உலக சிட்டுக்குருவிகள் நாள் ( World House Sparrow Day - WHSD), மார்ச் 20 .
உலக சிட்டுக்குருவிகள் நாள் ( World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும்
மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள்
2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான
உயிரியற் பல்வகைமை ( biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.
2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" ( We will save our House Sparrows ) என்பதாகும்.
அழியும் குருவிகள்
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை
1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:
வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால்,
காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.
சிட்டுக்குருவி தினம் உருவாக காரணமான முகமது திலாவர் யார்? #Mohammed Dilawar
சிட்டுக்குருவிகள்... சின்னக்குருவிகள்; செல்லக் குருவிகள். அவை மனிதகுலத்துக்கு ஆற்றும் பணி அளப்பரியது. சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது. 1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ Four pests campaign என்ற பெயரில் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை அழிக்க உத்தரவிடுகிறார். அந்தப் பட்டியலில் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியும் இடம் பெற்றிருந்தது. சின்னஞ்சிறிய பறவைகள் கொலை செய்யப்படுமளவுக்கு என்ன தப்பு செய்தன?. விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றதுதான் அந்தக் குருவிகள் செய்த தவறு. தானியங்கள்தான் அவற்றின் முக்கிய உணவு. புலி மானை அடித்துச் சாப்பிட்டால் தப்பா? பூனை, கருவாடு தின்னத்தானே செய்யும்?
மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக்குருவிகளை அழிக்க பெரும் படை கிளம்பியது. எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் கொன்று குவிக்கப்பட்டன குட்டிக் குட்டிக் குருவிகள். அதன் கூட்டை அழிப்பது, முட்டையை உடைப்பது என்று மனிதன் அத்தனைவிதமான இழி புத்தியையும் சிட்டுக்குருவி இனத்தின் மீது காட்டினான். சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; நாடு சுபிட்சம் அடைந்து விடும்; உணவு உற்பத்தி பெருகிவிடும் என்ற செய்தியை சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர். கோடிக்கணக்கான சிட்டுக்குருவிகள் அழிந்து போயின. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன. நாட்டில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. சீன அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவு புழுப் பூச்சிகள் மட்டுமல்ல; வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளும்தான். சிட்டுக்குருவிகள் அழிந்து போயின; அதனால் வெட்டுக்கிளிகள் பெருத்தன.
பயிர்களை சகட்டுமேனிக்கு வெட்டுக்கிளிகள் அழித்தன. விளைச்சல் பாதித்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர். போதாக்குறைக்கு மழையும் பொய்த்தது. நிலங்கள் வெடித்தன, பயிர்கள் வாடின. மக்கள் பட்டினியால் மடிந்தனர். சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்கு சீனா கொடுத்த விலை... ஒன்றரை கோடி மனித உயிர்கள் (சீன அரசின் கணக்குப்படி). ஆனால் 3 கோடியே 60 லட்சம் பேர் வரை இறந்து போனதாக "Tombstone' என்ற புத்தகத்தில் சீனப் பத்திரிகையாளர் யாங் ஜிஜெங் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு தற்போது சீனா தடை விதித்துள்ளது. அந்தப் புத்தகத்தில் , சீன மக்கள் பட்டினி காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று சாப்பிட்டதாகக்கூடச் சொல்லப்பட்டுள்ளது. மக்களை நரமாமிசம் புசிப்பவர்களாக மாற்றிய பின்தான், விழித்தது சீனா.
வெட்டுக்கிளிகள் , பூச்சிகள் பெருக சிட்டுக்குருவிகள் மடிந்ததுதான் காரணம் என்பதை சீனா தாமதமாக உணர்ந்தது. உடனடியாக அந்தப் பட்டியலில் இருந்து சிட்டுக்குருவியின் பெயர் நீக்கப்பட்டது. இப்போது சிட்டுக்குருவியைக் காக்க பெரும் படை புறப்பட்டது. சீனா சுபிட்சமடைந்தது. சின்னக்குருவிதான். ஆனால், அது அழிந்தால் மனித இனத்துக்கும் அழிவு வரும். என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.
இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம் குறித்து இப்போது பெரும் விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் அவற்றைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். சிட்டுக்குருவி குறித்து இந்தியாவில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தியவர் நாசிக்கைச் சேர்ந்த முகமது திலாவர். கல்லூரிப் பேராசிரியரான இவர், சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்காக ''Nature forever society ''என்ற அமைப்பைத் தொடங்கினார்.
பழைய காலத்தில் நமது முன்னோர்கள் ஓட்டு வீடுகளில் வாழ்ந்தனர். ஓட்டு வீடுகளின் அமைப்பு கூடு கட்டி வாழத் தெரியாத சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தது. பொந்துகளில் கொஞ்சம் வைக்கோல் இருந்தால் போதும்; அதில் வசிக்க ஆரம்பிக்கும் பறவை இனம் சிட்டுக்குருவி. நகரத்தின் நவீனக் கட்டடங்கள் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஆனால், மண்ணுக்கு எப்படி புழு தேவையோ... காட்டுக்கு எப்படி புலி தேவையோ... அப்படி மனிதனுக்கும் சிட்டுக்குருவி தேவை.
இதை உணர்ந்து கொண்ட முகமது திலாவர்தான் முதலில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உலகம் முழுக்க 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கான வாழ்விடங்கள், உணவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிட்டுக்குருவிகளுக்கு என்று ஒரு தினம் வேண்டுமென்றும் ஐ.நா. அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார். முகமதுவின் கோரிக்கையில் இருக்கும் உண்மையை உணர்ந்த ஐ.நா. சிட்டுக்குருவிகளைக் காப்பதன் அவசியம் கருதி, கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது. டெல்லி மாநில அரசு, கடந்த 2012-ம் ஆண்டு சிட்டுக்குருவியை டெல்லி மாநிலப் பறவையாக அறிவித்தது. கடந்த 2008-ம் ஆண்டு டைம் இதழ் "Heroes of the Environment'' விருதை முகமதுவுக்கு வழங்கியது. உலகின் தலைசிறந்த 30 சுற்றுச் சூழலியலாளர்களில் இவரும் ஒருவர்.- எம்.குமரேசன்
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... உலக சிட்டுக்குருவி தினம்
அழிந்து வரும் பறவையினமான சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தில், மார்ச் 20, உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இத்தினத்தை கடைபிடிக்கின்றன. பறவை இனங்களில் மிகச் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் 'கீச் கீச்' எனக் கூக்குரலிடும் பறவை சிட்டுக்குருவி. இவை புழுக்களை உண்டு வாழ்வதால், சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த பறவையாக இருந்தது.
பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சிட்டுக்குருவிகள் அதிகம் காணப்படும். ஏன் பாதிப்புமுன்பு வீடுகள் ஓட்டு கட்டடங்களாக இருந்தன. ஓட்டுக்கும், சுவருக்கும் இடையே காற்றோட்டத்திற்காக இடைவெளிகள் விடப்பட்டன. அங்கு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன. தற்போதைய கான்கீரிட் கட்டடங்கள் குருவிகள் வாழ வழியில்லாமல் செய்து விட்டன.
அதே போல, நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள், சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும், அதிலுள்ள துளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் 'பேக்' செய்யப்படுவதால், சிட்டுக்குருவிகளுக்கான தேவையான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது. தற்போது நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அலைபேசி போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழியும் நிலை உருவாகியுள்ளது. சிட்டுக் குருவிகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிய, நாம் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செல்போன் அலைவரிசை கோபுரங்கள் காரணமாக சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சிட்டுக்குருவிகளை காப்பாற்றி முன்பு போல உலாவ விட பல முயற்சிகள் நடந்து வருகிறது. என்றாலும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது.
இதை உணர்ந்த டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது. ஆனால் செல்போன் டவர்களினால் சிட்டுகுருவிகளுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ளன.
சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.
சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது. செல்போன் டவர்களின் பாதிப்புகளை விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
இன்று உலக சிட்டுக்குருவி தினம்
‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா’…, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’… ‘ஏய் குருவி, சிட்டுக் குருவி’ என்று தொடங்கும் பல சினிமா பாடல்கள் நமக்கு சிட்டுக்குருவியை நினைவுப்படுத்துகின்றன.
தொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவியின் பெருமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புறநானூற்றுப் பாடலில் உள்ள ‘‘குரீஇ’’ என்ற சொல்லே மருவி குருவி என்று ஆனது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் ‘மனையுறை குருவி’ என்று நம்முடைய சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
காடு, மேடு, வயல்வெளி, வீடுகள் என சுதந்திரமாக திரிந்த சிட்டுக்குருவியின் இனம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. இதற்கு, நம்முடைய வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் தான் காரணம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர்புறங்களில் உள்ள வீடுகளில் கூடுகள் கட்டி, சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை இன்று எங்குமே பார்க்க முடியாத வகையில் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டன.
சிட்டுக்குருவிக்கு இன்று பலர் அடைக்கலம் கொடுத்து அந்த இனத்தை காப்பாற்றி வருவதால், ஆங்காங்கே சிட்டுக்குருவிகள் நம் கண்ணில் தென்படுகின்றன.
உருவத்தில் சிறியதாகக் காணப்படும் சிட்டுக்குருவி மனிதனுடைய வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. இருப்பினும், அவைகளை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள். சிட்டுக்குருவிகளில் ஆண், பெண் என்பதை ரோமத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவிகள் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சிட்டுக்குருவிகளை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கின்றனர். யாரையும் துன்புறுத்தாத அமைதியான சுபாவம் கொண்டது இந்த சிட்டுக்குருவி இனம்.
அதே நேரத்தில், எதிர்களிடமிருந்து எந்த நேரத்திலும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கும். உருட்டும் விழிப்பார்வை, அதிகாலை நேரத்தில் கீச்சு, கீச்சு என்று கத்தும் மெல்லிய இசை, மென்மையான உடலைமைப்பு கொண்ட இவைகளை பிடிக்காதவர்கள் யாருமில்லை. இவைகள் 27 கிராம் முதல் 39 கிராம் வரை எடை உடையது. 8 செ.மீ முதல் 24 செ.மீ வரை நீளமுடையது. சுமார் 13 ஆண்டுகள் வாழக் கூடியது. மூன்று முதல் 5 மூட்டைகள் இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்திலிருக்கும் என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள்.
முன்பெல்லாம் ஓலை, குடிசை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். அதோடு மாட்டுத் தொழுவமும் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இவைகள் தான் சிட்டுக்குருவிகளின் வாழ்விடமாக திகழ்ந்தன. ஆனால் இன்று வானுயர்ந்த கட்டிடங்கள், காற்று உட்புகாத அளவுக்கு கான்கிரீட் கட்டிடங்களாகவே நகரமும், கிராமும் காணப்படுகின்றன. இதனால், சிட்டுக்குருவியின் இருப்பிடம் அழிக்கப்பட்டு விட்டன. அடுத்து செல்போன் கோபுரத்திலிருந்து வெளியேறும் கதீர்வீச்சு சிட்டுக்குருவியின் இனப்பெருக்கத்துக்கு தடையாக இருப்பதாக பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இந்த இனம் அழிந்துக் கொண்டு வருகிறது. அடுத்து, ரசாயண உணவுகளை உட்கொள்வதாலும் இந்த இனம் அழிவதாக சொல்கிறார்கள்.
அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்து தானியங்கள் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக்குருவிகள் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி எளிதில் உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு 90 சதவீத சிட்டுக்குருவிகளை அழித்துவிட்ட பெருமை மனித இனத்தையே சேரும்.
எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவு சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பவைகள். கொசு முட்டைகளை விரும்பித் திண்ணும் சிட்டுக்குருவிகள் அழிந்தால், கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதுவே டெங்கு காய்ச்சலுக்கு காரணம் என்கிறார்கள். சிட்டுக்குருவிகள் கொண்டக்கடலை மாவு, திணை, கோதுமை, பச்சரிசி, பருப்பு, சாமை ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடுமாம். பூச்சி, புழுவையும் இவைகள் விட்டுவைப்பதில்லை. ஆனால், இன்று இத்தகைய உணவுகள் மனிதனுக்கே கிடைக்காதபட்சத்தில் சிட்டுக்குருவிகளுக்கு எப்படி கிடைக்கும்? இதுவும் சிட்டுக்குருவி அழிவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
வேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. மக்களிடையே சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினம் என்று அறிவித்து அதை கடைப்பிடித்து வருகிறது. இதன்பிறகு ஓரளவு மக்கள் மத்தியில் சிட்டுக்குருவி பாதுகாப்பு எண்ணம் தோன்றி இருக்கிறது. அதோடுவிடாமல், மாநில பறவையாக சிட்டுக்குருவியை அறிவித்து மத்திய அரசு அசத்தியுள்ளது. ஏற்கனவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிட்டுக்குருவிக்கு இப்போது கூடுதல் மவுசு.
கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே அதிகமாக சிட்டுக்குருவிகளை இப்போது காண முடிகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு, இல்லை..இல்லை கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும் அதில் தோட்டம் அமைத்து பயிரிட வேண்டும். சிட்டுக்குருவி வாழ வாழ்விடத்தை அதில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோடை காலம் என்பதால் வீட்டின் மொட்டை மாடிகளில் தானியங்கள் தூவுவதோடு குவளைகளில் தண்ணீர் வைக்க வேண்டும். வைக்கோல், புற்கள் வைத்தால் குருவிகள் கூடு கட்ட அவைகள் பயன்படும் என்று பட்டியலிடுகின்றனர் பறவை ஆர்வலர்கள்.
நம் பகுதியில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டைமாடியில் ஓர் இடத்தில் அட்டைப் பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் துண்டுகளையும் அரிசி, தானிய வகைகளையும் வையுங்கள். சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான தேங்காய் நார்கள், பயன்படுத்தாத துடைப்பக் குச்சிகள், வைக்கோல் போன்றவற்றையும் வைக்கலாம். வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகள் இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும். பின்னர் சிட்டுக்குருவிகளின் இனிமையான கீச்… கீச்… குரலை மீண்டும் நம்மால் கேட்க முடியும்.
சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு அதற்கான உணவு தானியங்களை வழங்கி வரும் ‘ட்ரி பேங்க்’ நிறுவனம் முல்லைவனம் கூறுகையில், “சிட்டுக்குருவிகள் இருந்தால் அந்தப்பகுதி சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டு சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு கிலோ தானியத்துடன் கூடிய பாக்ஸ் வழங்கினோம். இந்த ஆண்டும் தானியம் அடங்கிய பாக்ஸை கொடுத்துள்ளோம். அந்த பாக்ஸில் 2 மாதங்களுக்கு தேவையான கோதுமை, பச்சரிசி, சாமை, திணை, கொண்டைக்கடலை உள்ளிட்டவைகளை அரைத்து கொடுக்கிறோம்.
சென்னையில் இன்றும் வில்லிவாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ், ராமாவரம், குன்றத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வீடுகள் சிட்டுக்குருவி வாழ்வதற்கு தகுதியானதாக இருக்கின்றன. அவைகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. அவைகளை காப்பாற்றவே இந்த தானிய பாக்ஸை வழங்கியுள்ளோம். சிட்டுக்குருவியின் கீச், கீச் என்ற சத்ததை கேட்பதை இனிமை” என்றார். நன்றி: விகடன்.
சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிந்து வருகின்றனவா?
சில ஆண்டுகளாக மார்ச் மாதங்களில் பத்திரிக்கைகளில் அடிக்கடி இடம்பெறும் செய்தி சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது. அதற்கான முக்கிய காரணங்கள் நகரமயமாதல், செல் போன் டவரிலிருந்து வரும் மின்காந்த அலைகள் என்றும் எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் அக்கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? இந்தக் கருத்துக்கள் எல்லாம் அறிவியல் ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த உண்மைகளா? அழிவின் விளிம்பில் இருக்கும் மற்ற பறவைகளைக் காட்டிலும் சிட்டுக்குருவியின் நிலை என்ன அவ்வளவு பரிதாபகரமாக உள்ளதா? இக்கேள்விகளுக்கான விடைகளை அறிய முற்படும் முன் பல சங்கதிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
சிட்டுக்குருவிகள் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ள ஒரு பறவையினம். பன்னெடுங்காலமாக மனிதர்களுக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் இருக்கும் பிணைப்பை நாம் அனைவரும் அறிவோம். இப்பறவைகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே அதிகம் தென்படும். உச்சந்தலையில் சாம்பல் நிறமும், தொண்டை கருப்பாகவும், உடலின் மேலே அரக்கு நிறத்திலும் இருப்பவை ஆண் குருவிகள். பெட்டையின் உடலில் இதைப்போன்ற நிறங்கள் இருக்காது, மாறாக வெளிறிய பழுப்பு நிறத்திலும் அதன் முகத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் கண்களின் மேலே நீண்ட புருவமும் இருப்பதைக் காணலாம். மளிகைக்கடை வாசலிலும், மார்க்கெட்டுகளிலும், நம் தெருக்களிலும் பறந்து திரிவதை எளிதில் காணலாம். சில நேரங்களில் நம் வீடுகளிலுள்ள சுவர் இடுக்குகளில் கூட வந்து கூடமைக்கும். சிறுவயதிலிருந்து நாம் பார்த்துப் பழகிய பறவைகளில் சிட்டுக்குருவிகள் முதலிடம் வகிக்கும்.
ஒரு உயிரினம் அழிந்துகொண்டு வருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை நாம் முன் வைக்கவேண்டும். முன்பு 20000 இருந்தது இப்போது வெறும் 500 தான் இருக்கிறது என்று சொல்லும் போது, ஒரு காலத்தில் இருந்த அதன் எண்ணிக்கை நமக்குத் துல்லியமாக தெரிந்திருக்கிறது. இதுவே அடிப்படைத் தகவல். பிறகே அந்த உயிரினம் எண்ணிக்கையில் குறைந்துபோனதற்கான காரணத்தை ஆராய முற்படுவோம். இந்த அடிப்படைத் தகவல்களை தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். ஆனால் இந்தியா முழுவதிலும் சிட்டுக்குருவிகள் எங்கெங்கு, எத்தனை இருந்தன என்கிற தகவல் இதுவரை இல்லை. இந்தத் தகவல் இல்லாமல், நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை அழிந்து வருகின்றன என்றும் அதற்கான காரணங்களையும் தக்க ஆதாரங்களின்றி கூறுவது சரியல்ல. பிறகு எப்படி நம் பத்திரிக்கைகளில் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணங்கள் துல்லியமாக சொல்லப்படுகின்றன?
அத்தகவல்களெல்லாம் பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதிசெய்யப்படவை! சிட்டுகுருவிகளைப்பற்றி இங்கிலாந்தில் 1940 களிலிருந்து இன்றுவரை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல பறவையியலாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்குள்ள சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை பல ஆண்டுகளாக கணக்கெடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் பல இடங்களில் பரவியிருந்த சிட்டுக்குருவியை 2002ம் ஆண்டு அந்நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகளின் பட்டியலில் அந்நாட்டு அறிவியலாளர்கள் சேர்த்துவிட்டனர். சிட்டுகுருவிகளின் எண்ணிக்கை நகரப்பகுதிகளிலிருந்து முன்பு இருந்ததைக்காட்டிலும் சுமார் 90% வீழ்ச்சியடைந்துவிட்டதாக பலகாலமாக நடத்தப்பட்டுவரும் ஆராய்ச்சியின் வாயிலாகத் தெரியவந்தது.
இங்கிலாந்தில் 1920களிலேயே சிட்டுக்குருவிகள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறையத்தொடங்கின. அதாவது குதிரைவண்டிகள் போய் மோட்டார் வாகனங்கள் வந்த காலங்களில். குதிரைவண்டிகளில் கொண்டுசெல்லப்படும் மூட்டைகளிலிருந்து சிந்தும் தனியங்களையும், குதிரைகளின் கழிவுகளிலுள்ள செரிக்கப்படாத தானியங்களையும் உட்கொண்டு வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை உயரத்தொடங்கிய பின் இப்பறவைகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தன. எனினும் 2005ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 13 மில்லியன் சிட்டுக்குருவிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் 1994 முதல் 2000 வரை தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் சற்று குறைந்தும், ஸ்காட்லண்டிலும், வெல்ஷிலும் அதிகரித்திருந்தது.
வீட்டுச் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைகளும், நகரிலுள்ள காகங்களும் இவற்றை இரையாகக்கொள்வது, சிட்டுக்குருவிகள் கூடுகட்ட ஏதுவான பல புதர்ச்செடிகள் கொண்ட தோட்டங்கள் இல்லாமை, இனப்பெருக்க காலங்களில் குஞ்சுகளுக்குத் தேவையான பூச்சிகள் இல்லாமல் போவதால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று பரவலாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்ற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே காரணமாக இல்லாமல் இவை அனைத்தும் ஒருங்கே சேர்வதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அறியப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் சிட்டுக்குருவிகள் பல இடங்களில் மறைந்து வருவதைக்கண்டு அது இந்தியாவிற்கும் பொருந்தும் என நினைத்து இங்கும் அவற்றின் இனம் அழியாமலிருக்க (?) பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உண்மையில் நம்நாட்டிலுள்ள சிட்டுக்குருவிகளின் நிலை அவ்வளவு மோசமாக இன்னும் போய்விட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில நகரங்களிலுள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம், அப்பகுதிகளிலிருந்து மறைந்தும் போயிருக்கலாம். ஆனால் பல ஆண்டுகள் தொடர்ந்து இவற்றின் எண்ணிக்கையை இங்கெல்லாம் கணக்கெடுத்த பின்னரே நாம் இதன் வீழ்ச்சி பற்றியும் அதற்கான காரணங்களையும் அறுதியிட்டுச் சொல்லமுடியும். புறநகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும், இவற்றின் எண்ணிக்கை மாறாமலும், ஓரளவிற்கு நல்ல எண்ணிக்கையிலும் இருப்பதாக புதுதில்லி, உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட சில குறுகிய கால ஆராய்ச்சி முடிவுகளின் வாயிலாக அறியமுடிகிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவில் சிட்டுக்குருவிகள் மனிதர்களால் கொண்டுசெல்லப்பட்டு இப்போது அவை எண்ணிக்கையில் மிகுந்து சில பகுதிகளில் அந்நாட்டுக்குச் சொந்தமான பல பறவைகளின் பெருக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவிலுள்ள சிட்டுக்குருவிகளுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேண்டுமா? இந்தியாவில் அழிவின் விளிம்பில் தொற்றிக்கொண்டிருக்கும் பல பறவையினங்கள் இருக்கும் போது அவற்றையெல்லாம் காப்பாற்றும் முயற்சியின் ஈடுபடாமல் உலகெங்கிலும் காணப்படும் சிட்டுக்குருவிக்காக பரிதாபப்படுவது சரியா? இது எந்த விதத்திலாவது நம் நாட்டின் பல்லுயிர் பாதுகாப்பிற்கு உதவுமா?
உதவும். இதுவரை புலி போன்ற வசீகரமான விலங்குகளின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுப்பதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் தான் முதலிடம் தரப்பட்டு வந்தது. அந்த வகையில் பல இடங்களிலும் காணப்படும் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பிற்காக அதற்கென ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நல்லதே. இந்த விழிப்புணர்வை சிட்டுக்குருவிக்கு மட்டுமே இல்லாமல் நாம் நாட்டில் உள்ள பல அழிந்து வரும் பறவையினங்களுக்காகவும் செய்ய வேண்டும். அதற்கு சிட்டுக்குருவி பாதுகாப்பை ஒரு முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம். பறவைகளால் இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க இதைப்போன்ற தினங்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் ஏற்படும் விழிப்புணர்வினால் அவற்றை பாதுகாக்கும் எண்ணமும், அவை அழியாமல் இருக்கச் செய்ய வேண்டிய தகுந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பெருகும்.
பத்திரிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேளையில் ஒரு உயிரினத்தின் அழிவிற்கான அல்லது பெருக்கத்திற்கான காரணங்களை அத்துறையில் பலகாலமாக ஈடுபட்டு வருவோரிடம் கேட்டறிந்து பிரசுரிப்பதே நல்லது. எனினும் பல நேரங்களில் அனுபவமில்லாதவர்களின் கருத்துக்களையோ, வேறு நாட்டில் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகளையோ பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இதைப் போன்ற ஆராய்ந்தறியாமல் வெளியிடப்படும் அரைவேக்காட்டுச் செய்திகளினால் மூன்று முக்கிய பிரச்சனைகள் எழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல காலமாக பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கோபி சுந்தர் கூறுகிறார்.
முதலாவதாக பிணந்தின்னிக்கழுகளின் நிலையை உதாரணமாகக் சொல்லலாம். இப்பறவைகள் நம் நாட்டின் பல பகுதிகளிலிருந்து முழுவதுமாக அற்றுப்போய்விட்டன. அடுத்த சந்ததியினர் இப்பறவையை படங்களில் மட்டுமே பார்த்தறியும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுந்த அடிப்படைத்தகவல் இல்லாத சிட்டுக்குருவியின் வீழ்ச்சியை பெரிது படுத்துவதால் அழிவின் விளிம்பில் இருக்கும் இதைப்போன்ற பல பறவைகளைக் காப்பாற்ற வேண்டியதற்கான கவனம் சிதறியோ, திசைதிருப்பப்பட்டோ விடுகிறது. எதற்கு அக்கறை காட்ட வேண்டுமோ அதை விட்டுவிட்டு தேவையில்லாத அல்லது உடனடியாக கவனம் செலுத்தத் தேவையில்லாத ஒன்றிற்காக நம் நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்வது எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது.
இரண்டாவதாக , இது தான் இப்பறவைகள் குறைவதற்கான காரணம் என அறிவிக்கப்படுவதாலும் அந்த செய்தியை பரவலாக்குவதாலும் பலரும் அதையே உண்மையென நம்பிவிடும் அபாயம் உள்ளது. இதனால் அறிவியல் துல்லியமான கருத்துக்களே மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இத்துறையில் பலகாலமாக ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களின் நீண்டகால உழைப்பும் வீணாகிறது.
மூன்றாவதாக மிக முக்கியமானதாக, அத்தகவல்களை அவர்கள் மறுக்கும் போதோ, உண்மையான காரணங்களை முன் வைக்கும் போதோ அவர்களின் கூற்று செல்லுபடியாகாமல் போகும் அபாயமும் உள்ளது.
நீங்கள் சிட்டுக்குருவியின் காதலரா? அது குறைந்து போனதற்காக அனுதாபப்படுகிறீர்களா? அது மட்டுமே போதாது அவற்றை காப்பாற்றுவதற்கு. அவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் அறிவியல் பூர்வமான முயற்சிகளில் பங்களியுங்கள். சிட்டுக்குருவியை பார்க்கும் அதே வேளையில் இந்தியாவிலுள்ள சுமார் ஆயிரத்து முந்நூறு பறவைகளின் மீதும் கவனம் செலுத்துங்கள். உங்களது ஆர்வமும், அனுதாபமும் சிட்டுக்குருவியிலிருந்து தொடங்கட்டும்.
——————————————————————————————————————————————————————
22 ஏப்ரல் 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது . இதன் PDFஐ இங்கே தரவிரக்கம் செய்யலாம்.
Dr. கோபி சுந்தர் (Dr. K. Gopi Sundar) சிட்டுக்குருவிகளைப் பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையினை இங்கே காணலாம்.
——————————————————————————————————————————————————————
சிட்டுக்குருவிகள் குறைந்து விட்டன என்று சொல்லும் முன் இதற்கு முன் எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்திருப்பது மிக மிக அவசியம். ஆனால் இந்தியா முழுவதிலும் எங்கெங்கு எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன என்பது இதற்கு முன் கணக்கெடுக்கப்படவில்லை. இந்த அடிப்படைத் தகவலை இந்தியா முழுவதிலிருந்தும் திரட்டுவதற்கான முயற்சி citizensparrow எனும் மக்கள் அறிவியல் (Citizen Science) திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது. ஓரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலகட்டத்தில் சிட்டுக்குருவிகளின் இருப்பையும்(presence) இல்லாமையையும் (absence) இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து இக்காலகட்டத்தில் சுமார் பத்தாயிரம் பதிவுகள் செய்யப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு 1 ஏப்ரல் – 15 ஜூன் 2012 வரை நடைபெற்றது. இது ஒரு இணைய கணக்கெடுப்பு. இக்கணக்கெடுப்பின் சுருக்கமான தரவுகள் சில:
பல இடங்களில் முன்பு இருந்ததை விட தற்போது எண்ணிக்கையில் சற்று குறைந்துள்ளது *† .
சிறுநகரங்களையும், கிராமங்களைக்காட்டிலும் மாநகரங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பது தெரியவந்தது.
எனினும் இது மாநகரத்திற்கு மாநகரம் மாறுபட்டு இருந்தது. உதாரணமாக மும்பை, கோயம்பத்தூர் முதலிய நகரங்களில் பல இடங்களில் பரவியிருந்ததும், பெங்களூரு, சென்னை முதலிய நகரங்களில் பல இடங்களில் இல்லாமலும் இருந்தது தெரியவந்தது.
முழுவிவரங்களையும் (ஆங்கிலத்தில்) இந்த PDF ல் காணலாம். மேலும் விவரங்களுக்கு www.citizensparrow.in
இணையத்தை பார்க்கவும்.
*† இக்கணக்கெடுப்பின் தரவுகளை மிகவும் கவனத்துடன் விளக்கவும், புரிந்து கொள்ளவும் வேண்டும். முதலில் இது ஒரு இணையக் கணக்கெடுப்பு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். குறுகிய காலகட்டத்தில் விரைவாக நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பின் தரவுகள் ஓரளவிற்கு சிட்டுக்குருவிகளின் நிலையை வெளிப்படுத்தினாலும் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்னரே அவை எண்ணிக்கையில் குறைந்து அல்லது அதிகமாகி வருகின்றனவா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும். இத்தரவுகளை மேலோட்டமாக புரிந்து கொண்டு பொத்தம் பொதுவாக எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவிகள் குறைந்து வருகின்றன எனும் முடிவுக்கு வந்து விடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக