செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

இசைஞனி உதய‌ நாள் ஜுன் 2..


இளையராஜா ( Ilaiyaraajaa ) (பி. ஜூன் 2, 1943) என்ற பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்பிற்கும் பெயர் பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம்.

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகிய ரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே ஹார்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் கிராமிய மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.

இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.


* திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்

இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கர்னாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.

"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.

"Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.

"India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.

1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.

"ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

"இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

"மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.


 சாதனைகள்

இளையராஜா, இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எழுநூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை கோர்த்துள்ளார்.

ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா. (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதினையும், 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருதினையும், இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.

இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :

1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)

1987இல் - சிந்து பைரவி (தமிழ்)

1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)

*இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :

சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)

வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)

வழித்துணை

துளி கடல்

ஞான கங்கா

பால் நிலாப்பாதை

உண்மைக்குத் திரை ஏது?

யாருக்கு யார் எழுதுவது?

என் நரம்பு வீணை

நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)

பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்

இளையராஜாவின் சிந்தனைகள் .
 
நன்றி -‍‍விக்கிப்பீடியா..

1 கருத்து: