வியாழன், 5 ஜூலை, 2018

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஜெகஜீவன்ராம் நினைவு தினம் ஜூலை :6 ,1986.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஜெகஜீவன்ராம் நினைவு தினம் ஜூலை :6 ,1986.



 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஜெகஜீவன்ராம்  நினைவு தினம் ஜூலை :6 ,1986.

ஜெகசீவன்ராம் (அ) ஜெகஜீவன்ராம் ( இந்தி : बाबू जगजीवन राम) (பிறப்பு:5 ஏப்ரல் 1908 – இறப்பு:6 சூலை1986), பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். பீகார் மாநிலம் , போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும்
தலித் சமூகத்தில் பிறந்தவர்.
1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.
இளமை வாழ்க்கை மற்றும் கல்வி
ஐந்து உடன் பிறந்தவர்களுடன் பிறந்த ஜெகசீவன்ராமின் தந்தை சோபிராம், இந்திய பிரித்தானியப் படையில் பெஷாவரில் பணி புரிந்தவர். ஆறாவது அகவையில் தம் தந்தையை ஜெகசீவன்ராம் இழந்தார். தாய் பெயர் வசந்தி தேவி. ஜெகசீவன்ராம் 1914-இல் துவக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1927-இல் அர்ரா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றபின் 1928 ஆம் ஆண்டில்
வாரணாசி யில் உள்ள பனாராஸ் இந்து பல்கலை கழகத்திலும் பின்னர் 1931-இல்
கல்கத்தா பல்கலை கழகத்திலும் படித்து இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். இந்தி ஆங்கிலம் வங்காளி சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள நூல்களைப் படித்தார்.
தீண்டாமைக் கொடுமை
சகசீவன் ராம் தீண்டத் தகாத சாதியில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. அதனைக் கண்டு அவர் வருத்தமும் சினமும் அடைந்தார். அந்தப் பானையை உடைத்தார். உயர்சாதி மாணவர்கள் பயன்படுத்துகின்ற பானை நீரைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார். பனாரசுப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது சகசீவன்ராம் சாதிய இழிவுகளை நேரடியாகச் சந்தித்தார். உணவு விடுதியில் பணியாளர்கள் இவர் சாப்பிட்ட உணவுத் தட்டுகளைக் கழுவ மறுத்தார்கள். அது மட்டுமல்லாமல் முடி திருத்தும் தொழிலாளிகள் முடி திருத்த மறுத்தார்கள். பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது சம்பூராணந்தா சிலையைத் திறந்து வைத்தார். இவர் சிலையைத் திறந்து விட்டு அகன்றப் பின்னர் அந்த இடத்தைக் கங்கை நீரைக் கொண்டு கழுவினார்கள் இந்த அவமதிப்பு குறித்து மன வேதனை அடைந்தார்.

அரசியல் பணிகள்
1931 இல் காங்கிரசில் சேர்ந்தார். சகசீவன்ராம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார். தேர்தலில் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். 1936 முதல் 1986 வரை 50 ஆண்டுகள் சட்ட மன்ற நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த்து
காந்திஜியின் தலைமையில் நடந்த
சத்தியாகிரகப் போராட்டத்திலும்,
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் தீவிரமாக பங்கு கொண்டு 1940-இல் சிறை சென்றார். தலித் சமுகத்தினரை கோயிலிலுள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார்
1934-இல் பிகாரில் ஏற்பட்ட நிலநடுக்க நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கு கொண்டார். அப்போது பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு உடை வழங்குவதிலும் மருத்துவ உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டார். உதவி முகாம்களில் காந்தியைச் சந்தித்தார். காந்தி ஒரு தேசியத் தலைவர் மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுபவர் என்று எண்ணினார்.
1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்தார். கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். தலித் சமூகத்தவர் சார்பாக பிகார் மாகாண அரசுக் குழவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் வேளாண்மைக்கான பாசான நீருக்கான வரியை எதிர்த்து பதவியிலிருந்து விலகினார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.


வகித்த பதவிகள்
இந்திய நடுவண் அரசில் பல துறைகளில் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் கேபினட் அமைச்சராக பணிபுரிந்தவர் என்ற பெருமை பெற்றவர். பீகார் மாநிலத்தில் உள்ள சசாராம் நாடாளுமன்ற தொகுதியில் 1952 முதல் 1984-ம் ஆண்டு வரை எட்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
1. தொழிலாளர் துறை அமைச்சர் 1946-1952. 1946 இல் சவகர்லால் நேரு தலைமையில் அமைந்த நடுவண் அமைச்சரவையிலும், விடுதலைக்குப் பின் அமைந்த அமைச்சரவையிலும் அமைச்சர் ஆனார். 1947 ஆம் ஆண்டில் செனிவாவில் நிகழ்ந்த பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.
2. தொலை தொடர்புத் துறை அமைச்சர் 1952-1956. 1952 வரை தொழிலாளர் நலத்துறை, செய்தித் தொடர்பு, போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தார். தொலைவில் இருக்கும் சிறு சிறு கிராமங்களுக்கும் அஞ்சல் வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
3. போக்குவரத்து மற்றும் புகைவண்டித் துறை அமைச்சர் 1956-1962
4. போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் 1962-1963. 1963 இல் காமராசர் திட்டத்தின் கீழ் அமைச்சர் பதவியைத் துறந்தார். காங்கிரசின் கட்சிப் பணியை முழுமையாக செய்தார்.
5. தொழிலாளர் துறை மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் 1966-1967
6. உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் 1967-1970. 1967-70 காலத்தில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் நிலவியது. அப்போது பாபு சகசீவன் ராம் வேளாண் அமைச்சராக இருந்தபடியால் பசுமைப் புரட்சிக்கு வழி வகுத்தார்.உணவுப் பொருள்களின் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கச் செய்தார்.
7. பாதுகாப்புத்துறை அமைச்சர் 1970-1974, 1977-1979. 1970-74 காலக் கட்டத்தில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது பாக்கிசுத்தானிலிருந்து பிரிந்து வங்கத் தேயம் உருவானது.அந்தப் போரில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப் படுகிறது.
8. வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் 1974-1977. 1975 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை தலைமையமைச்சர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது இந்திரா காந்தியை ஆதரித்தப் போதிலும் 1977 இல் காங்கிரசிலிருந்து விலகினார். பிறகு சனதாக் கட்சியில் இணைந்தார்.
9. இந்தியா நடுவண் அரசில் 23 மார்ச்சு 1977 - 22 ஆகஸ்டு 1979 முடிய மொரார்சி தேசாய் அமைச்சரவையில் துணைபிரதமராக இருந்தார். பின்னர் சனதா கட்சியில் கருத்து வேறுபாடுகள் நிலவியதால் அதிலிருந்து விலகி காங்கிரசு (ஜே) என்று புதிய கட்சியைத் தொடங்கினார்.
10. அகில இந்தியத் தலைவர், பாரத சாரணர் படை 1976 - 1983.
நினைவுச் சின்னங்கள்
பாபு ஜெகசீவன்ராம் தேசிய நிறுவனம் என்பது நடுவண் சமூக நீதி அமைச்சரவையின் கீழ் 2008 மார்ச்சு முதல் இயங்கி வருகிறது.
மைசூர் பல்கலைக் கழகத்தில் ஜெகஜீவன்ராம் கல்வி ஆராய்ச்சி மையம் 2010 சூனில் தொடங்கப்பட்டது.
திருவல்லிக்கேணியில் உள்ள பெல்ஸ் ரோட்டுக்கு ஜெகஜீவன்ராம் சாலை என்ற பெயர் சூட்டப்பட்டது.
சொந்த வாழ்க்கை
ஆகஸ்டு, 1933-இல் மனைவி இறந்த பின், சூன் 1935-இல் இந்திராணி என்பவரை மணந்தார். சுரேஷ் குமார் என்ற மகனும்,
மீரா குமார் (இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் 2009-2014) என்ற மகளும் பிறந்தனர்.
ஜெகசீவன்ராமை பற்றிய நூல்கள்
Sharma, Devendra Prasad (1974). Jagjivan Ram: the man and the times . Indian Book Co..
Chanchreek, Kanhaiyalal (1975). Jagjivanram: a select bibliography, 1908–1975 . S. Chand .
Singh, Nau Nihal (1977). Jagjivan Ram: symbol of social change. Sundeep Prakashan.
Ram, Jagjivan (1977). Four decades of Jagjivan Ram's parliamentary career . S. Chand.
Ramesh Chandra, Sangh Mittra (2003). Jagjivan Ram And His Times. Commonwealth Publishers.
ISBN 81-7169-737-2 .
Secretariat, Lok Sabha (2005). Babu Jagjivan Ram in parliament: a commemorative volume . மக்களவை (இந்தியா) Secretariat.
Maurya, Dr. Omprakash. Babu Jagjivan Ram . Publications Division, இந்திய அரசு . http://publicationsdivision.nic.in/Hindi-Roman/Au-Wise/HRB06.HTM .



அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் பாபு ஜெகஜீவன்ராம்!
அரசியல் உலகில் வெற்றிபெற்ற பல பிரபலங்களுக்கு, அவரவருக்கென்று ஒரு தனிப்பட்ட சாதனை இருக்கும். நேருவுக்கு ஒரு சாதனை என்றால், இந்திராவுக்கு ஒன்று, ராஜீவ் காந்திக்கு ஒன்று. கருணாநிதிக்கு ஒரு சாதனை என்றால், எம்.ஜி.ஆருக்கு ஒன்று. ஜெயலலிதாவுக்கு ஒரு சாதனை என்றால், மம்தா பானர்ஜிக்கு ஒன்று மற்றும் மாயாவதிக்கு ஒன்று.
நாம் மேலே பார்த்த சில உதாரணங்கள், மத்திய அளவிலோ அல்லது மாநில அளவிலோ தலைமைப் பதவிக்கு வந்தவர்கள். ஆனால், இந்த 2 நிலைகளிலும், தலைமைப் பதவிக்கு வராத சிலரும், தங்களுக்கென்று சில தனிப்பட்ட சாதனைகளை வைத்துள்ளனர்.
இந்த வகையில், பல சிறப்பு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர், பிரபல டில்லி அரசியல்வாதியாக பெயர்பெற்று விளங்கிய ஜெகஜீவன்ராம். இவரின் புகழ்பெற்ற பட்டப்பெயர் பாபுஜி.
நீண்டகாலம், காங்கிரஸ் கட்சியின் பிரபல தலித் முகமாக விளங்கியவர் இவர். 1908ம் ஆண்டு பிறந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராமின், ஏதேனும் ஒரு சட்ட அவையுடன் தொடர்புடைய அரசியல் வாழ்க்கை 1946ம் ஆண்டு துவங்குகிறது. அப்போது முதல் 1986 வரை, அது இடைவெளியின்றி செல்கிறது. (இடையில் சில சிறிய இடைவெளிகள் வந்தன; அவ்வளவே). அந்த வகையில் இதுவொரு உலக சாதனையாக கருதப்படுகிறது.
1936ம் ஆண்டு, இவர் பீகார் சட்ட கவுன்சிலுக்கு நியமனம் செய்யப்படுகிறார். அப்போதிலிருந்து தொடங்குகிறது அவரின் அரசியல் பொது வாழ்க்கை.
முதல் முறையாக...
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக, ஜவஹர்லால் நேரு தலைமையில்,
1946ம் ஆண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுகிறது. அந்த அரசில், இந்தியாவிலேயே இளைய அமைச்சராக, ஜெகஜீவன்ராம், தொழிலாளர் துறைக்கு பொறுப்பேற்கிறார். அப்போது முதல், 1976 வரை, அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர்தான்; ஆனால் பல்வேறு துறைகளுக்கு மாறி மாறி.
என்னென்ன துறைகள்
நேரு மற்றும் இந்திராவின் அமைச்சரவைகளில், அவர், தொழிலாளர் துறை, தகவல்தொடர்பு, போக்குவரத்து, ரயில்வே, வேலைவாய்ப்பு, மறுவாழ்வு, உணவு, வேளாண்மை, நீர்ப்பாசனம், பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளுக்கு, பல்வேறு காலகட்டங்களில், மாறி மாறி பொறுப்பு வகித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவெனில், பசுமைப்புரட்சி நடைபெற்றபோது அவர் வேளாண்மை அமைச்சராக இருந்ததும், வங்கதேசம் எனும் ஒரு நாடு உருவாவதற்கு காரணமான 1971ம் ஆண்டின் இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின்போது, ராணுவ அமைச்சராக இருந்ததும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
பசுமைப் புரட்சியா?
இந்தியாவில் நடத்தப்பட்ட பசுமைப்புரட்சி என்பது, உண்மையில் வேளாண்மை மேம்பாட்டிற்காக நடத்தப்பட்டது அல்ல என்றும், வெளிநாட்டு உரம் மற்றும் பூச்சி மருந்து நிறுவனங்களின் நன்மைக்காக, இந்திய நிலவளம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை பலிகொடுத்த நிகழ்வே ஆகும் என்றும் வலுவான விமர்சனங்கள் எப்போதும் உண்டு என்பதை கவனிக்க வேண்டும்.
மீண்டும் ஜெகஜீவன்ராமிற்கு வருவோம்
இந்தியாவில் எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்ததை நாம் நிச்சயமாக மறந்துவிட முடியாது. தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்ததுதான் அந்த அதிர்ஷ்டம். இதுவொரு பெரிய சாதனை என்றுகூட சொல்லலாம். இவருக்கு அதற்கான அனைத்து சூழல்களும் சரியாக அமைந்தன.
எதிர்ப்பு கருவி
டாக்டர்.அம்பேத்கர் என்ற மாபெரும் அறிவுமேதை, மக்கள் போராளியை எதிர்ப்பதற்கான ஒரு தலித் அடையாளமாக, இவர் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்பட்டார் என்றே கருதலாம். இவர், அம்பேத்கர் நடத்திய தலித்துகளின் பெளத்த மதமாற்ற நிகழ்வை கடுமையாக எதிர்த்தார். தலித்துகள், இந்து தீண்டாமையிலேயே நீடித்து வாழ வேண்டும் என்பது இவரின் கருத்து.
அமைச்சர் பதவி மட்டுல்ல
பல்வேறு துறைகளுக்கு தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்ததோடு மட்டுமின்றி, பல்வேறான முக்கிய அரசு கமிட்டிகளில், பல பெரிய பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார்.
நேருவின் மரணத்திற்கு பிறகான, காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையில், இவர் பழைய தலைவர்களின் பக்கம் போகாமல், இந்திராவின் பக்கம் நின்றது, இவரின் அரசியல் மேம்பாட்டிற்கு மிக முக்கிய காரணம். அதன் விளைவாக, அடுத்த பல ஆண்டுகளுக்கு, இவர் சக்திவாய்ந்த மத்திய அமைச்சராக வலம்வர முடிந்தது.
இந்திரா வேண்டாம்
இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை காலத்திலும், தொடர்ந்து அமைச்சராக இருந்த இவர், 1977ம் ஆண்டு, பொதுத்தேர்தல் நடப்பதற்கு, சில காலத்திற்கு முன்னதாக, காங்கிரசிலிருந்து விலகி, "ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்" என்ற புதிய கட்சியைத் துவக்கினார்.
ஜனதாக் கட்சியுடன்...
1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், இவரின் கட்சி, அன்றைய ஜனதாக் கட்சி கூட்டணியில் இணைந்தது. அந்தக் கூட்டணி வெற்றிபெற்று, யார் பிரதமர் என்ற கேள்வி எழுகையில், பலரது நினைப்பும், ஜெகஜீவன்ராம்தான், பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதாக இருந்தது.
வாய்க்காத அதிர்ஷ்டம்
வேறு பல அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற்ற ஜெகஜீவன்ராமிற்கு, ஒரு நாட்டின் தலைவராக இருக்கக்கூடிய பிரதமர் பதவி வாய்ப்பு மட்டும் கிடைக்கவேயில்லை. ஆனால், வாய்ப்பு சென்றதோ, மொரார்ஜி தேசாய்க்கு. பாபுஜிக்கு, பாதுகாப்பு துறையுடன் கூடிய, துணைப் பிரதமர் பதவி கிடைத்தது.
மொரார்ஜி தேசாய் பதவி விலக வைக்கப்பட்டு, சரண்சிங் பிரதமராக பதவி வகித்த காலத்திலும், இவர் துணைப் பிரதமராக தொடர்ந்தார். மொரார்ஜியை கவிழ்த்து, பதவியைப் பிடித்த சரண்சிங், காங்கிரசின் துரோகத்தால் குறுகிய காலமே பதவியில் இருக்க முடிந்தது.
சரண்சிங் பதவி விலகிய பின்னர், அன்றைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி, ஜெகஜீவன்ராமிற்கு, அரசமைக்க ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், மக்களவை கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதோடு முடிந்து போனது பாபுஜியின் செல்வாக்கான அமைச்சர் வாழ்க்கை.
அதன்பிறகு, அவர் இரண்டுமுறை, மக்களவைக்கு தேர்வுசெய்யப்பட்டு, தான் இறக்கும் 1986ம் ஆண்டு வரை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ஒரே தொகுதியிலிருந்து...
நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952ம் ஆண்டிலிருந்து, 1984ம்
ஆண்டின் தேர்தல் வரை, பீகார் மாநிலத்தின் சசாரம் மக்களைவைத் தொகுதியிலிருந்து, தொடந்து 8 முறை தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இதுவும் ஒரு சாதனைதான்.
தவறவிடப்பட்ட சாதனை
தந்தையின் அமைச்சரவையில் மந்திரியாக இருந்து, மகளின் அமைச்சரவையிலும் மந்திரியாக இருந்து, தனிக்கட்சி முடிவு எடுத்திருக்காவிட்டால், பேரனின்(ராஜீவ் காந்தி) அமைச்சரவையிலும் மந்திரியாக இருந்து சாதனை படைத்திருப்பார். ஆனால், அந்த ஒன்றை இவர் தவறவிட்டுவிட்டார். அதுவும் ஒரு உலக சாதனையாக இருந்திருக்கும்.

இவரின் மகள்
2009 - 2014ம் ஆண்டு வரை இருந்த, 15வது மக்களவையில், சபாநாயகராக இருந்த, இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமை பெற்ற, காங்கிரஸ் கட்சியின் மீரா குமார், இந்த பாபுஜியின் மகள்தான். இவர், தனது தந்தையின் கோட்டையாக இருந்த சசாரம் மக்களவைத் தொகுதியில், 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக