ஞாயிறு, 22 ஜூலை, 2018

விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் பிறந்த தினம் ஜூலை 23.1856.


விடுதலைப் போராட்ட வீரர்  பால கங்காதர திலகர் பிறந்த தினம்  ஜூலை 23.1856.

பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak ,
மராத்தி : बाळ गंगाधर टिळक, பாள கங்காதர டிளக் ) சூலை 23 , 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார். லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் பிபின் சந்திர பால் , லாலா லஜபத் ராய் . திலகரின் சீடரான வ. உ. சிதம்பரம் பிள்ளை "தென்னாட்டுத் திலகர்" என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ அரவிந்தர் இந்திய மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். பால கங்காதர திலகர் தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளமைக்காலம்

பிறப்பும் கல்வியும் திலகர் 1856-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் நாள் மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தார். தந்தையார் கங்காதர் ராமசந்திர திலக் சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ஆசிரியர். தாயார் பார்வதிபாய் திலக் மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு இறைவனை வேண்டிப் பெற்ற பிள்ளை திலகர். அவரது பத்து வயது வரை ரத்தினகிரியில் படித்தார். பின்னர் அவரது தந்தை பணி காரணமாக புனேவுக்கு இடம் பெயர்ந்ததால் அங்கே கல்வியைத்தொடர்ந்தார். அவர் சுமார் பத்து வயதாக இருக்கும் போதே தாயை இழந்தார். அவருக்கு கேசவ் கங்காதர திலக் என்றே பெயரிட்டனர். அவரது தாயார் அவரை பால் என்று அழைத்தார். தாயார் நினைவாகவே திலகர் தனது பெயரை பால் கங்காதர திலக் என்று வைத்துக்கொண்டார். 1871-ல் சத்தியபாமா 11 வயது சிறுமியை திலகருக்கு மணம் முடித்தனர். 1877- ஆம் ஆண்டில் புனேவில் உள்ள டெக்கன் கல்லூரியில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றார். அப்போது அவரது தந்தையாரும் இறந்துவிட்டார். அவரது சித்தப்பா கோவிந்த ராவும் சித்தி கோபிகா பாயும் மிக அன்புடன் அவரை வளர்த்தனர். 1879-ல் சட்டப்படிப்பை முடித்தார். இவர் பெர்கூசன் கல்லூரியில் கணிதமும் கற்பித்து வந்தார்.

அரசியல் வாழ்வு

பாலகங்காதர திலகர் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற, கணிதப் பாடத்தில் மிகச் சிறப்பாக முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன். அவன் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில விண்ணப்பித்தான். அவனுடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும் பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவும், " அன்பு மாணவனே! நீ கணிதத்தில் மிகவும் திறமை பெற்றிருப்பது தெரிகின்றது. நீ கணிதப் பிரிவில் சேர்ந்து கணிதத்தையே சிறப்புப் பாடமாகக் கற்பாயாகில், நீ மிகவும் மேலாம் நிலையினை அடைவாய். அதன் மூலம் உனக்கு ஒளிமிகுந்த எதிர் காலம் அமையும். அதற்கு மாறாக நீ சட்டம் படிப்பாயானால் நீ அடையும் பயன் குறைவாகவே இருக்கும். நீ யோசித்து உன்முடிவைச் சொல்" என்று அவனுக்கு விளக்கிக்கூறினர். அதற்கு மாணவன் பணிவோடு" ஐயன்மீர்! தாங்கள் கூறிய அனைத்தும் சரிதான். ஆனால், என் நாடு அடிமைப்பட்டுக் துன்புற்றுக் கிடக்கின்றது. சுதந்திர தாகத்தால் தவிக்கும் என் மக்கள் அன்னிய ஆதிக்கத்தால் சட்டமல்லாத சட்டத்தின் கீழ் அடிக்கடி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவிக்கத் தக்கவர்களான தேச பக்தி மிகுந்த வழக்குறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. என் மக்களையும், தேசத்தையும் காப்பாற்றவேண்டுமானால் நான் சட்ட நுணுக்கங்களையெல்லாம் கற்ற சட்ட நிபுணனாக வேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகவே நான் சட்டம் பயில வந்தேன். அதற்கு, பெரியீர் தாங்கள் தாம் என்மீது அன்பும், கருணையும் கொண்டு உதவிகளைச் செய்யவேண்டும்."என்று பணிவுடன் கூறினான். அவன் கொண்ட வைராக்கியத்தின்படியே சட்ட வல்லுனனாகிப் பல தேச பக்தர்களுக்காக வாதாடி அவர்களைச் சிறையிலிருந்து மீட்டான். தன் நாட்டு மக்கள் மனத்தில் சுதந்திரக் கனலை மூண்டெரியச் செய்தான்.

தேசத்தொண்டு

மகாதேவ் கோவிந்த் ரானடே என்பவர் ஆரம்பித்த சர்வஜனிக் சபாவில் சேர்ந்து பொதுத் தொண்டாற்றினார். தாதாபாய் நௌரோஜி இந்திய செல்வம் எப்படி ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுகிறது என்று புள்ளி விவரத்துடன் எழுதிய நூலை அடிப்படையாக வைத்து ரானடே 1872-ல் ஆற்றிய சொற்பொழிவும் விஷ்ணு சாஸ்திரி சிப்லுண்கர்1874-ல் நிபந்த மாலை என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளும் சுய நலமற்ற பண்புடைய திலகரை ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் தூண்டியது.

பத்திரிகை

திலகர், கோபால் கணேசு அகர்கர், விட்ணுசாத்திரி சிப்லுனாக்கர், இன்னும் பிற நண்பர்களுடன் சேர்ந்து 1881 ஆம் ஆண்டில் இரண்டு பத்திரிகைகளைத் தொடக்கினார். ஒன்று "கேசரி" என்னும் பெயர் கொண்ட மராத்தி மொழிப்
பத்திரிகை , மற்றது "மராட்டா" என்ற ஆங்கிலப் பத்திரிகை. இரண்டு ஆண்டுகளிலேயே "கேசரி" இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கொண்ட பத்திரிகை ஆனது. இதன் ஆசிரியத் தலையங்கங்கள் பிரித்தானியர்களின் கீழ் மக்கள்படும் துன்பங்கள் குறித்ததாகவே இருந்தன. இந்தப் பத்திரிகைகள், ஒவ்வொரு இந்தியனையும் தமது
உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டின. அதன் தலையங்கங்கள் மக்களின் சிரமங்களையும் உண்மையில் நடப்பதையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்ததால் மக்கள் அந்த பத்திரிக்கைகளை விரும்பிப்படித்தனர்.
மேலும் அவர்கள் மக்களுக்கு இந்திய கலாச்சாரத்துடன் சேர்ந்த கல்வியறிவை கொடுப்பதற்காக 1884-ல் தக்காண கல்வி சபையைத் தோற்றுவித்தனர். கடுமையாக உழைத்து திறமையாக நடத்தினர். அது பின்னர் ஃபெர்குஸன் கல்லூரியாகவும் விரிவடைந்தது.
புனேவில் விவேகானந்தருடன்
சுவாமி விவேகானந்தர் இந்தியாவை சுற்றி வந்த பரிவ்ராஜக வாழ்க்கையின் போது, மும்பையில் இருந்து புனேவிற்கு செப்டம்பர் 1892 இல் ரயிலில் வந்தார். அப்போது பால கங்காதர திலகர் அவரது சக பிரயாணியாவார். பின்னர் திலகரின் இல்லத்தில் 8 லிருந்து 10 நாட்கள் வரை சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார்.அந்த அறை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.பின்னாளில், இதே அறையில்தான் புகழ்பெற்ற விநாயகர் திருவிழாவையும் திலகர் ஆரம்பித்தார்.

காங்கிரஸ்

இந்திய காங்கிரஸ் ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் கழித்து திலகர் 1889-ல் காங்கிரஸில் சேர்ந்தார். அப்பொழுது அது அடிமை மனப்பாங்கு கொண்டதாக இருந்தது. 1893-ல் விவேகானந்தரின் சிகாகோ உரை திலகரை மிகவும் கவர்ந்தது. திலகர் 1893-ல் மக்களிடயே நாட்டுப்பற்றை ஏற்படுத்த கணபதி உற்சவம் கொண்டாட ஆரம்பித்தார். இன்றும் அந்த உற்சவம் மராட்டிய மாநிலத்தின் அடையாளமாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 1895-ல் சிவாஜி உற்சவம் கொண்டாட ஆரம்பித்தார்.இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை அரசாங்கத்திற்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது.
1895ல் திலகர் புனே முனிசிபல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.1896 இறுதியில் பம்பாயிலும் புனேவிலும் பிளேக் நோய் பரவியது.திலகர் துன்புறும் மக்களுடன் தானும் இருந்து அவர்களுக்காக உழைத்தார். தாமே மருத்துவமனை ஒன்றும் அமைத்தார். பிளேக் நோய் பரவிய சமயத்தில் அனுப்பப்பட்ட ரான்ட் என்பவரும் லெப்டினன்ட் அய்ர்ஸ்ட் என்பவரும் சாப்பிக்கர் சகோதரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். திலகர் எழுதிய தலையங்கங்களே இந்தக் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைந்தன என்று 1897-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வேதங்களின் காலம் குறித்து ஆராய்ந்தார்.18 மாதம் சிறைத்தண்டனை 12 மாதமாகக் குறைக்கப்பட்டது. தண்டனை முடிந்து வெளிவரும்போது மிகுந்த மக்கள் செல்வாக்குபெற்ற தலைவராக வெளிவந்தார். மக்கள் அவரை வரவேற்க கூட்டமாகக் காத்திருந்தனர். லார்டு கர்ஸன் 1905- ஆம் ஆண்டு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இதை திலகர் கடுமையாக எதிர்த்தார். சுதேசி பொருட்கள் ஆதரவு, அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பு முதலியவற்றை திலகர் முன்னின்று நடத்தினார். இது பின்னாளில் காந்திஜியால் ஒத்துழையாமை இயக்கம் என்ற புதிய பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. திலகருக்கு வங்கத்தைச் சேர்ந்த விபின் சந்த்ர பாலும் பஞ்சாபைச் சேர்ந்த லாலா லஜபத் ராயும் துணை நின்றனர். இவர்கள் லால்- பால்- பால் என்றும் மும்மூர்த்திகள் என்றும் அழைக்கப்பட்டனர். வங்கத்தைச் சேர்ந்த அரவிந்தரும் வ. உ. சிதம்பரம் பிள்ளையும் திலகருடன் இருந்தனர். கோகலே போன்றோர் ஆங்கிலேயரை எதிர்க்காமல் எதையும் கேட்டுபெற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். அவர்களுக்கு திலகரின் செயல்கள் அச்சத்தை ஏற்படுத்தியது.
1907-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் மிதவாதிகள், அமிதவாதிகள் என்று இரண்டாகப் பிரிந்தது. மிதவாதிகள் தங்களை ஆள்பவர்கள் ஆங்கிலேயர்கள் என்பதை எப்போதும் நினைத்திருந்தார்கள்.அமிதவாதிகள் தங்களை ஆள்பவர்கள் அந்நியர்கள், சுதந்திரம் தங்களது பிறப்புரிமை என்று நினைத்தார்கள். திலகர் அமிதவாதிகள் தலைவரானார். அவர் செயலற்று இருப்பதை விரும்பவில்லை. ஆங்கில ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
1908 ஏப்ரல் 30 அன்று முசாஃபர்பூரில் பிரபுல்ல சாஹி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் கின்ஸ்போர்ட் என்ற மேஜிஸ்டிரேட் மீது குண்டு வீசினர். அதில் கென்னடி என்பவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். பிரபுல்ல சாஹி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். குதிராம் போஸூக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது செயலைப் பாராட்டி திலகர் கேசரி இதழில் தலையங்கம் எழுதினார். அதனால் ஆங்கில அரசு அவரைக் கைது செய்து பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பியது. 1908- லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார். சிறையில் கீதா இரகசியம் என்ற நூலை எழுதினார்.அவர் சிறையில் இருந்து வெளிவந்தபோது கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது அவரது மனைவி இறந்தார்.
மாக்ஸ் முல்லர் கடிதம்
ஜெர்மனியின் மாக்ஸ் முல்லர் , அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும், சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினார். வில்லியம் வில்சன் ஹன்டர் மற்றும் பலரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர். இன்றளவும் இக்காரணத்தால் ஜெர்மனியின் புனேவுடனான தொடர்பு நூறாண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கருதப்படுகிறது [3]
ஹோம்ரூல்
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மீண்டும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து ஹோம்ரூல் இயக்கத்திற்காகப் போராடினார். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராச்சியம் குறித்துப் பேசினார். 1919-ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். இந்திய சுதந்திரம் குறித்து அங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். லேபர் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். (லேபர் கட்சியைச் சேர்ந்த பிரதமர் கிளமண்ட் அட்லீயின் பதவி காலத்தில் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.) ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கேள்விப்பட்டு நாடு திரும்பினார். 1920 ஜூலையில் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1-ஆம் நாள் இறந்தார். சுமார் 2,00,000 பேர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக