ஞாயிறு, 31 ஜனவரி, 2010

உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2

உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2
உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
பிரத்யேக குணங்கள் கொண்ட புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சில வகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன.
சதுப்பு நிலங்களில் காணப்படும் ரீடு எனப்படும் பிரத்யேக புல் செடிகள் வெள்ள நீரைத் தடுத்து அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகள் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது கரையோரப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கின்றன. மேலும், அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாத்து மறுசுழற்சி செய்வதில் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு அடிப்படை அம்சமாகியுள்ளது.
இந்தியாவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் 23,444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3,959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு 6,750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்திக் காடுகளாக உள்ளன.
ஆசிய சதுப்பு நில இயக்ககத்தின் அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் உள்ள நிலத்தில் 18.4 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. 70 சதவீத சதுப்பு நிலங்கள் நெல் சாகுபடி உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியைக் காரணம்காட்டி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே சதுப்பு நிலங்கள் குறைய முக்கியக் காரணமாக உள்ளது.
கேரளத்தில் அஸ்தமுடி, சாஸ்தம் கோட்டா, வெம்பானாடு உள்ளிட்ட சில சதுப்பு நிலங்கள் கடலோரப் பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறப்படுகின்றன.
19 இடங்களில் சதுப்பு நிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மொத்த சதுப்பு நிலங்களில் 50 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஆண்டுக்கு 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வீதம் குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்துவரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்கள் பாழாகி வருகின்றன.
இதனால், வீணாகக் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு அதிகரிக்கும், நிலத்தடி நீரின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும்போது சதுப்பு நிலங்கள் இல்லாத பகுதிகளில் கடலில் இருந்த உவர்நீர் ஊடுருவல் ஏற்படும். இது தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும், கோடைக்காலங்களில் வறட்சி மற்றும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, பாழாகிவரும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுவே ராம்சார் பிரகடனம் எனப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் தொடர் நடவடிக்கையாக இந்தியாவில் வெம்பாடு, சில்கா ஏரி உள்பட உலகம் முழுவதும் இருந்து 1,235 சதுப்பு நிலங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் அரியவகை பறவைகளை பாதுகாப்பதற்கான இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் ஆந்திரத்தின் ஒரு பகுதியில் பரந்து விரிந்திருக்கும் பழவேற்காடு ஏரியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் நாளில் கூடி சதுப்பு நிலங்கள் குறித்து பேசிவிட்டு சென்றுவிடாமல், சதுப்பு நிலங்களை சார்ந்து அதன் அருகில் வசிக்கும் மக்களிடம் அவற்றின் பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து விளக்கங்கள் அளித்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் சதுப்பு நிலங்களை பார்க்க முடியும்.
 
சதுப்பு நிலங்களைப் பாதுகாப்போம்!

1 கருத்து: