ஞாயிறு, 28 ஜூலை, 2019

நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை


நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை.

நண்பர்கள் தினம்.இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் நண்பர்களின் கையில் பட்டை அணிவித்து வாழ்த்து அட்டைகளுடன் பரிசு பொருட்களை கொடுத்து நட்பை பரிமாறிக் கொள்வது ‘பிரண்ட்ஷிப் டே’ இலக்கணமாக இருக்கிறது.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பிள்ளைகள் போன்ற சொந்தங்களிடம் நாம் அன்பு காட்டுவது இயற்கை. ஆனால் எந்த உறவும் இல்லாமல் வரும் நட்புக்கும் நண்பர்களுக்கும் எல்லை இல்லை. தோள் கொடுப்பான் தோழன். நட்பு என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் நண்பன். வாழ்க்கையின் கடினமான நேரங்களில் ஆறுதலாகவும், ஊன்றுகோலாக இருப்பான் உண்மையான நண்பன். அந்த நட்பு உன்னதமானது. இன்றளவும் நட்புக்கு உதாரணமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம்.

உலகம் போற்றும் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பெரிய வரலாறு உண்டு. ஆனால், நண்பர்கள் தினத்துக்கு எந்த பின்னணியும் இல்லை. நண்பர்கள் தின கொண்டாட்டத்தை 1930ம் ஆண்டு Ôஹால்மார்க்Õ வாழ்த்து அட்டைகள் நிறுவனர் ஜோய்ஸ் ஹால் என்பவர் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

1935ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாட முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன்பிறகு, 1958ம் ஆண்டு பராகுவே நாட்டைச் சேர்ந்த ஆர்டிமியோ பிராக்கோ என்பவர் தனது நண்பர்களுக்கு அளித்த விருந்து ஒன்றில் உலக அளவில் நண்பர்கள் தினத்தை கொண்டாடும் முடிவை வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக இன்று பெரும்பாலான நாடுகளில் நண்பர்கள் தின கொண்டாட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் ஜூலை மாதத்தில் கொண்டாடுகிறார்கள். பராகுவே நாட்டில் ஜூலை 30, அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே நாடுகளில் ஜூலை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக நண்பர்கள் தினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை 1998ம் ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.. பெற்றோர், சகோதரர் போன்ற உறவுகள் அவரவர் விருப்பத்தில் வருவதல்ல. ஆனால், நட்பு என்பது அவரவர் முடிவு செய்யும் ஒன்று. எனவே, நண்பர்களை தேர்வு செய்வதில் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அந்த நட்பு நம்மை கடைசி காலம் வரை வழி நடத்துவதாக இருக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக