செவ்வாய், 10 செப்டம்பர், 2019

உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் செப்டம்பர் 10, (World Suicide Prevention Day)


உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் செப்டம்பர் 10, (World Suicide Prevention Day)

உலகளாவிய ரீதியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 10ஆம் திகதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அனுசரிக்கப்படுகிறது. இத் தினத்தினை தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு ( (IASP), இ உலக சுகாதார‌ அமைப்பு (WHO) ஆகியன இணைந்து 2003 ஆம் ஆண்டில் இருந்து பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்துவருகிறது.

தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். முட்டாள்தனமாக, கோழைத்தனமாக, பரிதாபமாக மனிதன் எடுக்கும் முடிவுகளில் ஒன்றாகவே இது இருக்கின்றது. தற்கொலை என்பது இறப்புக்களுக்கான காரணத்தில் 13 ஆவது இடத்தை வகிக்கிறது. அதிக தற்கொலைகள் இடம்பெறும் பகுதியாக சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகள் இனங்காணப்படுகின்றன. அதேவேளை, பதிவு செய்யப்பட்ட தற்கொலைகள் குறைந்த பகுதிகளாக லத்தீன் அமெரிக்காவும் ஆசியாவின் சில சில பகுதிகளும் அறியப்பட்டுள்ளன.

''தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது'' என மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் 40 செக்கன்களுக்கு ஒரு முறை என்ற ரீதியில் 3 000 நபர்கள் தினமும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். பொதுவாக, தற்கொலை கடவுளுக்கு எதிரான செயலாக கருதப்படுகிறது.


தற்கொலைக் களங்கள்!

உலக அளவில் ஆண்டு தோறும் செப்டம்பர் 10-ம் தேதி 'உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்' (World Suicide Prevention Day) ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள்.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேரும், தமிழ்நாட்டில் சுமார் 10,000 பேரும், சென்னையில் 1300 பேரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஆண்டு தோறும் சுமார் 2 கோடி பேர் தற்கொலை முயற்சியிலிருந்து தப்புகிறார்கள்.

ஏன் தற்கொலை?

தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். ##~~##

பொதுவாக, தற்கொலை என்பது இயற்கைக்கு எதிரானச் செயலாக கருதப்படுகிறது. இந்தியாவில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் கணவனை இழந்த பெண்கள், கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. பகுத்தறிவின் பலனாக அது காலப்போக்கில் மறைந்துவிட்டது.

அதிக உடல் வேதனை, காயங்கள் - விபத்துக் காரணமாக இயங்க முடியாத நிலை போன்ற நிலைமைகளில் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்யும் வழக்கம் உள்ளது.

தான் மட்டுமே தோல்வியை சந்தித்து வருவதாகவும், தான் எதற்கும் லாயக்கு இல்லாதவன், குடும்பமே என்னை வெறுக்கிறது, எல்லா பிரச்னைகளுக்கும் நான்தான் காரணம் என்பது போன்ற எண்ணங்களே தற்கொலைக்கு முக்கிய மூலமாக இருக்கின்றன.

காரணங்கள்..!

* காதல் தோல்வி மற்றும் திருமண முறிவு
* மிகவும் சோர்வான நிலை
* தீராத பிரச்னைகள் - நோய்கள் (புற்றுநோய், பக்கவாதம்)
* பாலியல் பலாத்காரம்
* தேர்வில் தோல்வி
* தாம்பத்திய உறவில் சந்தேகம்
* குழந்தை இல்லாமை
* போதை - மது பழக்கம் அடிமை
* திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம்
* கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்
* கடன் - சொத்து பிரச்னை
* வேலையின்மை அல்லது வேலை இழப்பு
* வியாபாரம்/தொழிலில் பிரச்னை

எப்போது நடக்கிறது?

பொதுவாக தனிமையில் இருக்கும் போது இரவு 12 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் அல்லது பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) தான் தற்கொலைகள் நடக்கின்றன.


உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென் இந்தியாவில்தான் அதிகம்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நாட்டின் மொத்த எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் சென்னையில் தற்கொலை செய்து கொள்வோர் மற்றும் முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதம் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது காவல் நிலையங்களில் பதிவான வழங்குகளின் அடிப்படையிலான விவரம். பதிவு செய்யப்படாதவை இவற்றை விட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

மருத்துவத் தீர்வு..!

உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மூலம் தற்கொலை எண்ணங்களை தவிர்க்க முடியும். மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை போக்க குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் முக்கியமாக தேவை.

சிநேகா தற்கொலை தடுப்பு மையம் (பெசன்ட் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14, 044 - 2835 2345) பொன்றவை தற்கொலைக்கு முயன்றவர்களை தடுத்து அவர்கள் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடாதவாறு செய்து வருகிறார்கள்.

உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மீண்டு(ம்) வாழ்கிறோம் என்ற தலைப்பில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்பிழைத்தவர்கள் மனம் திறந்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் இந்தத் தினத்தில் நடக்கிறது.

தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்னை அல்ல. தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், இரட்டை மனநிலையில் இருக்கிறார்கள். அதவாது, ஒரு புறம் வாழத் துடிக்கிறார்கள். அது முடியாத போதுதான் தற்கொலைக்கு வருகிறார்கள். அது ஒரு சமூதாயத்தின் பிரச்னை என்பதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நாட்டில் தற்கொலைகளை தடுக்க முடியும் என்பதே நிதர்சன உண்மை.

சமூக நோக்கத்துக்காக..!

பெரும்பாலான தற்கொலை தனக்காக நடக்கும் நிலையில் உலகில் அத்திப்பூத்தாற் சில தற்கொலைகள் சமூக நோக்கிற்காக நடக்கவும் செய்கிறது.

முத்துக்குமார், செங்கொடி முதல் துனீசியாவின் முகமது புவாஸிஸி (Mohamed Bouazizi) வரை பலரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி தன்னையை தீக்கு இரையாகினார், முத்துக்குமார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்டார், செங்கொடி.

துனிசீயாவைச் சேர்ந்த முகமது புவாஸிஸி என்ற 26 வயது இளைஞனின் தற்கொலை, அந்த நாட்டில் அரசியல் புரட்சிக்கு வித்திட்டது. முகமது வேலைக்காக ராணுவத்தில் சேர முயற்சி எடுத்தார். லஞ்ச ஊழல நிறைந்திருந்த அந்த நாட்டில் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. பல வேலைகளுக்கு முயற்சி செய்து முடியாமல் போகவே, தெருக்களில் காய்கறி விற்று பிழைப்பு நடத்தினர். அதற்கும் மாமூல் கேட்டு அதிகாரிகள் அராஜகம் செய்தனர். ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் ஒருவர் முகமதுவை அடித்துவிட, மனம் வெறுத்த அவர், இது போன்ற பிரச்னை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று தனக்கு தானே நெருப்பு வைத்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் கடந்த 2010, டிசம்பர் 17-ம் தேதி நடந்தது. உயிருக்கு போராடிய முகமது 2011, ஜனவரி 4-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் துனீசியா நாட்டு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. போராட்டத்தை தூண்டியது. விளைவு.. 23 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிபர் பென் அலி பதவி இழந்தார். இந்தப் புரட்சி, இதர அரபு நாடுகளுக்கும் பரவியது.

மக்கள் பிரச்னைகளில் நல்வழி காட்டும் நம்பத்தகுந்த அரசியல் தலைமைகள், சமூகப் போராளிகளின் முயற்சிகளுடன், பிறர் நலம் பேணும் மனோபாவத்துடன் மக்களும் நியாயத்துக்காக போராட முன்வருவது மட்டுமே சமூக நோக்கத்துக்காக தன்னுயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுப்பதற்கான வழி!


 உலக தற்கொலை தடுப்பு தினம்: மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணை அழைக்கலாம்

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 104 மருத்துவ உதவி சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


104 என்ற எண்ணில் மருத்துவ உதவி சேவை மையம் 24 மணி நேரமும் மருத்துவ தகவல் உடல்நலம் மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யோகா-இயற்கை டாக்டர்களும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மை, எண்ணச்சிதறல்கள், மனஅழுத்தம், தன் நம்பிக்கையின்மை, நினைவாற்றலை பெருக்குவது, உறவுகளிடையே ஏற்படும் பூசல், பயம், தோல்வியை துணிவுடன் எதிர்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காக 104 சேவை மையத்தில் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து 24 மணி நேரமும் அழைப்புகள் பெறப்படுகின்றன.

இவற்றில் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்காக அழைத்தவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி, நம்பிக்கையூட்டி மீண்டும் வெற்றியடைய வழிகாட்டியாகவும் 104 மருத்துவ உதவி மையம் செயல்படுகிறது. இதுவரை 725 தற்கொலைகள் எண்ணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மனம் திறந்து பேசினால் இப்படிப்பட்ட தவறான முடிவுகளில் இருந்து நிச்சயம் வெளிவர முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...!

இன்று (செப்டம்பர் 10-ந்தேதி) உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம். மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு.

இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக இடத்தையும், தற்கொலை செய்யும் முறையையும் மிகவும் கடினமானதாக அமைத்துக்கொள்வர். ஒருமுறை தற்கொலை முயற்சியை மேற்கொண்டவர்கள் தகுந்த ஆற்றுபடுத்துதல் இல்லாவிட்டால் மறுபடியும் தற்கொலை முயற்சி எடுப்பது திண்ணம். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் முறையை வழிவகுப்பது அல்லது யோசிக்காமல் எடுக்கும் முடிவு எடுப்பவர்களாக இருப்பார்கள்.

இந்த இரு வகையினருக்கும் உள்ள ஒற்றுமைகள் தங்கள் பிரச்சினைக்கு தற்கொலை ஒன்றே தீர்வு என்று நம்புவது தான். மன வலியில் இருந்து விடுதலை பெறுவதற்கும், உடல் நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கும், வாழ்க்கையை சரியான முறையில் கையாளத் தெரியாமையால் இந்த விபரீத முடிவை மேற்கொள்கின்றனர். தாங்கள், அதிகம் நேசிக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரின் பிரிவை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதை தாங்கி கொள்ளமுடியாத இளைஞர்கள் தற்கொலை முடிவை மேற்கொள்கின்றனர். கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி, சில இடங்களில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர்.


ஒருவர் மன அழுத்தம் அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டால் அது அவர்கள் செய்த பாவத்துக்கு கிடைத்த சன்மானம் என்று கருதுகிறார்கள். அது தவறு. சர்க்கரை நோய், இருதய நோய் ஏற்படுவதைப் போல் மூளையில் ஏற்படும் ரசாயன குறைபாட்டாலும், மாற்றத்தாலும் விளைவதே இந்த நோய். இதைக்கண்டு வெட்கப்பட வேண்டாம். அவர்களை ஒதுக்கவும் வேண்டாம், உதாசினப்படுத்தவும் வேண்டாம். அவர்களை நம்மில் ஒருவராக கருதி தகுந்த மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ள ஊக்குவிப்பது அவசியம் என்பதால் இந்த வருடம் உலக சுகாதார நிறுவனம் தற்கொலையை தடுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதை கருத்தாக அறிவித்து உள்ளது. ஆகவே தற்கொலை எண்ணம் உள்ளவர்களும் அதை மறந்துவிட்டு தகுந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் நட்பு வட்டாரங்கள் அல்லது உறவினர்கள் இவர்கள் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் தென்பட்டால் அதை லேசாக ஒதுக்கிவிடாமல் அவர்களிடம் மனம் விட்டு பேசி தகுந்த ஆலோசனைகளை பெற அழைத்து செல்வது அவசியம். இன்றளவும் மனநோய் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக பேசுவதில் தயக்கமாகவும், அவமானமாகவும் கருதுவது உண்டு. ஆகையால் ஒவ்வொரு தனிமனிதனும், அரசாங்கமும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

முதலில் ஒரு பிரச்சினை உண்டு என்று இருந்தால் அதற்கு தீர்வு உண்டு என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். ஆயினும் தற்கொலையை தடுப்பது இந்நாளின் முக்கிய நோக்கமாகும். தற்கொலை செய்து கொள்ள தூண்டும் காரணங்களில் இன்றளவும் இதுவே முக்கிய காரணம் என்று எவராலும் குறிப்பிட்டுக் கூற இயலவில்லை. ஆயினும் மன அழுத்தம், மனச்சிதைவு நோய், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமை, போதை பழக்கம், குடும்ப உறவில் சிக்கல் போன்ற காரணங்கள் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் காரணிகள் என்று ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது என்பதை நாமும் உணர்ந்து மற்றவர்களையும் உணரச் செய்வது தலையாய கடமையாகும். உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தகுந்த உளவியலாளரிடம் சென்று அவர்களின் வழிகாட்டுதல் மூலமும், ஆற்றுப்படுத்துதல் மூலமும் தெளிவு பெற இயலும் என்பதை உணர்ந்து மனநலத்தைப் பேணவேண்டியது அவசியம்.

உளவியல் வல்லுனரை அல்லது மனநல மருத்துவரை சந்திப்பதைக்கண்டு வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மன நோயையும், மற்ற நோய் போன்றே என்று புரிந்து கொள்ளவேண்டும்.


ஒருவர் தற்கொலை முயற்சி செய்தால் அவரைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டும்?முதல் 48 மணி நேரத்திற்கு தகுந்த மருத்துவமனையில் அனுமதித்து தீவிரமாக அவர்களைக் கண்காணிக்கவேண்டியது அவசியம். இல்லையேல் மறுமுறை தற்கொலை முயற்சி செய்ய முனைவார்கள். பின்னர் சிலகாலம் அதாவது சில வாரங்கள் வரை தற்கொலை செய்ய உதவும் உபகரணங்களை அவர்கள் முன் வைக்காமல் இருப்பது, குடும்பத்தாரும், நண்பர்களும் அவர்கள் உணர்வை புரிந்து அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது. பின்னர் இந்த தற்கொலை செயலுக்குக் காரணமாக ஏதாவது உடல் ரீதியான பிரச்சினை அல்லது மனரீதியான பிரச்சினை அல்லது போதைப்பழக்கம் உள்ளதா என்று ஆராயவேண்டும். பலநாள் வரை அதாவது சில மாதங்கள் வரை குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே அவர்கள் இருத்தல் அவசியம். மன நோய் அல்லது போதைப்பழக்கத்திற்கான மருத்துவப் பரிந்துரை அவசியம். பின்னர் பிரச்சினைகளைக் கையாளும் திறனை வளர்த்துக்கொள்ள உதவுதல் முக்கியமான படிகளாகும். சற்று ஆராய்ந்து பார்க்கையில் தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றத்தை எளிதில் ஏற்கும் பக்குவம் இல்லாமை, வேலை இல்லாமை, சமுதாயத்தில் இருந்து விலகி அல்லது விலக்கி வைக்கப்படுவது, ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு தீரா காயத்தை ஏற்படுத்தி விடுவது இயல்பு. ஆனால் இந்த காரணங்கள் தன் திடமனத்தாலும், தன் மீது நம்பிக்கை வைத்தாலும் ஜெயிக்க இயலும் என்பது முற்றிலுமாக நம்ப மறுக்கிறார்கள்.

இவர்களை இனம் கண்டு நாம் நேசக்கரம் நீட்டி, ஆதரித்து வெற்றிப்பாதையில் பயணிக்க உறுதுணையாக நிற்போம் என்று இந் நாளில் உறுதி எடுக்கவேண்டும் என்பதே நமது நோக்கம். பள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வர தற்கொலை எண்ணமும் வரும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றுவது அவசியம். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட சிறார்களும் இதை வெளியில் சொல்ல பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது இன்றளவும் நடந்து வருகிறது. ஆகையால் ஆற்றுப்படுத்துதலும், வழிகாட்டுதலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிப்பதால், இன்றளவும் மனநோய் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக பேசுவதில் தயக்கமாகவும், அவமானமாகவும் கருதுவது உண்டு,

ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் மனநோய் வல்லுனர்கள் இருப்பது அவசியம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவரை மனநோயில் இருந்து காப்பாற்ற ஏதுவாக இருக்கும். நாம் வாழப்பிறந்தவர்கள். வெற்றி தோல்வியைத் தாண்டி, அதில் கிடைக்கும் அனுபவத்தைக்கொண்டு நம் வாழ்க்கையை நேர் செய்ய இயலும். நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு வெற்றிநடை போட ஒவ்வொருவரும் உறுதி எடுக்கவேண்டும். சோதனைகளை தடைக்கற்களாக எண்ணாமல் நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால் நிச்சயம் தற்கொலை எண்ணம் நம் மனதில் உருவாகாது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. வாழ்ந்து பார் வாழ்க்கை சுகமானது. வாழ்வோம் மற்றவரையும் வாழ செய்வோம்.
- டாக்டர் நற்பின்னை சேரன், உளவியல் வல்லுனர், தனியார் மருத்துவ கல்லூரி, காஞ்சீபுரம்.


’சொல்றவன் செய்ய மாட்டான்னு அலட்சியம் வேண்டாம்’ - தற்கொலை தடுப்பு நாள்


’சொல்றவன் செய்ய மாட்டான்னு அலட்சியம் வேண்டாம்’ - தற்கொலை தடுப்பு நாள்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்கொலை என்பது தடுக்கக் கூடிய ஒரு விஷயம்தான் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் அடிப்படை நோக்கமாகும்.

உலக தற்கொலை தடுப்பு தினம் முதன்முதலாக 2000ஆம் ஆண்டு சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு மற்றும் உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் முயற்சியினால் கொண்டாடப்பட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.


உலகின் ஏதொவொரு மூலையில் உள்ள ஒருவர் தற்கொலைக்கு ஒவ்வொரு நிமிடமும் முயன்று கொண்டிருக்கிறார் என்கிறார் ‘மைண்ட் ஸோன்’ உளவியல் கிளிக்னிக்கின் நிறுவனர் டாக்டர் சுனில். ‘ஒவ்வொரு நான்கு நொடிக்கும் ஒருமுறை தற்கொலை நடக்கிறது. தன் வாழ்நாளில் தற்கொலையைப் பற்றி யோசிக்காத மனிதர்கள் மிகக் குறைவு. தற்கொலை என்பது ஒருவகை மனநோயின் வெளிபாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்னை. தற்கொலைக்கு இதுதான் காரணம் என்று ஒற்றைக் காரணத்தை வரையறுத்துக் கூற முடியாது. குடும்ப வன்முறைகள், உறவுச் சிக்கல்கள், காதல் தோல்வி, நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை என்கிற விரக்தி மனப்பான்மை, மதுபோதை, சிதையும் குடும்ப அமைப்பு என பல காரணங்கள் உள்ளன. இந்தியா போன்ற நாட்டில் அரசியல், பொருளாதாரக் காரணங்களால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவது மிகவும் கவலையடைக் கூடிய விஷயம்.

ஒரு தனிமனிதன் தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள தற்கொலை செய்துகொள்கிறான். நான் இந்தத் தவறை செய்து விட்டேன். அதனால் இதிலிருந்து எனக்கு தண்டனை வேண்டும் என்று தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு. அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர்கள் உண்டு. உதாரணமாக தமிழகத்தில் முத்துக்குமார், செங்கொடியின் தற்கொலையும் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலாவின் தற்கொலையும் அரசியல் காரணக்களுக்காக செய்யப்பட்ட தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ’நான் எவ்வளவு நல்லவன்னு அவங்க புரிஞ்சக்கணும்’ என்று ஒரு விஷயத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு. மனதளவில் ஏற்படும் மாற்றங்கள். குறிப்பாக அதீத வேதனை, நோயின் வலியை தாங்க முடியாமை, தொழிலில் ஏற்படும் தோல்வி என Mood regulation காரணமாகத் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.

சமூகக் காரணம் என்று பார்க்கும்போது மாறி வரும் உலகத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள இயலாத நபர் தற்கொலைக்கு முயல்கிறார். பெருகிவரும் போட்டிக்கு ஏற்ப தன்னை உயர்த்திக்கொள்ள இயலாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு. இப்படி ஒருவன் தற்கொலைக்குப் பின்னால், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்ற காரணங்கள் இருந்தாலும், தனிமனிதனுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால்தான் அதிக தற்கொலைகள் நடைபெறுகின்றன. தீராத மன அழுத்தம் சீசோபெர்னியா எனும் மனநோய் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்கிறார் டாக்டர் சுனில்.

இது குறித்து டாக்டர் ஜெயசுதா காமராஜ் கூறுகையில், ‘பொதுவாகவே நம் சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்பவர்கள் தற்கொலை செய்ய மாட்டார்கள். ஆனால், உண்மை அதற்கு மாறானது. பதினைந்து முறை தற்கொலைக்கு முயன்றவர், இறுதியில் ஒரு முயற்சியில் வெற்றி பெற்று இறந்து விடுகிறார். அதேபோல் பெண்கள்தான் அதிக அளவில் தற்கொலைக்கு முயல்வார்கள். ஆனால், அதை நிறைவு செய்ய மாட்டார்கள். குறிப்பாக தனித்து வாழும் பெண்கள், விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்குப் பின்னால் பல சமூகக் காரணங்கள் உள்ளன. அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வது ஆண்கள்தான் என்கின்றன புள்ளி விவரங்கள். குடும்பத்தில் இதற்கு முன்பு வேறு யாரேனும் தற்கொலை செய்து கொண்டிருந்தால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் வரும். இப்படியான எண்ணம் வரும்போதே அதை மனநல அவசரம் என்று கருதி தகுந்த மனநல மருத்துவரை அணுகுவதுதான் இந்த பிரச்னையைத் தடுக்க உதவும். மிக முக்கியமாக வீட்டில் யாரேனும் நீண்ட நாட்களுக்கு சோகத்துடனும் தனிமையிலும் உழன்று வந்தால் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களை பேச அனுமதிக்க வேண்டும். நாம் அட்வைஸ் செய்கிறோம் என்கிற பெயரில் நீண்ட லெக்சர் தரக்கூடாது என்கிறார்’ டாக்டர் ஜெயசுதா.


‘குறிப்பாக சட்டென முடிவெடுக்கும் இளைஞர்களிடத்தில் உஷாராக இருக்க வேண்டும். மது குடித்துவிட்டு தற்கொலை பற்றிப் பேசுகிறவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்களது பேச்சைக் கவனிப்பது முக்கியம்’ என்கிறார் ஜெயசுதா. இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியம், ஒவ்வொருவரிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும். அன்பும் பரிவும் மட்டுமே தற்கொலையைத் தடுக்கும்.


தற்கொலையை தவிர்ப்பது எப்படி?

sucideவேறெந்த தாவரம் விலங்கினத்திடம் காணமுடியாத ஒரு வினோத வியாதி மனிதனிடமுண்டு இயற்கைக்கு புறம்பான,படைப்புக்கு முரணான,பரிணாமத்திற்கு பழக்கமில்லாத இந்த பரிதாப நோய், எங்கே என்று எப்படி ஏன்ட என புரியாது தொடங்கி தொடர்ந்து பல்கி பெருகி வரும் இந்த கொடுமையான குழப்பம்,என்று மாறுமென்றும் தெரியவுமில்லை.

தாங்க முடியாத துயரத்துக்கு மனிதன் கண்டறிந்த மகத்தான மருத்துவம் இதுதானா? துன்பமான ஐந்த மனித உயிருக்கு மனம் கண்டுபிடித்த மாற்று வழி சரிதானா?

நோய்க்கு மருந்து மரணம? காயத்துக்கு சிகிச்சை கையை வெட்டுவதா தோல்விக்கு பரிசு தூக்கு தண்டனையா?

மற்றவரை தண்டிக்க சுய தண்டனையா?அடக்க முடியாத ஆத்திரம்,அவமானம் குற்ற உணர்வு,சோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் உச்ச கட்டம்,தற்கொலை.

ஒவ்வொரு தற்கொலையும் மனிதன் இறைவனின் மகத்தான படைப்பு என்பதை மறுசிந்தனை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையே ஒரு நொடி அதிர வைக்கிறது.

பலருக்கு தினம் செய்தி தாளில் படித்து படித்து பழக்கமாகி விட்டதோ என்னவோ இறப்பவரை விட இருப்பவரை வாழ் நாள் முழுதும் வதைக்கும் இந்த கொடூர செயல்கள் முடிவுக்கு வருமா?

ஆயிரம் வருடத்திற்கு முந்தைய பழைய இலக்கியங்களில் தற்கொலை செய்திகள் அபூர்வமாகவே காணப்படுகிறது.

சமீப காலத்தில் நவீன வாழ்வின் விளைவு அதிகமாக தற்கொலை நடைபெறுகிறது.

10 வயது முதல் 90 வயது வரை கிராமம் நகர்புறம் ஏழை பணக்காரர் பாமரர் படித்த்வர் தேசம் காலம் வித்யாசமின்றி பரவலாக நடைபெறும் இந்த அவலம் ஏன் என பல நூறு விதமான ஆராய்வுகள் நடை பெறுகின்றன.

நாளுக்கு நாள் தற்கொலை அதிகமாகி கொண்டே போகிறதே ஒழிய குறைந்தபாடாக தெரியவில்லை


தற்கொலை என்பது என்ன

1.அது விரக்தியா? வேதனையா?
2.அது சோகமா? சோர்வா?
3.அது அவசரமா? ஆத்திரமா?
4. அது கொதிப்பா? கோபமா?
5.அது குற்றஉணர்வா? சுயதண்டனையா?
6.அது வெறுப்பா? பழிவாங்குதலா?
7. அது பேயா ? நோயா?
8. அது குடும்பத்தாலா? சமூகத்தாலா?
9.அது வறுமையாலா ? வளமையினாலா ?
10.அது தோல்வியா ? வெற்றியா?
11.அது அறிவாலா ?அறியாமையாலா?

ஆயிரமாயிரம் கேள்விகள் அதற்கு ஆயிரமாயிரம் பதில்கள்.ஒவ்வொரு தற்கொலைக்கும் ஒரு புதுவித காரணம் ஆனால் பொதுவாக பரவலாக சில காரணங்கள் உண்டு.

விவரம் தெரிந்த வயது முதல் நினைவு பதிவுள்ள நாள் தொடங்கி தற்கொலை எண்ணங்கள் ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனத்திலும் ஆழமாக தொடர்கிறது.

ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல வாழ்வின் ஆசை மரணத்தின் ஆசை பிரிக்க முடியாத உடலின் இரு பாகங்கள் போல தொடர்ந்து வருகிறது.

இன்பம் வரும் போது வாழ்வின் ஆசை வருகிறது துன்பம் வரும் போது மரண ஆசை வருகிறது வெற்றி வரும் போது வாழ்வுசுவையாக தோன்றுகிறது.தோல்வி வரும் போது வாழ்வு சுமையாக தெரிகிறது.

இது போல துக்கமும் மகிழ்ச்சியும் மாறி மாறி வாழ்வு முழுவதும் தொடரும் போது மரண ஆசையும் வாழும் ஆசையும் நிலவு போல குறைந்தும் வளர்ந்தும் தொடர்கிறது. இந்த சுழற்சிதொடர் நிகழ்ச்சியாக பிறப்பு முதல் இறப்பு வரை சக்கரம் போல சுழல்கிறது.

எனவே உயிர் என்பது இன்ப குறிக்கோளை அடிப்படையாக கொண்டது.

அத்தியவசயமான அடிப்படை தேவைகள் தீர்ந்தால் இன்பமாகவும் தீராவிட்டால் துன்பமாகவும் அமைகிறது. உணவு தேவை என்பது பசி என்ற துன்பமாக பதிவாகிறது.சாப்பிடும் போது இன்பமாகவும் பசி பட்டினி என்பதும் துயரமாகவும் மாறுகிறது.

உணவு என்ற தீர்வு கிடைக்காத போது பட்டினி என்ற துயரத்திற்கு தீர்வாக மரண “ஆசை” வளர்கிறது.மரண ஆசை என்ற வார்த்தை வினோதமாக இருக்கலாம் ஆனால் அது மனித குலத்துக்கு வளர்ந்தது உண்மை உலகில் மற்ற எல்லா சீவராசிகளும் பசியும் பட்டினியும் தொடர்ந்து உயிர் விட்டாலும்கூட அதற்கு “மாற்று தீர்வு” என்று ஒன்று பற்றி அது யோசித்தது கூட இல்லை.

ஆனால் ம்னிதன் என்ற மாபெரும் சிந்தனை வாதிசெயற்கையான ஒரு குறுக்கு வழியை கண்டறிந்தான் தூயரத்திற்கு சுலபமான தீர்வு தற்கொலைதான் என்று அதற்கு பிறகு கோடானு கோடி பேர் தவறு என்று சொன்னாலும் அவர்களுடைய மனதிலே கூட விச செடி இது மறைந்து கிடக்கிறது

நேரமும் காலமும் சூழலும் கனிந்து வ்ரும் போது இந்த நச்சு விதை முளை விட்டு வளர்ந்து விசுவரூபமடைந்து விருட்சமாக வளர்கிறது.தற்கொலையைதூண்டி வெற்றிகரமாக தோன்றுகிறது

இந்த விச சிந்தனை வளர்வதற்கு காரணங்களென்ன? முன்பே சொன்னது போல ஒவ்வொரு தற்கொலை முயற்சிக்கும் ஒவ்வொரு புது காரணம் உண்டு.ஆனாலும் சில பொது காரணங்கள் உண்டு

வாழ்வு பிடிக்காமல் போவது, மரணத்தை விரும்புவது என படிபடியாக வளரும் விச எண்ணங்கள் தற்கொலை முயற்சியை தூண்டுகிறது துரதிக்ஷ்டவசமாக பலர் இதில் வெற்றி அடைகிறார்கள்.

முதலில் பார்த்தது போல பட்டினி துயரத்திற்கு வலி நிவாரணியாக பல ஆண்டுகள் முன்பு துவங்கிய இந்த தற்கொலை தீர்வு காலப்போக்கில் பரிணாமமடைந்தது

நமது தேவைகளின் பட்டியல் நீண்டு நீண்டு விண்வெளியையும் தாண்டி தாண்டி சென்றுவிட்டது.

வெறும் உணவு, உறவு, உறக்கம், உறை என வளர்ந்த பட்டியல் பிறகு பணம்,பதவி என உயர்ந்தது அது பறந்து பறந்து நிலவு,சூர்யன் என நீண்டுவிட்டது.

இமயத்தை தொட்டாலும் வானத்தில் ஏறு என தொடர்கிறது.இந்த ஆசையும் ஆர்வமும் வாழ்வின் ஆசையில் முளை விட்டு வளர்ந்தது.ஆனால் நடைமுறையில் நாம் எதிர்பார்த்தது பெரும்பாலும் நடப்பதில்லை.எப்போதும் எதிர்பாராத துயரங்களே நடக்கிறது.

அப்போதெல்லாம் வாழ்வின் ஆசை காற்று போன பலூன் போல சுருங்கி விடுகிறது.அந்த இடத்தில் மரண ‘ஆசை’ வேர் விட்டு வளர்கிறது.

வாழ்வின் ஆசை மூன்று கால்களில் நடக்கிறது.ஒன்று நமது கடந்த காலம் என்ற சாதனைகள் பிறகு நிகழ்காலம் என்ற நமது பந்தங்களும் சொந்தங்களும் மற்றது எதிர்காலம் என்ற திட்டங்களும் நம்பிக்கைகளும்.

நான் ஏன் பிறந்தேன் உபயோகமில்லாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை முதல் படியில் ஏறுகிறது.எனக்கு யாருமில்லை அனாதை என்ற சுய பச்சாதாபம் இரண்டாவது.மேலும் படியில் ஏற்றுகிறது.மூன்றாவதாக எனக்கு எதிர்காலமில்லை என்ற அவ நம்பிக்கை முழுமையாக தூக்கு மேடையில் ஏற்றுகிறது.

மற்றபடி தற்கொலையை தூண்டும் காரணிகள் என்று சொல்லப்படும் பல காரணங்கள் உண்மையில் மாயத்தோற்றமே.

உதாரணமாக மயிலிறகு போல மென்மையானது என்றாலும் எடை கூட கூட அச்சு பாரம் தாங்காது விரிசல் கூடும்.ஆனால் இறுதியாக ஒரு சிறு மயிலிறகு வைத்ததும் அச்சு இற்று உடையும்.ஆனால் பார்ப்பவர் கண்களுக்கு இந்த மயிலிறகு ஒன்று தான் அனைத்துக்கும் காரணம் என முக்யத்துவம் கொடுக்க தோன்றும்.

பணம் பழம் விழுத்து விழ தயாராக இருந்தாலும் காகம் உட்கார்ந்தது தான் உலகில் முக்யமாக பேசப்படும்.

ஆனால் பிறப்பு,வளர்ப்பு,கடந்த காலம்,நிகழ்காலம்,இயல்பு, நிகழ்வு என்ற பல நூறு முந்தைய காரணங்கள் ஒன்று கூடி தர்கொலை மேடையை அமைத்து விடுகின்றன.

இறுதியில் ஒரு சிறு காரணம் காரணியாக அமைகிறது.ஒவ்வொரு தற்கொலையையும் பிரேத பரிசோதனை செய்தால் அதன் பரிணாம வளர்ச்சி நன்கு புரியும்.

‘இவன்’அந்த வீட்டில் நான்காவது ‘வேண்டாத’குழந்தையாக வந்து பிறந்தான்.எல்லோருக்கும் செல்ல தம்பி ஆனாலும் ‘எடுபிடி’ வேலை முரணான கட்டளைகள் முரட்டு கட்டுபாட்டு வேலிகள்.அன்பில்லாத ஒரு விரக்தியான அன்னை,தந்தையோ குடித்தே சொத்தையும் தன்னையும் கூடவே குடும்பத்தையும் அழித்தவர்.

இவனோ ஆசிரியருக்கும் அடங்காது அனைவருக்கும் பணியாது படிப்பை விட்டு காதலித்து தோல்வியடைந்து வாழ்வில் சருக்குகிறான்.

போதை பழக்கம்,உறவுகளால் ஒதுக்கபட்டு தானாக ஒரு ஆதரவற்ற மூத்தபெண்ணுடன் முறையற்ற உறவு முறையில் வாழ்கிறான் வாங்கிய கடன்களை அடைக்க முடியாது வாடுகிறான்.

அப்போது கடன் கொடுத்தவர் தரக்குறைவாக பேசியது ஏசியது தாங்காது ரயிலில் விழுந்து மாள்கிறான் காவல்துறை வயிற்று வலி தாங்காத மரணம் என தற்கொலைக்கு காரணக் கணக்கு எழுதி விடும்.

ஊரும் உறவும் ஏசியவரை ஏசி விட்டு ஓய்ந்து விடும் ஆனால் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தற்கொலைக்கு பல காரணங்களின் கூட்டனி இருப்பது புரியும்.

முன்பே பார்த்த மாதிரி பல நூறு காரணங்கள் பல்வேறு காலகட்டங்களில் சுழன்று வரும் இறுதியாக அந்த சூழலில் ஒரு உணர்வு இறுதி முடிவுக்கு வழியாகும்.

எனவே நிச்சயமாக தற்கொலைக்கு முன்னதாகவே அவர் ஆயிரமாயிரம் எச்சரிக்கைகள் கொடுக்கிறார் ஆனால் பலரும் அதை சுலபமாக புரிந்து கொள்வதில்லை இழந்த பின் அழுது என்ன பயன்?

ஆகவே தர்கொலை எண்ணம் உருவாகாமல் தன்னைத் தானே காத்து கொள்வது சிறந்தது ஆனால் அப்படி ஒருவரால் இயலாத போது மற்றவர் எல்லோரும் அவரை காப்பாற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

குரைக்கிற நாய் கடிக்காது என அவரை அலட்சியபடுத்துவது ஆபத்து.

ஆறுதல் ஆற்றுபடுத்துதல் அன்பு பரிவு போன்ற மன நல ஆலோசனைகள் அவசியம்.ஆழமாக ஆராய்ந்து அவரது சிக்கல்களுக்கு தீர்வு காண்பிக்க வேண்டும்.

இடமாற்றம் மன மாற்றம் சூழல் மாற்றம் யாவும் உபயோகமானது முறையான பயிற்சி பெற்ற தற்கொலை தடுப்பு ஆலோசனைகள் தேவை.

கண்துடைப்புக்காக ஒப்புக்காக உபயோகமற்ற கண்டிப்புகளும் தண்டனைகளும் தற்காலிக நிவாரணங்களும் ஆபத்தானவை.

மனபதட்டம் மனசுழற்சி மனசோர்வு மனஎழுச்சி மனசிதைவு தீய வழக்கங்கள்,போதை பழக்கங்கள் உடலுறவு பிரச்சனைகள் போன்ற பல தீவிரமான மன நல தாக்கங்களும் தற்கொலைக்கு தூண்டுதல்களாக அமைகிறது.எனவே மன நல மருத்துவ சிகிச்சைகள் அவசியமானது.
எனவே தற்கொலை தடுப்பு முயற்சிகள் தீவிரமாக மேர் கொள்ளபட வேண்டும்
தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டவுடன் பெரும்பாலானவர்கள் அதை மறைக்கவே முயற்சி செய்கிறார்கள்.

அதை வெளிப்படுத்தினால் தன்னை எல்லோரும் ஏளன‌மாக அவமானமாக துணிவில்லாத கோழையாக நினைப்பாரோ என்றதொரு அச்சமே அவர்களை தடுகிறது.

இரண்டாவதாக மற்றவருக்கு தெரிந்தால் தனது ‘முயற்சி’யில் தோல்வியடைவோம் வெற்றி கரமாக தற்கொலை செய்து தப்பித்து கொள்ள முடியாது என்ற ‘அச்சமும்’காரணமாகிறது.

எனவே அவர் எப்படியாவது இந்த அச்சங்களை மீறி தன் உள்ளத்தை யாராவது ஒருவரிடம் வெளிபடுத்த வேண்டும்.அல்லது கடிதம் ,தொலைபேசி அல்லது ஏதாவது ஒரு வழி மூலம் மறைமுகமாவது தனது ஆழ்மனதை சொல்ல முயற்சிக்க வேண்டும்.

இதை கேட்பவர் யாரும் அதை பயமுறுத்தல்,ஏமாற்றுதல்,blackmail என்று ஏளனம் செய்யாது மனிதாபிமான விஞ்ஞான ரீதியான மன நல மனோதத்துவ மருத்துவ சிகிச்சைகளை கொடுக்க வேண்டும்.

இயன்ற அளவு அவரது சமூக பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கவோ,குறைக்கவோ முயற்சிக்க வேண்டும்.

பல நேரங்களில் ஒரே ஒரு சிறிய பார்வை, வார்த்தை, பாடல் கூட பல தற்கொலை முயற்சிகளை தடுத்து நிறுத்தியிருக்கிறது உலகில் தன்னை நேசிக்க ஒரு உயிருண்டு என்ற எண்ணம் பலரை வாழ வைத்திருக்கிறது. ஒரே ஒரு சிறிய அதிட்டமான சுப சம்பவம் கூட பலரை புதிய புணர் வாழ்வுக்கு மாற்றியிருக்கிறது. தீவிர முயற்சி செய்தால் நிச்சயம் தற்கொலையை தடுக்கலாம்.


நன்றி விகடன்,புண்ணியமீன்,தினத்தந்தி.
மின்னம்பலம்

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக