திங்கள், 30 ஆகஸ்ட், 2010

கிருஷ்ண ஜெய‌ந்தி

கிருஷ்ண ஜெய‌ந்தி
தர்மம் குலையும் வேளையில், அதைப் பாதுகாக்க, பகவான் மானிட அவதாரம் எடுத்து வருவார். அந்த வகையில், திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம். மதுராபுரியை ஆட்சி செய்தவர் உக்கிரசேனன். இவரது மகன் கம்சன். தம்பி தேவன். அமைச்சர் வசுதேவர். இவரது மூத்த மனைவி ரோகிணி, கோகுலத்தில் வசித்தாள். தேவனுக்கு தேவகி என்ற மகள் இருந்தாள். இவளை வசுதேவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர். இவரது நண்பர் நந்தகோபன் கோகுலத்தில் வசித்தார். இவரது மனைவி யசோதை.
தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி, பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என, அவருக்கு வாக்குறுதி அளித்தார் பிரம்மா. இதனிடையே, தேவகியின் எட்டாவது பிள்ளையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அறிந்த கம்சன், அவளைக் கொல்ல முயன்றான். வசுதேவர் இதைத்தடுத்து, தனக்கு பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி தேவகி, வசுதேவரைச் சிறையிலடைத்த கம்சன், அவர்களுக்குப் பிறந்த ஆறு பிள்ளைகளைக் கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!’ என்றார்.
அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே சொல்லி விட்டார்.
அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் பிள்ளை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!’ என்று சொல்லி மறைந்தது. பின்னர், கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.
கிருஷ்ண ஜெயந்தி என்றால், நெய்யில் செய்த பண்டங்கள், வெண்ணெய், சீடை என்றெல்லாம் செய்ய வேண்டுமே… அவரது பாதங்களை மாவரிசி கொண்டு தரையில் பதிக்க வேண்டுமே.. என்றெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை. கிருஷ்ணர் கருணாமூர்த்தி. ஒரு ஊரில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம் நடந்தது. சுவாமி பவனி வந்தார். மக்கள் பழம், தேங்காய், பண்டங்கள் என சுவாமிக்கு சமர்ப்பித்தனர். ஒரு பக்தரிடம் எதுவுமே இல்லை. ஆனாலும், திடமான மனது இருந்தது. அவர் வீட்டு வாசலுக்கு சுவாமி வந்தார். “பக்தனே… நீ எதுவுமே எனக்கு தரவில்லையா?’ என்றார். “கிருஷ்ணா… அவர்கள் கொடுத்த பூ, பழம், தேங்காய் எல்லாம் உன்னிடமே இருக்கிறது. உன்னிடத்தில் என்ன இல்லையோ அதைக் கொடுத்தால் தானே எனக்கு திருப்தி…’ என்றாராம் பக்தர்.“என்னிடத்தில் என்ன இல்லை என நீ நினைக்கிறாய்?’ என கிருஷ்ணர், பதிலுக்கு கேட்க, “கிருஷ்ணா… கோகுலத்து கோபிகள் உன் மனதைத் திருடிக் கொண்டனர். எனவே, இப்போது உன்னிடம் மனசு இல்லை; எனவே, என் மனதை உனக்குத் தருகிறேன்…’ என்றார். பகவான் உருகிப் போய் விட்டாராம். நெருப்பில் உருகும் நெய்ப்பண்டத்தை விட, உள்ளம் உருகிய பக்தியை, கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுப்போமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக