திங்கள், 8 அக்டோபர், 2018

உலக அஞ்சல் தினம் (World Post Day ) அக்டோபர் 9


உலக அஞ்சல் தினம் (World Post Day )
அக்டோபர் 9 

உலக அஞ்சல் தினம் (World Post Day )
அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது.
அக்டோபர் 9 , 1874 இல்
சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில்
சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
உலக அஞ்சல் தினப் பிரகடனம்.

உலக அஞ்சல் தினப் பிரகடனம்

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லைகளையும், தடைகளையும் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும், மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும், பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது, அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற் திறமையுடனும், நேர்மையுடனும், பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும், பொருட்களையும், உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும், இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவோம்.

உலகில் முதலிடம்
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது,
இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.


உலக தபால் தினம் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலில் 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தபால்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பான தொன்றாகும். இது மனித வாழ்வின் அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது நம் தபால் துறை தான். ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன!
உலகின் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்ப்பட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாறு சான்று கூறுகின்றது. உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்றும் தபால் முறை அவசியமாகின்றது.
ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville) மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தால் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும்.
இன்றளவும் நம் உலகம் அறிவியல் ரீதியாக வளர்ந்து தான் வருகின்றது. அவ்வாறிருக்கு இந்திய தபால் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அதில் ஒன்று தான் ‘My Stamp’ (மை ஸ்டாம்ப்). இது என்னவென்றால் நம் புகைப்படங்களையே நாம் அஞ்சல் தலைகளாக பெறும் முறை ஆகும். இதற்கு ஆகும் செலவு ரூ.300. இதனை முறையாக தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு பணிரெண்டு தபால் தலைகளைத் பெறலாம். இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும். நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக பார்க்கும் இந்த நடைமுறை மகிழ்ச்சிக்குரியதாகும். இதை நாம் ஒரு பரிசாகவும் பிறகுக்கு அளிக்கலாம்.
தபால் துறையில் எத்தனையோ நலத்திட்டங்கள் உள்ளன. தபால் துறையில் மக்களின் பயன்பாடு குறைந்து கொண்டே வரும் இவ்வேளையில், அத்துறையையும் நாம் பயன்படுத்தி மகிழ்வதோடு மட்டுமல்லாமல், மக்களாகிய நாம் தபால் துறையைப்பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோமாக!
ஏ.உதயகுமாரி

அ றிவியலின் வளர்ச்சியால் உலகில் நாள்தோறும் எண்ணற்ற மாற்றங்கள். இன்டர்நெட், இமெயில், ஃபேக்ஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இன்றைய அறிவியல் உலகம் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே அனைத்துச் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், ஆடியோக்களும் பரிமாறப்படுகின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதி எதுவும் இல்லை. முதலில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஓலை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, காகிதத்தின் வரவால் தபால் உபயோகப்படுத்தப்பட்டது. அத்தகைய தபால் தினம் இன்று.
அறிவியல் தொழில்நுட்பத்தால் இன்றைய தலைமுறையினர் தபால் எழுதுவதையே முற்றிலும் குறைத்துவிட்டனர். இதனால் அவர்களிடம் சுயமாகக் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போது அலுவலக தொடர்பான கடிதங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியைத் தபால் துறையே செய்துவருகிறது.
உலக தபால் அமைப்பானது, 1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவும் அங்கத்தினராக உள்ளது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் 1764-ம் ஆண்டு தபால் துறை தொடங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற காலத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்தியாவில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. இதில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கணினி மையமாக்கப்பட்டு உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை விளங்கிவருகிறது. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில், அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தபால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டு எண்களைக்கொண்டு ஒவ்வோர் ஊர்களுக்கும் தபால்கள் அனுப்பப்பட்டு உரியோரிடம் சேர்க்கப்படுகிறது. பதிவுத் தபால், விரைவுத் தபால், இ-போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் தவிர, ஸ்டாம்ப் விற்பனை, சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றையும் தபால் துறை செய்துவருகிறது. தற்போது 24 மணி நேரமும் செயல்படும் தபால் நிலைய ஏ.டி.எம் மிஷின்களும் உள்ளன. தந்திப் பிரிவு செயல்பாட்டில் இருந்தபோது அது, தபால் துறையிடம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இளையத் தலைமுறையினர், தபால் மூலமும் செய்திகளை அனுப்பலாமே?
- ஜெ.பிரகாஷ்


அஞ்சல் துறை பரிசளித்த கடித இலக்கியம்!
சா ர்.. போஸ்ட்...
இந்தக் குரலுக்காவே காத்திருந்தவர்கள்போல வீட்டிற்குள் இருந்து சிறுவர்கள் முண்டியடித்து ஓடி வருவார்கள். யார் கடிதத்தை வாங்குவது என்று பெரும் சண்டையே நடக்கும். தபால்காரர் சிறிது நேரம் இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துவிட்டு, 'சண்டை போடக்கூடாது, இன்னைக்கு நீ வாங்கிக்க.. அடுத்த முறை அவன் வாங்கிக்கலாம்' என்றுகூறி கடிதத்தை கொடுத்துச்செல்வார்.
இந்தக் காட்சியை சமீபத்தில் எங்கேயாவது பார்த்திருந்தால் மறைந்து வரும் அரியக் காட்சியைப் பார்த்த பாக்கியசாலிதான் நீங்கள். 1712 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் அஞ்சல் சேவை முதன்முதலில் தொடங்கியது. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக் காலத்தில் 1764-66 காலக்கட்டத்தில் பெருநகரங்களிடையே அஞ்சல் சேவை தன் பயணத்தை ஆரம்பித்தது. ஆனால் 1900ஆம் ஆண்டை ஒட்டி சற்றுமுன்னும் பின்னும்தான் இந்திய மக்களின் கடிதப் பரிவர்த்தம் பரவலானது.
இன்றைய தினம் உலக அஞ்சல் தினம். அஞ்சல் சேவையால் விளைந்த அற்புதமான வடிவம்தான் கடித இலக்கியம். இலக்கியச் செய்திகளை பரிமாறிக் கொள்வதை குறிப்பது மட்டுமே அல்ல. சில கடிதங்களின் தன்மையே இலக்கியமாகி விடுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தி எழுதிய கடிதங்களை அரசியல் தொடர்பான உரையாடலாக மாற்றியிருப்பார்.
1918 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் தனது மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடித்தத்தை 'என் அருமை காதலி செல்லமாளுக்கு... எனத் தொடங்குவார். மேலும் தன்னைப் பற்றி கவலை கொள்ளும் நேரத்தில் தமிழை நன்கு படித்தால் மகிழ்ச்சியடைவேன் என்று நெகிழ்ச்சியோடு முடித்திருப்பார். அதே ஆண்டில் நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தனது படைப்புகளை டெபுடி இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரின் ஆட்சேபனை இல்லாமல் இருந்தால் மட்டுமே பிரசுரம் செய்ய முடியும் என்ற சூழலில் பாரதியார் இருந்ததையும் தெரிவிக்கிறது.
காந்தியடிகள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய தலைமை உரையை கடித வடிவில் நிகழ்த்தினார். தமிழறிஞர் மு.வ. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு என்று நான்கு கடித நூல்களை எழுதியுள்ளார். இவரின் கடிதங்களில் மிக செறிவான தமிழ் நடையை காணலாம். அறிஞர் அண்ணாவின் தம்பிக்கு எழுதிய கடிதங்கள் மிகப் பிரபலாமனவை. அண்ணாவின் கடிதங்கள் பலருக்கு அரசியல் உணர்வை ஊட்டியவையாகவும் அமைந்திருந்தன.
எழுத்தாளர் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் பல இடங்களில் குறிப்பிடப்படுவன. தன் மனைவியை பிரிந்த நிலையில் தன் அன்பை கடிதங்கள் வழியே பகிர்ந்துகொண்டிருப்பதையும், காந்தியடிகள் கொல்லப்பட்டதை உருக்கமாக எழுதியிருப்பதையும் காணமுடியும். இது எல்லாவற்றையும் விட, அவரின் துன்பமான சூழலிலும் மனைவிக்கு தனது கடிதங்களால் நம்பிக்கை ஊட்டுவதையும் காணமுடியும்.
வல்லிகண்ணன் - தி.க.சி. இந்த இருவரின் கடிதங்கள் வராத இலக்கியவாதி தமிழில் அநேகமாக இருக்க முடியாது. அந்தளவு புதிதாக எந்த படைப்பு வந்தாலும் அதில் இருக்கும் நிறைகளைப் பாராட்டி, குறைகளை கவனமாக அந்தப் படைப்பாளர் திருத்திக் கொள்ளும் விதமாய் பக்குவமாய் குறிப்பிடுவார்கள். கடிதங்களில் மட்டுமல்லாமல் தாங்கள் பங்கேற்கும் விழாக்களில் அவர்களைப் பற்றி குறிப்பிடுவதும் உண்டு. தி.க.சி. தான் தினமும் ஆறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதுவதாக குறிப்பிடுவார்.
எழுத்தாளர் வண்ணதாசன் கடிதங்கள் ரசனையானவை. தான் சந்திக்கும் எளிய மனிதர்கள் பற்றி அழகியல் பூர்வமாக தன் நண்பர்களுக்கு அவர் எழுதும் கடிதங்களை பலரும் ஆவலோடு எதிர்ப்பார்கலாம். வண்ணதாசன் கடிதங்கள் எனும் தலைப்பில் இவரின் கடிதங்கள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதைப் படிக்கும்போது, நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை இந்த கோணத்தில் பார்க்க முடியும் என்பதும், அதனை இத்தனை ரசனையோடு எழுத முடியுமா என்றும் ஆச்சரியத்தை தரும். எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்களின் தொகுப்பும் அன்புள்ள கி.ரா.க்கு எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் கணவரான மு.முருகேஷுக்கு எழுதிய கடிதங்கள் கனவிருந்த கூடு எனும் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் ஒரு பெண் தன் காதலனிடம் எதிர்ப்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்களை மிக நுணுக்கமாக பதிவு செய்திருப்பார். இன்னும் பலரும் தன் கருத்துகளை கடித வடிவில் வெளிப்படுத்தி வந்தவண்ணம் இருக்கின்றனர். இந்த வகையில் எழுத்தாளர் பாமரனின் பகிரங்க கடிதங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன.
இப்படி தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய பதிவுகளை தந்த கடித இலக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துபோய்க்கொண்டிருப்பதுதான் சோகம்.
-விஷ்ணுபுரம் சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக