வெள்ளி, 24 ஏப்ரல், 2020

உலக மலேசியா தினம் ஏப்ரல் 25


உலக மலேசியா தினம் ஏப்ரல் 25.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மலேரியா... அறிகுறிகள், பரிசோதனைகள், தீர்வுகள்! #WorldMalariaDay #DataStory

`அது ஒரு காலம்...’ என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். `எங்க காலத்துல ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லை’ என்று கூறியவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைக்குச் செல்லாதவர்கள் யார் என்று கேட்டால், `நான்’ என்று பதில் வருவது மிகவும் அரிது. தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் ஏற்பட்ட பல்வேறு மரணங்களைத் தமிழக அரசும் மூடி மறைத்தது. இதேபோல், பல வருடங்களாகவே உலகம் முழுவதும் அதிக அச்சத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் மலேரியா.

இது மிகவும் பழைமையான, கொடிய நோய். இதை இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் இன்னும் ஒழிக்க முடியவில்லை. மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காக, அது தொடர்பான விழிப்பு உணர்வை உலகம் முழுக்க ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25-ம் தேதியை `உலக மலேரியா தினம்’ எனக் கடைப்பிடித்து வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் மக்களுக்குத் தைரியத்தை கொடுக்கும் ஒரு வசனத்துடன் விழிப்பு உணர்வு ஏற்படுத்திக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வசனம், `மலேரியாவை முறியடிப்போம்!’ 

`இந்தியாவில் ஏழு பேரில் ஒருவருக்கு மலேரியா தோற்று ஏற்படுகிறது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். `ஒவ்வோர் ஆண்டும் மலேரியா நோயைத் தடுக்கவும், அதற்காகத் தடுப்பு மருந்து வழங்கவும், மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் இந்தியா செலவிடும் தொகை 11,640 கோடி ரூபாய்’ என்கிறது உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம். 2016-ம் ஆண்டு மட்டும் உலகம் முழுக்க 21,59,00,000 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, அதில் 4,45,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

132 கோடி மக்கள்தொகை கொண்ட நம் இந்தியாவில் `தூய்மை இந்தியா’, `சுகாதாரமான இந்தியா’ எனப் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், சுகாதாரச் சீர்கேட்டால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் மலேரியாவால் 1,31,70,000 பேர் பாதிக்கப்பட்டு, ஒரு வருடத்தில் மட்டும் 23,990 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக மலேரியா ஆய்வறிக்கை 2014-ன்படி, இந்தியாவில் வசிக்கும் மக்களில் 22 சதவிகிதம் பேர் மலேரியா அதிகம் பாதிக்கும் பகுதிகளிலும், 67 சதவிகிதம் பேர் குறைவாகப் பாதிக்கும் பகுதிகளிலும், 11 சதவிகிதம் பேர் மலேரியா தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் வாழ்வதாகத் தெரிகிறது.

மலேரியா என்பது கொசுக்கள் மூலம் பரவும் ஓர் ஒட்டுண்ணி. இதற்கு, `பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்’ (Plasmodium vivax) என்று பெயர். பெரும்பாலும் சாக்கடைக் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்யும் பெண் அனோஃபிலெஸ் (Anopheles) கொசுக்கள் மூலமே மலேரியா பரவுகிறது.


எப்படிப் பரவுகிறது?

ஒட்டுண்ணி தொற்றுள்ள அனோஃபிலெஸ் கொசு, மனிதனைக் கடிக்கும்போது ஒட்டுண்ணி ரத்தத்தில் கலந்து 30 நிமிடங்களுக்குள் மிக வேகமாகக் கல்லீரலுக்குச் செல்லும். கல்லீரலை அடைந்த ஒட்டுண்ணி, மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும். (சில ஒட்டுண்ணிகள் கல்லீரலில் செயல்படாமல் தங்கிவிடும். இவை எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் செயல்திறன் பெற்று, பாதிப்பை ஏற்படுத்தலாம்). இனப்பெருக்கம் அடைந்த ஒட்டுண்ணி, ரத்தத்தில் கலந்து ரத்தச் சிவப்பு அணுக்களைத் தாக்கி, மேலும் அதிக அளவில் பரவும். இதன் மூலம் மற்ற சிவப்பணுக்களிலும் தொற்றை ஏற்படுத்தும்.

இப்படி, தொடர்ச்சியாக இனப்பெருக்கம் அடையும்போது, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து காய்ச்சல் ஏற்படும். இதன் காரணமாக அதிகக் காய்ச்சல் மற்றும் குளிர்க் காய்ச்சல் ஏற்படும். தொற்று ஏற்பட்டவரின் உடலிலிருந்து நன்கு வளர்ச்சியடைந்துவிடும். பின்னர் பாதிக்கப்பட்டவரை, அனோஃபிலெஸ் கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது, இந்த ஒட்டுண்ணி மூலம் வேறொருவருக்கு மலேரியா பரவும்.

குழந்தைகளுக்கு மலேரியா காய்ச்சல் வந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சையளிக்க வேண்டும். ஏனெனில், உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் மலேரியா காய்ச்சலால் அதிகமாக (அதாவது 70 சதவிகிதம்) பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை மலேரியா தோற்று நோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் மலேரியா தாக்கினால் அவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

அறிகுறிகள்...

மலேரியா தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் நம் உடலுக்குள் பரவ ஆரம்பித்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு ஏழு நாள்களிலேயே நோய் பாதிப்பு ஏற்படும்.

நோய் பாதிக்கப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம் (Plasmodium falciparum) என்னும் மலேரியா ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டு, கடுமையான நோயால் பாதிக்கப்படுவோம். சில நேரங்களில் பாதிப்பு அதிகமானால் மரணமும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

குழந்தைகளுக்கு மூளை தொடர்பான நோய், கடுமையான ரத்தச்சோகை, வளர்சிதை மாற்றம், சுவாசப் பாதிப்பு, மஞ்சள்காமாலை, மூளைக் காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்.

மூன்று கட்டங்களில் மலேரியாக் காய்ச்சலை கண்டறியலாம். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு போன்றவை இருக்கும். அதேபோல், தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கு குளிர்க் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்படும்.

இரண்டாவது கட்டத்தில் கடுமையான காய்ச்சல் சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும்.

மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து, உடல் முழுக்க வியர்வை வழியும். உடல் விரைவாகக் குளிர்ந்துவிடும். நோயாளி சாதாரணமாகவே காணப்படுவார். இதையடுத்து மறுநாளோ, ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாள்களுக்கு ஒரு முறையோ மீண்டும் காய்ச்சல் வரும். இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

சில முக்கியப் பரிசோதனைகள்...

1. ரத்த அணுக்களில் கிருமிப் பரிசோதனை
2. மலேரியா எதிர் அணுக்கள் பரிசோதனை
3. 'க்யூபிசி' (QBC Malaria Test) பரிசோதனை
4. ஆர்.டி (RD - Rapid Diagnostic Test) - பி.சி.ஆர் (PCR) மற்றும் நெஸ்டெட் பி.சி.ஆர் (Nested PCR) பரிசோதனை
5. ரத்த அணுக்கள் மொத்தப் பரிசோதனை.

மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி?

மலேரியா நோயிலிருந்து நாம் தப்பிப்பதற்கு குளோரோகுயின் (Chloroquine), பிரைமாகுயின் (Primaquine) போன்ற மருந்துகளை உட்கொள்ளலாம். அதேபோல், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைச் சரியாகவும், பரிந்துரைத்த காலம் வரை தவறாமல் உட்கொள்வதன் மூலம் மலேரியாவிலிருந்து தப்பிக்கலாம்.

நம் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்து கொசுக்களை விரட்டலாம். இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலேரியா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். காய்ச்சல் வந்தால் கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. உடனே, மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. எந்தக் காய்ச்சல் வந்தாலும், மலேரியாவுக்கான பரிசோதனையும் செய்துகொள்வது மிகவும் நல்லது.

உலகளவில் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2030-ம் ஆண்டுக்குள் குறைந்தது 35 நாடுகளில் மலேரியாவால் ஏற்படும் இறப்பை 90 சதவிகிதம் கட்டுப்படுத்தவும், மலேரியாவால் ஏற்படும் பாதிப்பை 90 சதவிகிதம் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி விகடன்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக