திங்கள், 17 ஜூலை, 2017

உலக நீதி நாள்



உலக நீதி நாள்

'எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னர்' - என்று புளகாங்கிதம் அடைந்து பாடியவன் மகாகவி பாரதி. மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எல்லா நாட்டின் சட்டமும் விருப்பமும் ஆகும். இதை நிலை நாட்டவே, ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகிறது. ஒரே ஒரு தனி மனிதனுக்காவது அவனது உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகிறது. இதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை, நீதி மறுக்கப்படும்போதோதாமதிக்கப்படும்போதோ மக்களின் வாழ்க்கை முறை அச்சத்துக்குள்ளாகிறது.

நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச நீதி நாளாகத் தேர்ந்தெடுத்தது ஐக்கிய நாடுகள் சபை. நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.
நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். சமாதானமும் சகிப்புத்தன்மையும் நம்முள் உருவாக எண்ணுவோம். இதுவே இந்நாளில் நமக்கு தேவைப்படும் நல்ல ஆயுதம்.


‘உலக நீதி நாள்’ என்றும் ‘சர்வதேச நீதிக்கான உலக நாள்’ என்றும் அழைக்கப்படும் நாள் இன்று. போர்க் குற்றங்கள், இனப்படுகொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று பல வகையான குற்றச் செயல்களைப் பற்றி விசாரிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் செயல்படுகிறது. இந்த நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான உடன்படிக்கை, இத்தாலியின் ரோம் நகரில் 1998-ல் இதே நாளில் தயாரானது.
இந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான முதல் கூட்டம் உகாண்டாவின் கம்பாலா நகரில் 2010, ஜூன் 1-ம் தேதி நடந்தது. ஜூலை 17-ம் தேதியை உலக நீதி நாளாகக் கடைப்பிடிக்கலாம் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2010 முதல் சர்வதேச நீதிக்கான உலக நாள் கொண்டாடப்படுகிறது.
ஐ.நா. சபையின் அரசியல் சாசனம், மனித உரிமை கோட்பாடுகள், குற்றம்செய்துவிட்டு யாரும் தப்பிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துதல், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துதல், நிலையான அமைதியை ஏற்படுத்துதல் போன்ற முக்கிய விஷயங்கள் இந்தப் பிரகடனத்தில் இடம்பெற்றன.
பெண்கள் மீதான வன்முறைகள், இனப்படுகொலை உள்ளிட்ட குற்றச்செயல்களைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த தினத்தில் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக