செவ்வாய், 27 ஜூன், 2017

இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு ( Mariyappan Thangavelu , பிறந்த நாள் ஜூன் 28, 1995.




இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு ( Mariyappan Thangavelu , பிறந்த நாள் ஜூன்  28, 1995.

மாரியப்பன் தங்கவேலு ( Mariyappan Thangavelu , பிறப்பு: சூன் 28, 1995) இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.
இரியோ டி செனீரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.  2017 சனவரி 25 ஆம் தேதி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது.
வாழ்க்கை வரலாறு
தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை ஆரம்பத்தில் குடும்பத்தை கைவிட்டார். தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்தார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார். [3] தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே காலை இழந்தார். இந்தப் பின்னடைவிலும், அவர் இரண்டாம்நிலைப் பள்ளியை நிறைவு செய்தார். [3]
தனது காலை இழந்தநிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது. இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது 14ஆவது வயதில் நற்தேகம் உடையவர்களும் கலந்துகொண்ட போட்டியில் இரண்டாவதாக வந்தார். 2013 தேசிய மாற்றுத்திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தமது பயிற்சிக்கு ஏற்றுக் கொண்டார். 2015இல் பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார்.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம்
தூனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தங்கம் வென்ற இவருக்கு இந்தியாவில் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தங்கப் பதக்கம் வென்றதால் இவருக்கு
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க இருக்கிறது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது. தனக்கு அறிவிக்கப்படும் பரிசுத்தொகைகளிலிருந்து தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அஞ்சல் தலை

மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

விருதுகள்

2016 - ஆனந்த விகடன் "டாப் 10" மனிதர்கள் விருது.


பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ‘தங்க’வேலு. சேலத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தங்கவேலு, இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்திருக்கலாம். ஆனால், தங்கவேலுவின் இந்தச் சாதனைக்குப் பின்னால் கடும் வலியும், வறுமையும் நீக்கமற நிறைந்திருந்தது. இன்று மீடியாவில் ஃப்ளாஷ் ஆவதற்கு முன்பு, தமிழகத்தில் எத்தனை பேருக்கு தங்கவேலுவைத் தெரிந்திருக்கும்? ‘பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை’ என்ற அவப்பெயரைச் சுக்குநூறாக உடைத்திருக்குறார் தங்கமான தங்கவேலு.

சேலம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது தந்தை, செங்கல்சூளையில் வேலை செய்கிறார். இவரது தாய் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அதன் பிறகு, எவ்வளவு சிகிச்சை எடுத்தும் அவரது கால் குணமாகவே இல்லை. தங்கவேலுவுக்கு விளையாட்டில் ஆர்வம். ஆனால், பள்ளியில் அவரது கால் ஊனத்தைக் காரணம் காட்டி விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்.
மனம் உருகி மற்ற மாணவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகவைத்திருந்த தங்கவேலுவுக்கு, விடாமுயற்சி குணம் இருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு தங்கவேலு மட்டும், மைதானத்தில் தனியாக விளையாடினார். இதனை ஒருநாள், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் பார்த்தார். அப்போது, தங்கவேலுவுக்கு வாலிபால் விளையாட்டில்தான் அதீதஆர்வம் இருந்தது. உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன்தான் தங்கவேலுவுக்குள் இருந்த உயரம் தாண்டுதல் திறமையைக் கண்டு, உயரம் தாண்டுதலில் அவருக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.

‘‘என்னால் உயரம் தாண்ட முடியும் என என்னுடன் படித்தவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் முன்பு நான் தாண்டிக் காட்டியபோது அசந்துபோனார்கள். அதன்பிறகு, அவர்களின் உதவி மூலமே பல போட்டிகளில் கலந்துகொண்டேன். நான் உடல் ஊனமுற்றவன் என எப்போதும் நினைத்ததில்லை’’ என்கிறார் தங்கவேலு.
தனது 14 வயதில், முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் தங்கவேலு. அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜேந்திரனிடம் 12-ம் வகுப்புவரை பயிற்சி எடுத்து தங்கவேலு, அதன்பிறகு பெங்களூருவில் சத்தியநாராயணா என்பவரிடம் பயிற்சி பெற்று மேலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இதற்கு முன்பு மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம், 2011-ல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம், சர்வதேச உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் என தங்கவேலு பல பதக்கங்களைக் குவித்துள்ளார். இந்தப் பதக்கங்கள் எல்லாம், அவரது குடிசை வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
தங்கவேலுவின் கால் உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு அவரது அம்மா ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அந்தக் கடனை இன்னும் அடைக்க முடியாத அளவுக்கு வறுமையில் உழலும் தங்கவேலுவின் குடும்பத்துக்குத் தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. தங்கவேலுவின் இந்தச் சாதனையை பெரியவடகம்பட்டி கிராம மக்கள் திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர். தங்கவேலுவுக்கு பேனர்வைத்தும், அவரது படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும் பெரியவடகம்பட்டி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
தங்க மகனுக்கு சல்யூட்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக