.10.1962
55. எதையும் தாங்கும் இதயம் - 1962
56. கலையரசி - 19.4.1963
57. மகனே கேள் - 19.11.1965

திங்கள், 5 ஏப்ரல், 2010

உலக சுகாதார நாள் 7 ஏப்ரல் ...


உலக சுகாதார நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஓர் முக்கியமான உலக சுகாதார அமைப்பின் முக்கியமான சுகாதாரம் சம்பந்தமான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.