செவ்வாய், 10 ஜனவரி, 2017

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் ஜனவரி 12 .


சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் ஜனவரி 12 .

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

    வாழ்க்கை
பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

சகோதர சகோதரிகள்

    சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார்.

இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

குரல் வளம்

தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார்.
மேலைநாடுகளில்
Search Wikisource     விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.

கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் கருத்துக்கள்

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.
தமிழர் பற்றி விவேகானந்தர்

    சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.


விவேகானந்தரின் பொன்மொழிகள்

        உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

        கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்[6].

        உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

        செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

        வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

        உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

        சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

        எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

        நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!

        இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

        இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

        வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

        சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.

        என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
    நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

அவரது கவிதைகள்

கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.

எடுத்துக்காட்டாக..

அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
                                   --விவேகானந்தர்

நூல்கள்

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் 11 பகுதிகளாக வெளியிடப்பட்டன.

தமிழ்நாட்டில் விவேகானந்தர் நினைவிடங்கள்

விவேகானந்தர் நினைவு மண்டபம்

    விவேகானந்தர் பாறை
    விவேகானந்தர் நினைவு மண்டபம்
    விவேகானந்த கேந்திரம்
    விவேகானந்தர் இல்லம்


விவேகானந்தர் பொன்மொழிகள் 25.

1. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

2. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

3. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.


4. எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

5. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

6. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

7. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

8. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

9. பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.


10. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.



11. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

13. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


14. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

15. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.




16. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

17. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

18. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


19. வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

20.இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

21. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

22 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

23. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

24. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

25. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.

*******************************************************************************

சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  தேசிய உணர்வைத் தூண்டியது.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து,  வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: ஜனவரி 12, 1863

பிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா

இறப்பு: ஜூலை 4, 1902

தொழில்: தத்துவவாதி, துறவி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.

குழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும்

ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.

உயர்கல்வியும், ஆன்மீக ஈடுபாடும்

சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும்  கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.

இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.

 ராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று

எதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.

இந்தியாவில் அவரது பயணம்

 1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.

 சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.

 மேலைநாடுகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகள்

 1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.

 ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்

 மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900  வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

 இறப்பு

மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

 காலவரிசை

1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.

1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.

1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.

1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.

1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.

1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.

1897: இந்தியா திரும்பினார்

1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.

1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக