திங்கள், 14 செப்டம்பர், 2009

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்... 



ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.


அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.


புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.


ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.


சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.


மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.


ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.


ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?


ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக