புதன், 15 ஜூன், 2011

மலேசியா வாசுதேவன் உத‌ய‌ நாள் ஜூன் 15


மதுர‌ குர‌லோன் ம‌லேசியா வாசுதேவ‌ன் உத‌ய‌ நாள் ஜூன் 15 .
கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிறகு வேலை நிமித்தமாக மலேசியாவுக்குச் சென்ற சத்து நாயர்-அம்மாளு தம்பதியருக்கு 1944-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி 8-வது மகனாகப் பிறந்தார் பின்னாளில் மலேசியா வாசுதேவனாகப் புகழ்பெற்ற வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் பிரதானப் பாடகராக விளங்கிய மலேசியா வாசுதேவனுக்கு தமிழ் சினிமாவின் மீதும் நடிப்பின் மீதும் தீராத ஆர்வம்.

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து பல வாய்ப்புகளைத் தேடினார். ஆனால் ஆரம்ப காலத்தில் தமிழ்த் திரையுலகில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. 

இந்நிலையில் மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்' என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். அந்தப் படத்துக்குப் பிறகும் பெரிய வாய்ப்புகள் அமையாததால் மேடைக் கச்சேரிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இதற்காக தமிழகத்துக்கும் மலேசியாவுக்கும் அடிக்கடி பயணித்தார். இதுபற்றி தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியனின் மகனும் ஜெயஸ்ரீபிக்சர்ஸ் நிறுவனருமான எஸ்.வி.ரமணன் கூறுகையில்...
இளையராஜாவை எனக்கு அறிமுகப்படுத்தியதே மலேசியா வாசுதேவன்தான். எஸ்.பி.பி., கங்கை அமரன், இளையராஜா, பாரதிராஜா, நான் உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்களாக இருந்த காலகட்டம் அது.
மேடைக் கச்சேரிகளில் பங்கேற்றாலும் சினிமா வாய்ப்புக்காகவும் தீவிரமாகப் போராடினார். அவருடைய முயற்சியால் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்' என்ற படத்தில் "பாலு விக்கிற பத்தம்மா..." என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.
ஆனால் அதற்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே' படத்தில் கமல்ஹாசனுக்காக அவர் பாடிய "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். பாரதிராஜாவின் "ஒரு கைதியின் டைரி' படத்தில் அவருடைய வில்லன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்க்க, அதன் பிறகு நடிகராகவும் பரிமளிக்கத் தொடங்கினார். சன் டி.வி.யில் ஒளிபரப்பான "சிலந்தி வலை' உள்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
அவருடைய ஆன்மிக ஈடுபாடு அளப்பரியது. தொடர்ந்து பல ஆண்டுகளாக ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர். சாய்பாபாவின் தீவிரமான பக்தர்களில் ஒருவர். சிக்கலான காலகட்டத்திலும் யாரிடமும் கையேந்தாதவர்'' என்று தனது நண்பர் மலேசியா வாசுதேவன் பற்றி நினைவுகூர்ந்தார் எஸ்.வி. ரமணன்.
மலேசியா வாசுதேவன் குறித்து அவருடைய மிக நெருங்கிய நண்பரான இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரனிடம் பேசியபோது...
நானும் வாசுவும் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே நெருங்கிய நண்பர்கள். எங்களுடைய "பாவலர் பிரதர்ஸ்' குழுவின் முக்கியப் பாடகர். விளம்பரப்படுத்தாமல் பலருக்கும் பல உதவிகளைச் செய்தவர். இவ்வளவு ஏன்? என்னை முதன்முதலாக இசையமைப்பாளராக ஆக்கியதே அவர்தான்.
அவர் கதை, வசனம் எழுதி ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை' என்ற படத்தில்தான் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். எத்தனையோ படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் நான் ரெக்கார்டிங் தியேட்டரில் முதன்முதலாக ரெடி, டேக் சொன்னது வாசுவால்தான்.
என் இசையமைப்பில் முதலாவதாக வெளிவந்த படம் "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை'. அதன் பிறகு என்னுடைய எல்லா படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். "எங்க ஊரு ராசாத்தி' படத்தில் என் இசையில் அவர் பாடிய "பொன்மானத் தேடி நானும்...' என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட். "இமைகள்' படத்தில் சிவாஜிகணேசனுக்காக "மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ' என்ற பாடலைப் பாட வைத்தேன். அதே போல எம்.ஜி.ஆருக்காக எடுப்பதாக இருந்த ஒரு படத்தில் வாலியின் வரிகளில் ஒரு பாடலைப் பாட வைத்தார் அண்ணன் இளையராஜா.
எம்.ஜி.ஆருக்கு வாசுவின் குரல் மிகவும் பிடித்துவிட்டது. இவரை முன்பே என்னிடம் அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை .
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், எனக்கு அவரிடம் பிடித்தது அரிதாரம் பூசாத நல்ல மனிதன் என்பதுதான்'' என தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கங்கை அமரன்.

மலேசியா வாசுதேவனுடன் பல படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பேசியபோது...


ஈகோ இல்லாத மனிதர். சிறிய கச்சேரிகளில் பங்கேற்றால் கூட தான் ஒரு பிரபல பாடகர் என்ற கர்வமே இல்லாதவர். நேரத்தை மதிப்பவர். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். என்னுடைய இசையில் "ஆளானாலும் ஆளு இவ...', "நடைய மாத்து... மச்சான் என்னப் பார்த்து ஆடுறியே கூத்து...' என பல பாடல்களைப் பாடியிருந்தாலும் எனக்குப் பிடித்தது "கன்னிப் பருவத்திலே' படத்தில் அவர் பாடிய "பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்...' பாடல்தான். 
தன்னுடைய பெயரால் ஒரு நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் "மலேசியா' வாசுதேவன் என்றார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து யாருடைய பின்னணியும் இல்லாமல் தன்னுடைய திறமைகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஏராளமான தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் மலேசியா வாசுதேவன். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களோடு வில்லன், குணசித்திரம், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக, ரஜினிகாந்தின் ஆரம்ப கால படங்களில் அவருக்காக நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
மீண்டும் பூவுலகுக்கு திரும்ப முடியாமல் இறுதி மரியாதைக்குக் காத்திருக்கும் மலேசியா வாசுதேவன், "முதல் மரியாதை' படத்தில் பாடிய "பூங்காத்து திரும்புமா..' பாடல் காற்று உள்ள வரை ஒலித்துக்கொண்டு அவருடைய நினைவுகளை ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைக்கச் செய்திருக்கும் திரையுலகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் ரசிகர்களிடமும் மலேசியா வாசுதேவன் பெற்றுள்ள நல்ல மனிதன் என்ற நற்பெயரை வைத்துப் பார்க்கும்போது, ரஜினிக்காக "முரட்டுக்காளை' படத்தில் "பொதுவாக என் மனசு
தங்கம்...' எனப் பாடியது தன்னைக் குறிப்பிட்டுத்தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது...
நன்றி -தினமணி .
மலேசியா வாசுதேவன் டி.எம்.செüந்தர்ராஜன், சிஎஸ் ஜெயராமன் ஆகியோரின் குரலை வார்த்தெடுத்தது போல பாடுவதில் வல்லவர். எங்களுடைய மேடைக் கச்சேரிகள் பலவற்றில் மலேசியா வாசுதேவன் பாடிய "புதையல்' படத்தின் "அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்...'  "ரத்தக் கண்ணீர்' படத்தின் "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி' போன்ற பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம்.
எங்களுடைய விளம்பர நிறுவனத்துக்காக 1970-களில் 500-க்கும் மேற்பட்ட ரேடியோ "ஜிங்கிள்ஸ்'களைப் பாடியுள்ளார். பல விளம்பரங்களில் வித்தியாசமாகப் பேசி அசத்துவார். எங்கள் நிறுவனத்தின் 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். அப்போதே இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்' குழுவில் பல மேடைக் கச்சேரிகளிலும் பாடி வந்தார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக