ஞாயிறு, 10 ஜூலை, 2016

கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் நினைவு நாள் ஜூலை 16,


கர்நாடக  இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் நினைவு நாள்   ஜூலை 16,
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (மார்ச் 28, 1919 - ஜூலை 16, 2009[1]) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்[. மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.

வாழ்க்கைக் குறிப்பு
அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி. அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார்[4]. அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி. கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள் 1939 ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பாரைத் திருமணம் செய்ய்துகொண்டார்.

இசைத் துறையில்
பட்டம்மாள் முறையாக கருநாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்[4].


பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் டி. கே. ஜெயராமனுடன், 1940களில்
1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்[4]. பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.

பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் ஜப்பான், சிங்கப்பூர், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய 'அகிகோ'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.

விருதுகள்
சங்கீத நாடக அகாடெமி விருது, 1962[5]
பத்ம பூசண், 1971
இசைப்பேரறிஞர் விருது, 1973
சங்கீத கலாசிகாமணி விருது, 1978, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி[6]
பத்ம விபூசண், 1998
தேசியகுயில்
சங்கீத கலாநிதி
கலைமாமணி விருது
காளிதாஸ் சம்மன் விருது.

பிரபல கர்னாடக இசைப் பாடகி

‘தேசியக் குயில்’ என போற்றப்பட்ட பிரபல கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள். அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் பக்திப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். சிறு வயதிலேயே மகளுக்கு பாட்டு கற்றுத் தந்தார். இயற்பெயர் அலமேலு. செல்லமாக ‘பட்டா’ என்று கூப்பிடுவார்கள். அந்த பெயரே நிலைத்துவிட்டது. நான்கு வயதில் பாடத் தொடங்கினார்.

# 3 மாதக் குழந்தையாக இருந்தபோது ரமணரிடம் மகளை அழைத்துச் சென்றார் தந்தை. அவர் குழந்தையின் நாக்கில் தேன் தடவி ஆசிர்வதித்தார். ‘இசை ஞானம், குரல் வளத்துடன் நீ நன்கு பாடுவதற்கு ரமணரின் ஆசியே காரணம்’ என்று அடிக்கடி கூறுவார் தந்தை.

# முறையாக கர்னாடக இசை கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிதுகாலம் பயின்றார். அதன் பிறகு, மேடையேற்ற தயங்கினார் தந்தை. பட்டம்மாள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்முகுட்டி அம்மாள்தான் இவரது அபூர்வத் திறனை உணர்ந்து, தந்தையிடம் வாதாடி அனுமதி பெற்றுத் தந்தார்.

# கச்சேரிகளில் பிரபல பாடகர்கள் பாடும் பாடல்களைக் கேட்டே திறமையை வளர்த்துக்கொண்டார். குறிப்பாக, நாயனா பிள்ளையின் கச்சேரிகள் இவருக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்தன. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து, விடாமுயற்சியுடன் சாதகம் செய்வார். இவரது சகோதரர்களும் சிறந்த பாடகர்கள்.

# காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது, பாரதியார் பாடலைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றார். 1929-ல் முதன்முறையாக வானொலியில் பாடினார். 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் இவரது முதல் கச்சேரி அரங்கேறியது.

# காங்கிரஸ் கூட்டங்களில் பாடினார். தமிழ் கீர்த்தனைகளை பிரபலமடையச் செய்தார். இவரது பாடல்கள் இடம்பெற்ற கிராமஃபோன் தட்டுகள் ஏராளமான விற்றன.

# நாடு விடுதலை அடைந்த அன்று இரவு முழுவதும் ‘விடுதலை, விடுதலை’, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்பது போன்ற தேசபக்திப் பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார். ஆனால், அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார். காந்தியடிகள் மறைந்தபோதும் வானொலியில் பாடியவர் ஊதியம் வாங்க மறுத்துவிட்டார்.

# முத்துஸ்வாமி தீட்சதரின் பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கினார். பாபநாசம் சிவன் இவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். ‘தியாக பூமி’ (1939) படத்தில் முதன்முதலாக ‘தேச சேவை செய்ய’ என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடினார். அதேநேரம், பக்தி அல்லது தேசபக்தி பாடல் மட்டுமே பாடுவது என்பதில் உறுதியாக இருந்தார்.

# பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவ ரது மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தனது ஜப்பானிய சீடர் அகிகோ என்பவரை திருவையாற்றில் பாட வைத்தார்.

# பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மான் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘தேசியக் குயில்’ என்று போற்றப்பட்ட டி.கே.பட்டம்மாள் 90-வது வயதில் (2009) மறைந்தார்.

    தமிழை இயல், இசை, நாடகம் என வகைப்படுத்தி முத்தமிழ் என்கிறோம். மா, பலா, வாழை நமக்கு முக்கனிகள். நமது பெருமைக்குரிய தமிழ் மன்னர்கள் சேர, சோழ, பாண்டியரென்ற மூவேந்தர். குறளுக்கும் மூன்று அதிகாரங்களே-அறம், பொருள், இன்பம் என்று. அதுபோன்றே நமது செவ்வியல் இசைமரபிலும் தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி எனும் மூவரும் தமிழிசைக்கு சீர்காழி மூவர் என அழைக்கப்படும் அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரும் முன்னோடிகளாவர். இப்படி நமக்கு எங்குபோனலும் மூன்று; எதற்கெடுத்தாலும் மூன்று.

D.K.Pattammal தமிழகத்து இசை உலகில் அன்று ஆண்பாடகர்கள், கலைஞர்கள் நூற்றுக்கணக்கில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது பெண்கள் மூவர் இசைத் தேவதைகளாக ஒளிவீசி வலம் வந்தனர். எம்.எஸ். சுப்புலட்சுமி, எம். எல். வசந்த குமாரி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோரே அந்த மூன்று இசைப் பேரொளிகள். இவர்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமியையும் எம்.எல். வசந்தகுமாரியையும் ஏற்கெனவே நாம் இழந்துவிட்டோம். இப்போது பட்டம்மாளும் தன் இசை மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டார்.

காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் எனும் சிற்றூரில் கிருஷ்ணசாமி தீட்சிதருக்கும் காந்திமதி என்ற ராஜம்மாளுக்கும் நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று ஆண் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரே செல்ல மகளாக 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி பிறந்தார் பட்டம்மாள்.

கிருஷ்ணசாமி தீட்சிதருக்கு இசையில் மிகவும் ஆர்வமிருந்தது. அவரது மனைவி ராஜம்மாள் மிகச்சிறந்த பாடகியாகவே வளர்ந்தவர். இருந்தும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில்கூட பாடுவதற்கு அவரது வைதீகக் குடும்பப் பின்னணி அவருக்குத் தடையாக இருந்தது. இந்தச் சூழலிலும் அவைகளது மகன்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் ஆகியோரைப் போலவே பட்டம்மாளும் மிக இளவயதிலேயே பாடுவதில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினார்.

சிறுமியாக இருக்கும்போதே இசைக் கச்சேரிகளைப்போய்ப் பார்ப்பதும், வீட்டுக்குத் திரும்பி வரும்போது அந்தக் கச்சேரியில் பாடகர் பாடியதுபோலவே சாலையில் பாடிக்காட்டிக்கொண்டே வருவதும் குழந்தைப் பட்டம்மாளுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அப்போது அவருக்கு முறைப்படி இசைப்பயிற்சி எதுவும் தரப்படவில்லை. வீட்டிலும் தந்தை சொல்லித் தந்த ஸ்லோகங்களையும் பக்திப் பாடல்களையும் மட்டுமே அவர் பாடிக்கொண்டிருப்பார். ஒரு தெலுங்கு வாத்தியார் மட்டும் அவ்வப்போது அவருக்குக் கொஞ்சம் பயிற்சி தந்துகொண்டிருந்தார்.

பட்டம்மாளுக்கு 10 வயதிருக்கும்போது மெட்ராஸ் கார்ப்பரேஷன் ரேடியோ (இப்போது ஆல் இந்தியா ரேடியோ) முதன்முதலில் பாட வாய்ப்பளித்தது. அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1932-இல் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் பட்டம்மாளின் முதல் இசைக் கச்சேரி அரங்கேறியது. அதற்கு ஓராண்டுக்குப் பிறகு அவர் சென்னை சென்று அங்கே தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார். எழும்பூர் பெண்கள் கிளப்பில் இசை பாடி பலரது பாராடுதல்களைப் பெற்றார்.

1939-இல் பட்டம்மாளுக்கும் ஆர். ஈஸ்வரனுக்கும் திருமணம் நடந்தது. விரைவிலேயே அவர் ஒரு மிகச்சிறந்த பாடகியாக உயர்ந்தார். 65 ஆண்டுகள் தமிழகத்தின், இந்தியாவின் இசைவானில் அவர் ஒரு நிகரற்ற இசைப் பறவையாய் சிறகடித்து வலம் வந்தார்.

முத்துசாமி தீட்சிதரின் இசை உருவாக்கக் களஞ்சியத்திற்கு உயிரூட்டி உலவச் செய்ததில் டி.கே.பட்டம்மாள் தனியொரு தாரகையெனத் திகழ்ந்தார். பாபநாசம் சிவன் போன்றவர்களின் இசையாக்கங்களை மக்களிடம் கொண்டுசோர்ப்பதிலும் பட்டம்மாள் தனி முத்திரை பதித்தார்.

D.K.Pattammal இதெல்லாவற்றையும்விட பட்டம்மாளின் சிறப்பு இன்னும் பல புதுமைப் புரட்சி முயற்சிகளில் மிளிர்ந்தன. உயர்சாதி எனப் பெருமிதம் கொண்டிருந்த பார்ப்பன வகுப்பில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம்வரையிலான காலகட்டத்தில் பார்ப்பனப் பெண்கள் கலைஞர்களாக மேடையேறும் வழக்கத்திற்கு தடை இருந்தது. பிற்போக்குத்தனமான இந்தப் பெண்ணடிமை வழக்கத்தை உடைத்தெறிந்த முதல் பெண்ணாக டி,கே. பட்டம்மாள் மிக உயரிய சாதனை புரிந்திருக்கிறார். ஆமாம். அவர்தான் தாம் பிறந்த சாதியிலேயே மேடையேறி இசை முழங்கிய முதல் பெண்மணி.

அது மட்டுமல்ல... ராகம், தானம், பல்லவியை முதன்முதலில் இசைக் கச்சேரியில் கையாண்ட முதல் பெண்ணும் பட்டம்மாள்தான். காரணம், ராகம், தானம், பல்லவி எனபது கர்நாடக இசை நிகழ்ச்சியிலேயே பாடுவதற்கு மிகக் கடினமான ஒன்றாகும். பட்டம்மாள் அதனைக் கையிலெடுக்கும் வரையில் அது ஆண்களின் வலிமை மிக்க பிடியிலேயே சிக்கிக் கிடந்தது. ஏன் ஒரு பெண்ணால் அதனைக் கைக்கொள்ள முடியாது என்று துணிந்து முயன்று வெற்றியும் கண்டவர் பட்டம்மாள். அதுமட்டுமல்ல... மிகச் சிக்கலான தாளகதியிலமைந்த பல்லவிகளைக்கூட பட்டம்மாள் மிக இலகுவாகப் பாடி, அன்றைய ஆண் இசை ஜாம்பவான்களையெல்லாம் மிகுந்த மரியாதையுடன் தன்னை கவனிக்கச் செய்தார். இதன் பொருட்டு அவருக்கு பல்லவி பட்டம்மாள் என்ற பட்டப் பெயரும் வந்து சேர்ந்தது. நைனா பிள்ளை மற்றும் வித்யாலயா நரசிம்மலு நாயுடு போன்றோரிடம் சில பல்லவிகளை அவர் பயின்றார்.

பட்டம்மாளுக்கு பாபநாசம் சிவன் மூலமாக சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துசேர்ந்தது. ஆனால், தேச பக்திப் பாடல்களையும் இறைவன் துதிப்பாடல்களையும் மட்டுமே பாடமுடியும் என்று பிடிவாதம் காட்டியவர் பட்டம்மாள். காதல்ரசம் கொண்ட பாடல்களைப் பாட வந்த வாய்ப்புகள் அனைத்தையும் கண்டிப்புடன் மறுத்தார் அவர். திரைப் படத்துறைக்கு அவர் போவதை முதலில் விரும்பாத அவரது தந்தை, அவர் பாடப்போகும் முதல் படமானது அன்றைய மிகச் சிறந்த திரைப்பட இயக்குநரான கே. சுப்பிரமணியம் எடுக்கும் 'தியாக பூமி' என அறிந்து மிக மகிழ்ச்சியோடு அதற்குச் சம்மதம் தெரிவித்தார். பிறகு 'நாம் இருவர்' படத்தில் பாடினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் பட்டம்மாளைப்போல மனம் லயித்துப் பாடி பிரபலப்படுத்தியவர் அன்றைக்கு வேறு எவரும் இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் அனைத்து முன்னணி சபாக்களிலும் இசை மழை பொழிந்த பெருமை பட்டம்மாளுக்கு உரியது. உலகின் பல்வேறு பகுதிகளிலும்கூட அவர் சென்று இசை விருந்து படைத்திருக்கிறார். தனது இசை வாழ்க்கையினூடாக ஏராளமான விருதுகள் அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றுள் கான சரஸ்வதி, சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்று வரிசை வரிசையாக விருதுகள் அவரைப் பெருமைப்படுத்திக் கொண்டேயிருந்தன.

அந்த நாளில் கர்நாடக சங்கீதம் என்றாலே தெலுங்கும் சமஸ்கிருதமும்தான் என்றிருந்த நிலையில் பட்டம்மாள் துணிச்சலுடன் தமிழ்ப் பாடல்களைப் பாடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். பாபநாசம் சிவனின் தமிழ் கிருதிகள் அவரது இனிய குரலில் எங்கும் ஒலித்தன. பாரதியின் தேசபக்தப் பாடல்களை பட்டம்மாள் பாடிக் கேட்க வேண்டுமென்றே பலரும் தவம் கிடந்தனர். இந்தியா விடுதலை பெற்ற தினத்தன்று அகில இந்திய வானொலியில் பல மணிநேரங்களுக்கு பட்டம்மாள் பாரதியார் பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்திய அந்த நாளை பலரும் பல சந்தர்ப்பங்களில் நினைவுகூர்ந்துள்ளனர். பட்டம்மாள் ஒரு இசை சகாப்தம். தனித்த மேதமை கொண்டது அவரது இசைத் திறன். தமிழக இசை வரலாற்றில் டி.கே. பட்டம்மாளின் இடம் வேறெவராலும் இட்டு நிரப்பப்பட இயலாததாகும்.

நன்றி - விக்கிபீடியா ,தி இந்து தமிழ் ,கீற்று .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக