திங்கள், 1 ஜூன், 2020

உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 02.



உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 02.

தேனீக்கள் தீண்டத் துடிக்கும் தனது தேகத்தை, வானவில்லுக்கே வண்ணம் தரும் தன்னுதடை, தன் தாய் தந்துபோன உயிர்நாடியை, சொந்தங்களோடு கழிக்க வேண்டிய அந்திப்பொழுதை, எவனோ ஒருவன் தரும் காசுக்காக விற்கிறாள் அவள். அவள் விற்பது உடலை மட்டுமல்ல. தனது ஆசைகளை, இன்பங்களை, சொந்தங்களை, காதலை. ஆனால் அவள் கற்பை விற்பதை மட்டும்தான் பார்க்கிறது இச்சமூகம். அதனால் தான் அவளுக்கு இந்தப் பெயரையும் வைத்துள்ளது – பாலியல் தொழிலாளி என்று. 

அவளின் மொத்த அங்கத்தையும் கூறு போட்டு அருந்தும் ஆணினம் அவளை மனித பிறப்பாய் பார்ப்பதில்லை போல. எத்தனை எத்தனை இன்னல்களை அவள் இங்கு சந்திக்க வேண்டியுள்ளது. அவளுக்கு எதிராக நடக்கும் தீண்டல்கள், பலாத்காரங்கள், கொலைகள், அவளை பூனையிடமிருந்து உயிரைக் காக்க ஓடும் எலியைப் போல் இன்று ஓடவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்வுலகில் அவளின் நலனைப் பற்றிக் கவலைப்படும் சில உயிர்களும் பிறந்துள்ளன.

அவளை வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற நினைக்கும், அவளுக்கு குரல் கொடுக்கவும், போராடவும் தயாராய் இருக்கும் ஒருசிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவளைப்பற்றி மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்நாள் – சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினம்.



ஆண் இனமும் விதிவிலக்கல்ல

2012-ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் படி, உலகம் முழுதும் சுமார் 4 கோடி பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அதில், அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் பேர் உள்ளனர். 75 சதவிகிதம் பாலியல் தொழிலாளர்களின் வயது 13-25. இதைக் கண்டு ஏளனம் செய்ய ஆண்களுக்கு ஒன்றுமேயில்லை. காரணம் சுமார் 80 லட்சம் ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் அனுமதியுடனேயே நடக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நமது நாட்டில் கூட பாலியல் தொழில் செய்வது குற்றம் என்று சட்டத்தில் இல்லை. உடலுறவுக்கு ஒருவரை அழைப்பதே குற்றம். அப்படியிருக்கையில் அதிகார வர்க்கம் முதற்கொண்டு பொதுஜனம் வரை இவர்களை இழிக்காதவர்களும் தாக்காதவர்களும் இல்லை. அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கு 29 டாக்சி டிரைவர்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல் மதுபானக் கடை பெண் ஊழியர்களில் ஒரு லட்சத்துக்கு 4 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால் பாலியல் தொழில் செய்பவர்களில் ஒரு லட்சத்துக்கு சுமார் 204 பேர் கொல்லப்படுகின்றனர். காரணம் அவர்களை பாதுகாக்கவும், குரல் கொடுக்கவும் யாரும் இல்லை என்பதே. 

இன்று நாம் டிராபிக் போலீசிடம் லஞ்சம் கொடுப்பதற்கும், பொறியியல் கல்லூரிகளில் லட்சங்களில் டொனேஷன் கொடுக்கவும் காரணங்கள் சரியானது என்று கருதுகிறோம். ஒவ்வொருவரின் செயலுக்கும் தவறுக்கும் காரணம் உண்டென்றில், அவர்கள் இந்நிலைக்குத் தள்ளப்படவும் காரணம் உண்டுதானே? அக்காரணம் அறிந்து கொள்ளவும், அதைப் புரிந்து கொள்ளவும் இங்கு யாரும் தயாராய் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.



பிச்சை எடுப்பவர்களுக்கும், கடன் வாங்குபவர்களுக்கும் மட்டுமல்ல இவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தை, கஷ்டப்படும் குடும்பம் என எல்லோமும் உண்டு. குடும்பப் பிரச்னைகளுக்காக எங்கெங்கோ திரிந்து யாரும் உதவாத நிலையில், இவர்கள் கண்களில் பணத்தைக் காட்டுவது ஏனோ காமத்தின் எதிர்ப்பார்ப்பில் திரியும் ஒரு கொடிய மிருகம்தான். உயிர்கொல்லி நோய்கள் தாக்கும் என்று தெரிந்திருந்தும் ஒருத்தி அதைச் செய்கிறாள் என்றால் அவள் நிச்சயம் எதிர்பார்ப்பது உடல் சுகம் அல்லவே. அவளுக்கான வாய்ப்பும் அன்பும் மறுக்கப்பட்டதால்தானே அவள் அந்த முள் பாதையை தேர்ந்தெடுக்கிறாள். உறவினர்களால் கைவிடப்பட,  பெண்ணுக்கான அடையாளங்கள் முழுமையடையாத நிலையிலும் கூட பல சிறுமிகள் இதற்கு முற்படுகிறார்கள். ஏன் இந்தக் கொடுமை. யார்தான் இவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பது? 



பெண்களே ஒதுக்காதீர்கள்

பாலியல் தொழில் செய்யும் பெண்களை மற்ற பெண்களே ஏளனமாய் நினைப்பதுதான் பெரும் கொடுமை. இவ்வுலகில் புலி, பூனை, மண்புழு என எந்தவொரு உயிரும் மனிதன் வாழ முக்கியம் என்கின்றனர் வல்லுனர்கள். அதில் எந்த உயிர் இல்லாவிட்டாலும் அதுவும் மனிதனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று பாலியல் தொழிலாளிகள் என்று ஒதுக்கப்படும் இவர்கள் இல்லை என்றால் குடிப்பழக்கத்திற்கும், போதைப்பழக்கத்திற்கும் ஆளான,  ஆண்களின் வக்கிர வடிகால் விபரீத விளைவுகளை அல்லவா உருவாக்கும்? 

கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களின் கொடூர தாக்குதலால் காயமடைந்து பலியான பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில். அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 17-ம் நாள் ‘பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதற்கென அமைப்புகள் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றன.

சிவப்புக் குடை சின்னம் பாலியல் தொழிலாளர்களின் வன்கொடுமைக்கு  எதிரான சின்னமாக கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் நிவாரண நிதிக்கு மும்பையைச் சார்ந்த பாலியல் தொழிலாளர்கள் இணைந்து 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எல்லா மனித உணர்வுகளும் காலாவதி ஆகாமல் உள்ளது. நாம் தான் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்க மறுக்கின்றோம். மனிதம் என்பது எல்லோரையும் ஏற்றுக் கொள்வதுதான்.

இனியாவது அவர்களிடத்திலும் கொஞ்சம் அன்பு செலுத்துவோம். அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுப்போம். அதற்கான உறுதியை இந்த உலக பாலியல் தொழிலாளர்கள் நாளில் மேற்கொள்வோம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக