வியாழன், 26 செப்டம்பர், 2019

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.


தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.

சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். 
 சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.
இவர்  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர். கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர். தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.       
  எத்தனையோ இடர்பாடுகளை கடந்து ‘தினத்தந்தி’ இன்று உயர்ந்து நிற்கிறது. பத்திரிகை நடத்தும்போது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கையில் பணம் இல்லை என்ற நிலையில், ‘சேட்டிடம்’ வெற்றுத்தாளில் கையெழுத்திட்டுப் பணம் பெற்று ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். தான் வேறு, தொழிலாளர்கள் வேறு என்று அவர் ஒருபோதும் நினைத்தது இல்லை.
  காகிதம் கிடைக்காத காலத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து காகிதக் கூழ் காய்த்து, ‘காலை முதல் மாலை’ வரை அதைக் காகிதமாக மாற்ற உழைத்தார். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பத்திரிகை நடத்தினார். ‘தினத்தந்தி’ அரசியல் மாற்றத்திற்கு மிகப்பெரிய கருவியாக இருக்கிறது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்று வாழ்ந்தவர். அந்தத் தொடரைஅறிமுகப்படுத்திய ஆதித்தனாரிடம் இருந்து விடாமுயற்சியை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
  தன் கோட்பாட்டில் உறுதியோடு வாழ்ந்தார். தமிழர் என்று சொன்னால் சி.பா.ஆதித்தனார்தான் முன் நிற்கிறார். தமிழுக்கும், தமிழர்களுக்கும் உச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார். எங்களுக்குப் பரிசளிக்கும் செய்தியை ‘தினத்தந்தி’யில் முதல் பக்கத்தில் 8 பத்திச் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். இதைவிடத் தமிழ் மொழியின் படைப்பாளர்களுக்கு வேறு என்ன பெருமை கிடைக்க முடியும். எங்களுக்கு இவ்வளவு பெரிய புகழைத் தந்த ‘தினத்தந்தி’க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் மொழியை வளர்க்க தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பாடுபட்டது போல எல்லா தலைவர்களும் துணிந்து வெளியே வந்து போராடவேண்டும்.
  எதைச்செய்தாலும் தமிழ், தமிழ் என்று ஐயா வாழ்ந்தார். அவர் நடத்திய இதழுக்குப் பெயர் ‘தமிழ்’. அவர் அமைத்த இயக்கம் ‘நாம் தமிழர்’. தாய் இல்லத்துக்குப் பெயர் ‘தமிழன் இல்லம்’. அவர் வெளியிட்ட பதிப்பகத்துக்குப் பெயர் ‘தமிழ்த்தாய் பதிப்பகம்’. அவர் அமைத்த இரண்டு இயக்க அமைப்பு பெயர்  ‘இளந்தமிழர்’, ‘மகளிர் தமிழ்மன்றம்’. எழுதிய நூல் ‘தமிழ்ப் பேரரசு’.
  அவருடைய தமிழ் உணர்ச்சிதான் எங்களைப் போன்றவர்களுக்கு உந்துதலைத் தந்தது. தமிழ் மக்கள் மானத்துடன் வாழவேண்டும், பசி, பட்டினி இல்லாமல் வாழவேண்டும். தமிழ் உணர்வோடு வாழவேண்டும் என்பதற்காகச் சி.பா.ஆதித்தனார் பாடுபட்டார்.
  ஒருமுறை ஐயா அவர்களை பார்க்க ஒரு நடிகர் வந்தார். அவர் உள்ளே வரும்போதே “தமிழ் வாழ்க” என்றார். உடனே ஐயா அவர்கள் தமிழ் எப்போதும் வாழும். அதை யாரும் அழிக்க முடியாது. ஆனால் தமிழ் வென்றதா? என்றுதான் பார்க்கவேண்டும். அதனால் தமிழ் வெல்க என்று சொல்லுங்கள் என்று அன்றே சொன்னார். அவரிடம் மட்டுமல்லாமல் எப்போதுமே தமிழ் வாழ்ந்தால் மட்டும் போதாது, தமிழ் வெல்லவேண்டும் என்பதை ஐயா அவர்கள் சொல்வார்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக