திங்கள், 11 மே, 2020

உலக செவிலியர் தினம் மே 12 !


செவிலியர்கள் இன்னொரு 'தாய்'.. உலக செவிலியர் தினம் இன்று கொண்டாட்டம்

உலக செவிலியர் தினம் மே 12 !

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி.

ஒரு காலத்தில் செவிலியர் சேவை கவுரவமான, மரியாதைக்குரிய பணியாக கருதப்படவில்லை. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களே செவிலியர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதுமட்டுமல்ல, அந்தக் காலத்தில் உயர்ந்த செல்வ குடும்பங்களில் சமையல்காரிகளாகவும் கூட செவிலியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருந்தது. இந்த நிலைமையை மாற்றி செவிலியர்களுக்கென சமுதாயத்தில் மதிப்பை உருவாக்கியவர்தான் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.


நவீன தாதியல் முறை

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தன்னை செவிலியர் பணியில் ஈடுபடுத்தி கொண்டவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சி பள்ளியையும் தொடங்கியவர். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதி ஒன்றில் உயிரிழந்த ஏழையின் மரணமே இவரது பாதையை புரட்டி போட்டது. வறியவர்களுக்கென்று யாருமே உதவி புரிய இல்லையே? என்று மனம் நொந்து போனார். இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அதுமுதல் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அவரது அக்கறை நீண்டுகொண்டே சென்றது.

கை விளக்கேந்திய காரிகை

அதன் முத்தாய்ப்பாக அமைந்தது ஒரு சம்பவம். 1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் குத்துயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடந்தனர். அவர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. இறக்கும் தருவாயில் பலர் முனகலுடன் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு 38 செவிலியருடன் சென்றார் பிளாரன்ஸ். வசதி குறைவுகள் அங்கு காணப்பட்டாலும் தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை வழங்கினார். உயிரிருக்கு போராடிய முழு படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதி மற்றும் நிறைந்த அன்பிலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தங்களை காக்க 'விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை' என ராணுவ வீரர்கள் நைட்டிங்கேலை கவுரவித்தனர். அதனால்தான் அவர் "கைவிளக்கு ஏந்திய காரிகை" என்றும் அழைக்கப்பட்டார்.

உணர்வுபூர்வமான தருணம்

அவர் பிறந்த மே 12-ஆம் நாளே உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர்களுக்கென்றே தனி மரியாதையும், கண்ணியத்தையும் உருவாக்கி கொடுத்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். அவர் இல்லாவிட்டால் செவிலியர் துறை இந்த அளவுக்கு இவ்வளவு காலம் நீண்டு வளர்ந்திருக்காது. அதனால் அவரை நினைவுகூர்ந்து இன்றைய தினத்தில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் (Westminster Abbey) செவிலியர்கள் அந்த மாளிகையில் ஒன்று கூடுவர். அப்போது விளக்கு ஒன்று ஏற்றப்பட்டு அது செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். அதாவது ஒரு செவிலியரிடம் இருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதே இதன் அர்த்தம். இது ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணமாகும்.


செவிலியர்கள் - இன்னொரு தாய்
இதேபோல, தமிழகம் உட்பட உலகின் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், செவிலியர்கள் அனைவரும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி, சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் நோயாளிகளிடம் நடந்து கொள்வோம்; நோயாளிகளுக்கு மதிப்பளிப்பது, நோயாளிகளின் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள்தான் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் மறுக்க முடியாததுமான விஷயம் ஆகும். "செவிலியர்கள் - இன்னொரு தாய்"!! அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது!! மதிக்கத்தக்கது!! வணங்கத்தக்கது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக