திங்கள், 10 பிப்ரவரி, 2020

உலக குடை தினம் பிப்ரவரி 10.


உலக குடை தினம் பிப்ரவரி 10.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சூரியன் கதிர் வீச்சு, மழையிலிருந்து நம்மை காப்பாற்றும் குடைக்கு அமெரிக்காவில் தனித் தினமே இருக்கிறது. அது குடைத் தினமாக (Umbrella Day) கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.


அம்பர்லா என்ற வார்த்தை லத்தீன் மொழி சொல்லான "umbra"-- லிருந்துதான் வந்தது. இந்தச் சொல்லுக்கு நிழல் (Shade or Shadow) என்று அர்த்தம்.

ஐரோப்பாவில் ஆரம்ப காலத்தில் மரம் அல்லது திமிங்கலத்தில் எலும்பால் தயாரிக்கப்பட்டு ஆயில் கேன்வாஸால் மூடப்பட்டிருந்தது. மேலும், குடை கம்பியில் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்கு ஏற்ப விலை இருந்தது. 1852 ஆம் ஆண்டில் ல் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் இரும்பு கம்பிகளை கொண்ட குடையை வடிவமைத்தார். மேலும். இவர் இங்கிலீஷ் ஸ்டீல்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இன்றைக்கு குடை விதவிதமான வடிமைப்பில் பல்வேறு பொருட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இருட்டில் ஒளிரும் ரேடியம் குடை கூட விற்பனைக்கு கிடைக்கிறது.  அமெரிக்காவில் இந்தத் தினம் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது.



குடையின் வரலாறு

குடையின் ஆங்கில மொழி பெயர்ப்பான அம்பிரல்லா எனும் சொல் லத்தின் மொழியின் "அம்ப்ரோஸ்" ) எனும் வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. லத்தின் மொழியில் "அம்ப்ரோஸ்" எனும் சொல் "நிழல்" எனும் பொருள் தரும் வகையில் உள்ளது.

நாம் தற்போது உபயோகிக்கும் நவீன கால குடைகள் முதன் முதலில் 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பா முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த காலம் வரை குடை பெண்களுக்கான ஒரு அலங்கார பொருளாக மட்டும் பார்க்கப் பட்டது.

நவீன குடையை உபயோகித்த முதல் ஆண் "ஜோனஸ் ஹான்வே" என்பவர் என வரலாற்றில் பதிவிடப்பட்டுள்ளது. இவர் ஒரு ஆங்கிலேயர் ஆவார். இவர் தான் முதன் முதலில் பொது இடங்களுக்கு நவீன குடையை எடுத்து சென்ற முதல் ஆண் ஆவார்.

அவரை பார்த்து தான் இங்கிலாந்தில் வாழ்ந்த பல ஆண்கள் நவீன குடையை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இது வெகு விரைவில் உலகம் முழுதும் பரவ ஆரம்பித்து, உலகில் உள்ள பல ஆண்களும் உபயோகிக்கும் ஒரு பொருளாக நவீன கால குடைகள் மாறின.

நவீன கால குடைகள் பண்டைய கிரேக்க மற்றும் ரோமில் பயன்படுத்தப்பட்ட குடை மாதிரிகளை போல் வடிவமைப்பில் ஒத்திருக்கின்றன.

20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப முன்னேற்றம், நவீன குடைகளில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உருவெடுத்து இருக்கின்றன. குடைகள் தற்போது பல வகைகளாக தயாரிக்க படுகின்றன. அவை பாரம்பரிய குடைகள், தானியங்கி குடைகள், சிறிய குடைகள் மற்றும் சதுப்புக் குடைகள் (நடைபயிற்சிக்கு பெரிதும் உதவுவது) என வெவ்வேறு வகைகளில் உற்பத்தி செய்ய படுகின்றன.

நவீன கால குடை வெளிப்புறங்களில் டெஃப்ளான் பூசப்பட்டிருக்கும், அவை அவற்றின் மேல்பகுதியில் நீர்ப் புகாத வகையில் தடுக்கிறது. நவீன குடைகள் பெரும்பான்மையானவை சீனாவில் தயாரிக்கப் படுகின்றன. சீனாவின் ஒரு நகரமான ஷாங்யுவில் ஆயிரம் குடை தொழிற்சாலைகள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல்.

குடைகளை, தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதமாக கூட பயன்படுத்தப்படலாம். முதன் முதலில் பிரஞ்சு ஜனாதிபதியாய் இருந்த நிக்கோலா சார்க்கோசி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கெவ்லார் பூசப்பட்ட குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.


குடைகளின் நன்மைகள் :

மழைக்காலங்களில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் இந்த குடை. நாம் மழையில் நனையாமல் இது பாதுகாக்கிறது.


சூரிய ஒளியால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் எரிச்சல்கள் குடையின் பயன்பாட்டால் குறைக்கப்படுகிறது.

எடை குறைவானதாவும், எடுத்து செல்வதற்கு வசதியாகவும் இருப்பதால் இதன் பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது.

விலை மலிவானது. எளிதில் கிடைக்கும் ஒரு பொருள். சாலையோரங்களில் சிறிய கடைகள் நடத்துபவர்கள், ஒரு பெரிய குடையை நட்டு வைத்துவிட்டு, அதன் கீழ் அவர்கள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்வர்.

சினிமாக்காரர்கள், வெட்ட வெளியில் ஷூட்டிங் நடத்தும்போது டைரக்டர், நடிகர்,நடிகைகள் வெயிலில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக ஒரு பெரிய குடையின் கீழ் அமர்ந்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

குடைகளை ஒரு ஆயுதமாக தாக்குதல்களில் பயன்படுத்தலாம், குடையின் தண்டில் ஒரு இரகசிய கத்தி மறைக்க முடியும்.

மழை மற்றும் வெயில் நாட்களுக்கான ஒரு சிறந்த பாதுகாவலன் தான் இந்த குடை. இதன் தேவை இருக்கும் போது திறந்து வைத்து கொள்வதும், தேவை தீர்ந்ததும் மடித்து வைத்து கொள்ளவும் முடிவதால் இது ஒரு சௌகரியமான பொருளாகும்.இவ்வளவு நன்மைகள் உள்ள குடையில் சில தொந்தரவுகளும் இருக்கின்றன.

தொந்தரவுகள்:

காற்று மட்டும் இதற்கு எதிரியாகும். எந்த குடையும், காற்றடிக்கும் போது பயன் படுத்த முடியாததாகிவிடும். காற்றில் அதன் கம்பிகள் உடைந்து மடங்கி விடும்.

டென்னிஸ் போன்ற விளையாட்டு மைதானங்களில் பார்க்க போகும்போது, அங்கு ஒரு பெரிய குடையின் கீழ் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருப்பர்.

அது அவர்களுக்கு சுகமாக இருக்கலாம். வெயில் படாமல் நிழலில் அமர்ந்து விளையாட்டை பார்த்து கொண்டிருப்பர். ஆனால் பின்னா ல் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய தொந்தரவாக இருக்கும்.

இன்றைய காலங்களில் விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகருக்கு கூட குடை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் மக்களின் குடை பற்றிய சிந்தனையை நாம் அறிந்து கொள்ளலாம்.


சின்ன சின்ன வரலாறு  : குடையின் கதை
 
பிப்ரவரி 14ம் தேதி. இதைப்பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அதற்குக் கொடுக்கப்படும் விளம்பரங்களினால் எல்லோருக்கும் தெரிந்துதான் ஆகவேண்டும். ஆனால் அதற்கு நான்கு நாட்களுக்கு முன் அதாவது பிப்ரவரி 10ம் தேதி, என்ன நாள் தெரியுமா?

அந்த நாள்... தேசியக் குடை நாள்.

இந்தக் குடை இருக்கிறதே. அது பெண்களுக்கான பொருளாக சில காலம் பார்க்கப்பட்டது. மழைக்கால தேவையாக சிலகாலம், பின் வெயிலுக்கான பாதுகாப்பாக சில நேரம், அல்லது அரசரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக, இன்னும் கோல்ஃப் மைதானத்தின் விளையாட்டுப்பொருளாக, நாகரீகத்தின் எடுத்துக்காட்டாக, ஏழ்மையின் சின்னமாக... என்றெல்லாம் பார்க்கப்பட்ட, பார்க்கப்படுகிற குடையின் நிலை, காலத்திற்கு ஏற்ப, நாகரீகத்திற்கு ஏற்ப, மாறும் விருப்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

ஒரு வேளை, கிருஷ்ணர் பிடித்த குடை மலை தான் உலகின் முதல் குடையாக இருக்குமோ? தெரியவில்லை. பதிவு செய்யப்பட்ட சரித்திரம் நான்காவது செஞ்சுரி பி.சி.யிலேயே ரோம், கிரேக்க நாடு,எகிப்து, தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் மழைக்காகக் குடை உபயோகத்தில் இருந்ததாகச் சொல்கிறது.

3500 வருடங்களுக்கு முன் எகிப்திய நாடுகளில் இவை பாரசோல் என்ற பெயரிடப்பட்டு பழக்கத்தில் இருந்ததாகப் பதிவாகி இருக்கிறது. பாரசோல் என்பது வெயிலில் உபயோகப்படுத்தப்பட்ட குடை. அந்தக் கால கட்டங்களில், எகிப்திய பிரபுக்கள், அரச பரம்பரை மற்றும் மதகுருக்களின் பிரத்தியேக உபயோகப் பொருளாக , ஒரு மரியாதைக்கு உரியவருக்கான பொருளாகவே குடை பார்க்கப்பட்டது.

இப்படி வெயிலிலிருந்து காப்பதற்காக அமைக்கப்பட்ட பாரசோல்கள் மெதுவாக மழைக்கான சேவைப் பொருளாக சீனர்களால் பதினோராவது சென்சுரி பி.சியில் மாற்றப்பட்டது. இங்கேயும் முதலில் இது பிரபுக்களின் பொருளாக மட்டுமே இருந்தது.

இதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, ஒருவரின் பண நிலையைக்காட்டும் விதமாகக் குடைகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு, சீன அரசரின் குடையில் நான்கு அடுக்குகள் அமைக்கப்பட்டன. அரசாங்கத்தில் உள்ளவரின் நிலைக்கு ஏற்ப இந்த அடுக்குகள் குறைக்கப்பட்டன.

இதே காலகட்டத்தில் கிரேக்கம் மற்றும் ரோம் நகரில் குடையின் நிலை சற்றே மாறுபடத்தொடங்கியது. குடை பெண்களுக்கான பிரத்யேக பொருள் என்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனால் ஆண்கள் குடை எடுத்துச் செல்வதைத் தவிர்த்தார்களாம்!

பெண்களும் தங்கள் கைகளில் குடையைப் பிடிக்காமல், அவர்களின் பணிப்பெண்களை விட்டுப் பிடித்துவரச்செய்தனர்.

ஆனால் ஒருகட்டத்தில், சிறு கால அளவில், குடை வழக்கொழிந்து போயிற்று. ரோமாபுரிப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து காணாமல் கண்ணாமூச்சி ஆடி, பின் ரினைசான்ஸ் காலத்தில் நாய்க்குடைகள் போல் கும்மென்று இவை மலர்ந்தன.

பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா என்று எங்கும் வியாபிக்கத்தொடங்கியது குடை. ஆனால் அப்போதும் குடை பெண்களின் கைப்பொருள் என்றே எல்லோரும் சொன்னார்கள்.

இந்தக் கதையையெல்லாம் உடைத்தவர் ஜோனாஸ் ஹான்வே, இங்கிலீஷ் மாக்டெலெனின் ஹாஸ்பிடலை நிறுவியவர். இவர், தான் செல்லும் இடமெல்லாம் கைகளில் ஒரு குடையோடு திரிய, 1790 வாக்கில் குடை எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு மெதுவாக பொதுஜனப்பொருளாக மாறி, மிக விரிவாக விளம்பரங்களில் காட்டத்தொடங்கிய காலமாகவும் விரிந்தது.

பிரிட்டனில் குடைக்குப் பெயர் காம்ஸ். காரணம் சார்ல்ஸ் டிக்கென்ஸின் ஒரு நாவலில் மிஸஸ் காம்ப் எப்போதும் கைகளில் குடை வைத்திருந்ததாள்.

நம் நாட்டுக்கதைக்கு வருவோம்.

மஹாபாரதத்தில் ஒரு கதை உண்டு. ஜமதக்னியின் மனைவி ரேணுகா தன் கணவர் வில்லிலிருந்து அம்பை விடும் போது உடனே சென்று அந்த அம்பைச் சேகரித்து வந்து விடுவாராம். இப்படி ஒருநாள் அம்புகளைச் சேகரிக்கச்சென்று வெகு நேரத்திற்குப் பிறகுதான் திரும்பி வந்தாராம். வந்தவுடன் கணவரிடம் கோபத்தோடு அவரை எரித்துத் தாமதப்படுத்திய சூரியனைப்பற்றிப் போட்டுக்கொடுக்க, ஜமதக்னி சூரியனை அம்பெய்தி காயப்படுத்தினராம். பயந்துபோன சூரியன் மன்னி ப்புக் கேட்டு ரேணுகாவிற்கு பாதுகாப்பாக முதல் முதலாகக் கு டை ஒன்றைத் தந்தாராம்.

இது எந்த அளவிற்கு உண்மை தெரியவில்லை. ஆனால் ஜீன் பாபிஸ்டி டவேர்னியர் பதினேழாம் நூற்றாண்டில் எழுதிய " Voyage to the East" புத்தகத்தில் முகலாய சிம்மாசனத்தின் இரு புறமும் குடைகள் இருந்ததாக பதிவு செய்திருக்கிறார்.

தற்போது உள்ள மடக்கும் மாடல் குடைகள் முதல் முதலில், 1710 ல் ஒரு பாரிஸ் வியாபாரியால் கண்டுபிடிக்கப்பட்டது.

1769ல் மெய்சன் அந்டொய்னி என்பவரால் பாரிஸ் நகரத்தில் குடைகள் வாடகைக்குக் கொடுக்கும் கடை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மிக அதிக அளவில் நடந்த குடை திருட்டைச் சமாளிக்க பாரிஸின் லெப்டினெண்ட் ஜென்ரல் ஆப் போலீஸ் ஒரு கட்டுப்பாட்டை விதித்தார். எண்ணெய் பச்சை நிறத்தில் இந்த வாடகை குடைகள் இருக்கவேண்டும் என்று. இதனால் குடை திருடர்களை மிகவும் சுலபமாக பிடிக்க இயலும் என்று. யார் கண்டது அப்போதும் திருடிய குடையை பாரீஸில் இல்லாமல் வேறு நாடுகளுக்குத் தூக்கிச்சென்று உபயோகப்படுத்தியவர்கள் இருந்திருப்பார்கள்.

ஆக, தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்த குடை, மெதுவாக தன் குடையை விரித்துக்கொண்டே போனதுதான் சரித்திரம்.

சரி, முக்கியமான ஒரு பகுதிக்கு வருவோம்.

சமீபத்தில் ரிலீஸ் ஆகி உள்ள காலாவைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு சண்டைக்காட்சியில் ஹீரோ ஆயுதம் வைத்துக்கொண்டு அவரைத் தாக்க வரும் பல நூறு பேர்களை தன் கையில் உள்ள ஒரு குடையால் அடித்து வீழ்த்துவதை. இதை நம்பமுடியாமல் நீங்கள் திகைத்திருந்தால், இதோ அதைப்போன்ற மற்றுமொரு தகவல் உங்களுக்கு.

1902 ல் The Daily Mirror குடையை ஒரு ஆயுதமாக உபயோகிப்பது எப்படி என்று ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது. 2005ல் ஆப்பிரிக்கா நாட்டில் ஒரு கணக்கு அசிஸ்டண்ட் புரொபஸர், மாணவனால் அடித்துக்கொல்லப்பட்டார். அடிப்பதற்குப் பயன்படுத்தியது குடையைத்தான்!

இந்தக் குடையால், குடும்பங்களில் பல குடைச்சல்களும் சண்டைகளும் எழும். நினைவிருக்கிறதா? மழைக்காலத்தில் குடையை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டு, திரும்பும் போது, குடையை மறதியாக எங்கேயோ விட்டுவிடுவார்கள். வெறுங்கையுடன் நுழைபவருக்கு, செம திட்டு கிடைக்கும். கல்யாணத்தன்று காசியாத்திரை செல்லும்போது குடை பிடித்துப் போனவர்கள், அப்புறம் மழைக்கு மட்டும்தான் குடையை தூசுதட்டி எடுப்பார்கள். அதன் விளைவுதான் மறதி!

நம்முடைய குடை, இன்னொருவரின் வாழ்க்கை. ஆமாம்... குடை ரிப்பேர் செய்து தருபவர்கள் வீதிவீதியாக அப்போது வருவார்கள். ‘குடை ரிப்பேர் பாக்கறதேய்... குடை சரி செய்யுறதேய்...’ என்று குரல் கொடுத்துக்கொண்டே வருவார்கள்.

இன்னொரு விஷயம்... ஒற்றுமைக்கும் இணைபிரியாமல் இருப்பதற்குமான அற்புதமானதொரு வார்த்தை... ‘ஒரு குடையின் கீழ் செயல்படுவோம்!’

அதானே... ஒரு குடையின் கீழ் செயல்படுவோமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக