செவ்வாய், 19 ஜூலை, 2016

சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி அன்னை சாரதா தேவி நினைவு நாள் ஜூலை 20.


சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி அன்னை சாரதா தேவி நினைவு நாள் ஜூலை 20.
அன்னை சாரதா தேவி  (22 திசம்பர் 1853 – 20 சூலை 1920), ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவியும் ஆவார். இராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர்.

இளமைக்காலம்

ஜெயராம்பாடியில் சாரதா தேவியின் வீடு (நடுவில்)
அன்னை சாரதா தேவி கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22 ஆம் நாள் ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தார். இவர் பள்ளி சென்று படித்ததில்லை என்ற போதும் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

ஐந்து வயதில் இவர், ராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணைவியானார். தமது கணவரைப் பலர் பைத்தியக்காரர் என்று கூறுவதால் வருத்தப்பட்டு அவருக்கு உதவி செய்ய வந்தார். அங்கு ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்விற்குத் துணையாக அவருக்கும், அவரைக் காண வரும் பக்தர்களுக்கும் சமைப்பது, அவரது வழிகாட்டுதலில் ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுவது என்று ஆன்மிகப் பணிகளைச் செய்தார்.

சங்க ஜனனி
சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவியை ’சங்க ஜனனி’ என்று குறிப்பிடுவார். ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், 1888 ஏப்ரல் மாதம் கயைக்குச் சென்ற அன்னை, அங்கு உள்ள சன்னியாசிகளுக்கு உள்ள மட வசதிகளை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துறவிச் சீடர்கள் இருந்த ஏழ்மை நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து வருந்தி அழுதார். அவர், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் "..உமது பெயரில் அனைத்தையும் துறந்த என் பிள்ளைகள் உணவுக்காகப் பிச்சையெடுப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உம்மிடம் எனது பிரார்த்தனை இதுதான்: உமது பெயரைச் சொல்லிக் கொண்டு உலகைத் துறப்பவர்களுக்குச் சாதாரண உணவும் உடையும் கிடைக்க வேண்டும். அவர்கள் உமது உபதேசங்களையும் லட்சியங்களையும் மையமாகக் கொண்டு ஓரிடத்தில் ஒன்றுகூடி வசிக்க வேண்டும். உலக வாழ்க்கையில் துன்புற்ற மக்கள், அவர்களிடம் வந்து உமது அமுதமொழிகளைக் கேட்டு ஆறுதல் பெற வேண்டும். அதற்காகவே அல்லவா நீர் வந்தீர்! அவர்கள் அலைந்து திரிவதைக் காண என்னால் சகிக்க முடியவில்லை" என்று பிரார்த்தித்தார். இவ்வாறு தமது பிரார்த்தனை மூலம் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு முதல் விதையை இட்டார். அதனாலேயே ’சங்க ஜனனி’ (இயக்கத்தை தோற்றுவித்தவர்) எனப் போற்றப்படுகிறார்.

பெண் கல்வி
அன்னை சாரதா தேவி பெண் கல்வியை ஊக்குவித்தார். நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அவர் ஆரம்பித்த பெண்கள் பள்ளி தொடர்ந்து நடைபெறக் காரணமானவர்.

கடைசி உபதேசம்
1919 இறுதியிலிருந்து அவரது உடல் ஆரோக்கியம் குன்றியது. அவரது நோய் கடுமையான காய்ச்சல் (Kala-azar) என்று கல்கத்தாவில் கண்டு பிடிக்கப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதிநாள் 1920 ஜூலை 20 வரை அவர் இந்த நோயால் அவதிப்பட்டார். ”மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுகெல்லாம் என் அன்பைத் தெரிவித்துவிடு.என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு” என்று தமது கடைசி உபதேசத்தை அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக