செவ்வாய், 20 மார்ச், 2018

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20.


உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20.

மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.
வசந்தம் என்றாலே பொதுவாக எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி ஏற்படுவது வழக்கம் தானே. ஆனால் புன்னகையையோ மகிழ்ச்சியையோ நாம் எப்போதும் வெளிப்படுத்துவதில்லை. ஏனெனில் அதற்கான வழிகளை நாம் அறிவதில்லை. இதோ உங்கள் புன்னைகையையும், மகிழ்ச்சியையும் அதிகப் படுத்த விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட 5 வழிகள் உங்களுக்காக:
1. வெளியிடங்களுக்குச் செல்லுங்கள்:
வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதை விட வெளியே செல்வதால் சுற்றுச் சூழலில் இயல்பாகவே உள்ள இதமான காற்று, விட்டமின் D-ஐ தரும் சூரிய வெளிச்சம் மற்றும் பறவைகளின் ரீங்காரம், எதிர்பாராத எப்போதும் சந்தோசமாக இருக்கும் நபர்களின் சந்திப்பு என்பன போன்ற பல நிகழ்ச்சிகள் நமது மனதைக் கவர்ந்து மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.
2.உடற்பயிற்சி:
தினசரி குறைந்தது 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதே அந்த நாள் முழுதும் சக்தியும், உற்சாகமும் மிக்க நபராகச் செயற்படவும் நேர்மறையாக சிந்திக்கவும் உதவும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. மேலும் உடலுக்கு நாம் கொடுக்கும் பயிற்சி உடலில் நோய்க் கிருமிகளை எதிர்த்து சண்டையிடும் புரதங்களான ஆண்டிபொடீஸ் ஐயும், மனநிலையைத் (Mood)தீர்மானிக்கும் மூளையில் இருந்து வெளியாகும் எண்டோர்ஃபின்ஸ் என்ற ஹார்மோனையும் அதிகம் உற்பத்தி செய்யும் என ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
3.தேவைக்கு ஏற்ற உறக்கம்:
உடலில் ஸ்டெரஸ் ( அழுத்தம்) எனப்படும் அசதியை அதிகம் ஏற்படுத்துவது தூக்கம் இன்மையே.. நம்மில் பலர் அதிகமாக வேலை செய்து குறைவான நேரமே தூங்குவதால் அவர்களுக்கு அதிகபட்ச அழுத்தமும், எதிர்மறை சிந்தனையும் ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
4.மனதுக்கு பிடித்த பாடல்களை வெட்கத்தை விட்டு முனகுங்கள்:
நம்மில் பலருக்கு பாடல்களை ரசிக்க பிடிக்கும். ஆனால் பாட மாட்டோம். விஞ்ஞானிகள் சொல்வது என்னவென்றால் எப்போதெல்லாம் சிறிது ஓய்வு கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் ரேடியோ மற்றும் ஆடியோ பாடல்களின் சத்தத்தை சற்று அதிகரித்து அந்த இசையுடன் சேர்ந்து பாடுங்கள் என்கிறார்கள். உதாரணமாக வீட்டில் குளிக்கும் போதோ, டிராபிக் ஜேமில் மாட்டிக் கொண்டிருக்கும் போதோ அல்லது வேறு ஓய்வு நேரங்களிலோ இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளானர்.
5.மோசமான அனுபவங்களை மனதில் இருந்து விலக்கி வையுங்கள்:
உங்கள் வாழ்வில் மோசமான கட்டங்களும் அனுபவங்களும் அவ்வப்போது வருவது வழக்கம். அப்போதெல்லாம் அதைக் குறித்து வைத்து விட்டு மனதில் இருந்து அதை விலக்கி வைக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றார்கள். அல்லது குறித்த அனுபவத்தின் பின் வீடு சென்று பிடித்தமான புத்தகம் வாசித்தல் அல்லது பிடித்தமான செயல் ஏதிலும் ஈடுபடுதல் மூலம் மனதை திசை திருப்புமாறும் இது உடனடி மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வாழ்வின் போக்கிலே வருடும் மகிழ்ச்சியை விடாமல் பிடித்தால் உன்னதம் மலரும்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி என நாம் கொண்டாடும் தருணங்கள் மலர்ச்சியை வழங்கும்.!!



இன்று உலக மகிழ்ச்சி தினம்: உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? நிச்சயமாக இந்தியா இல்லை...

உலகின் மகிழ்ச்சியான நாடாக நார்வே தேர்வாகியுள்ளது. மார்ச் 20-ம் தேதியான இன்று உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . கடந்த 2016ம் ஆண்டு டென்மார்க் முதலிடத்தில் இருந்தது. இந்த ஆண்டு நார்வே முதலிடத்தை பெற்றுள்ளது.
'உலகின் மிகவும மகிழ்ச்சியான நாடுகள் 2017' பட்டியலில் நார்டிக் நாடுகளான நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து. ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளே முன்னணி இடத்தை பிடித்துள்ளன.
ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலூஷன்ஸ் நெட்வொர்க்’ அமைப்பு மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை கடந்த 2012ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்காக 155 நாடுகளில் ஆய்வு செய்துள்ளது. அதன்படி ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், ஆரோக்கியம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் போன்ற மகிழ்ச்சிக்கான விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்ரிக்க நாடுகள், சிரியா மற்றும் யேமன் உள்ளிட்ட குறைவான மகிழ்ச்சியுடைய நாடுகளாக பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள் பின்வருமாறு: நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை ஆகும்.
தெற்கு சூடான், லைபீரியா, கொய்னா, டோகோ, ருவாண்டா, தான்சானியா, ப்ருண்டி மற்றும் மத்திய ஆப்பிரக்கன் குடியரசு உள்ளிட்டவை கடைசி 8 இடங்களில் உள்ள நாடுகளாகும்.
ஜெர்மனி 16வது இடத்திலும், பிரிட்டன் 19 வது இடத்திலும், பிரான்ஸ் 31வது இடத்திலும், அமெரிக்கா 14வது இடத்திலும் உள்ளது.
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 122வது இடத்தில் உள்ளது. ஆனால் இலங்கை(120), வங்கதேசம்(110), எத்தியோப்பியா (119), மியான்மர் (114), ஈராக் (117), ஈரான் ( 108), சோமாலியா(93) பாகிஸ்தான்(80) சீனா(79) ஆகியவை முன்னேறிய இடத்தில் உள்ளன.
பாரபட்சம் அதிகம் இல்லாத இல்லாத நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அங்கு சமத்துவம் அதிகமாக உள்ளதுதான் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்று ஐநா கூறியுள்ளது. அதேபோல. பாரபட்சம் உள்ள சமுதாயத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்றும் தனது குறிப்பில் ஐநா குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக