செவ்வாய், 20 மார்ச், 2018

உலக காடுகள் தினம் மார்ச் 21.,( International Day of Forests )


உலக காடுகள் தினம் மார்ச் 21.,( International Day of Forests )

பன்னாட்டு வன நாள் ( International Day of Forests ) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012 ,
நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியும் வருகிறது.



உலக காடுகள் தினத்தன்று இந்த உறுதிமொழியை ஏற்போமா? #InternationalForestDay நன்றி விகடன்.

மார்ச் 21-ம் தேதியான இன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. காடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலையை சீராக வைத்துக்கொள்வதில் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது தவிர, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் முன்னொரு காலத்தில் காடுகள்தாம் புகலிடம். நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன் மனிதன் காட்டை அழித்து நிலங்களைப் பிரித்துக்கொண்டான். ஆனால் இன்னும் காடுகள் வன விலங்குகளுக்குப் புகலிடமாகவே விளங்குகிறது. அதேபோல மனிதன் வாழ்வதற்குத் தேவையான காற்றினைக் கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக அதிகம். இந்தக் காடுகள்தாம் மனித இனத்தின் வரம். மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை மூலமாகவும், மண் அரிப்பினைத் தடுப்பது மூலமாகவும், பழங்களை உணவாகக் கொடுத்தும் மனிதனுக்குப் பல வழிகளில் காடுகள் உதவியாக இருந்துவருகின்றன.

காடுகளில் ஊசி இலைக்காடுகள், சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றாற்போல அமைந்துள்ளன. இந்தியாவின் மொத்தக் காடுகளின் பரப்பு 6 லட்சத்து 30 ஆயிரம் ச.கி.மீ. இந்தியாவில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டுள்ளன. காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல அது ஓர் உயிரியல் சார்ந்த கட்டமைப்பு. வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தொடங்கிவிட்டன எனச் சொல்லும் முன்னர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதனுடைய வனப்பகுதியை அழித்து, வாழ்வாதாரத்தை நிர்கதியாக்கிவிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராமல் என்ன செய்யும். அதேபோல காடுகளை அழித்துவிட்டு கட்டடங்களாக மாற்றிக்கொண்டால் விலங்குகள் எங்கே போகும். காடுகளிலிருந்த பறவைகளும் எங்கே போகும். உயிர்ச்சூழலைக் காக்கும் முக்கியப் பொறுப்பு வகிப்பவை மரங்கள்தாம்.
உலகில் இன்றைய புவி வெப்ப உயர்வுக்குக் காரணம் வனங்கள் பெரும்பான்மையாக அழிக்கப்பட்டதுதான். அதிலும் இந்தியாவில் அழிக்கப்பட்ட வனப்பரப்புகள் ஏராளம். சாலையை அமைக்க மரங்களை வெட்டும் நிறுவனங்களிடம், புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் ஓரங்களில் மரங்களை வளர்க்கச் சொல்லி அரசு வற்புறுத்தவும் இல்லை, அவர்கள் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால் ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரங்கள் நடப்படவேண்டும் என்பது அரசு விதி. அப்போது சாலை அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு யார் பதில் சொல்வது. இப்படி நிலப்பரப்பில் உள்ள மரங்களும், மலைப்பகுதிகளில் உள்ள மரங்களும் வெட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சில நிமிடங்களில் வெட்டப்படும் காடுகளை வளர்க்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். காடுகள்தாம் இந்த உலகத்தின் உயிர் மூச்சு.
இனி வரும் காலங்களில் மனித இனத்துக்கும் விலங்குகளுக்கும் ஆணிவேராகப் பயன்படும் காடுகளை அழிவின் பிடியில் இருந்து காப்பது நம் அனைவரின் கடமை. புதிதாகக் காடுகள் வளர்ப்பதற்கு அரசும் போதிய முயற்சி எடுக்க வேண்டும். இந்திய வனக்கொள்கையின்படி நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது வெறும் 20% காடுகள்தாம் இந்தியாவில் காணப்படுகின்றன. ஆரோக்கியமான காற்று, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடுகளை நீக்குவதற்கு மரங்கள் மிக முக்கியம். உலக வெப்பமையமாதலைத் தடுக்கவும் மரங்கள் மிக முக்கியம். விலைமதிக்க முடியாத காடுகள் அழிக்கப்பட்டால் விலங்கினம், பறவையினம் எனப் பல்லுயிர்த்தன்மை அழியும். பல்லுயிர்த்தன்மை அழிந்தால் மனித இனம் எங்கே போகும்?
காடுகள் அழிவதில்லை. அழிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் காடுகளுக்கு எதிராக மனிதர்கள் செயல்படுகிறார்களோ, அங்கெல்லாம் நமது குறைந்தபட்ச எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். இது நாம் காடுகளுக்காக மட்டும் செய்வதில்லை. நமக்காகவே செய்துகொள்வதும்தான்.


உலக வன தினம்
World Forest Day
உலகில் பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.
பொதுவாக மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.
காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன.
நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


உலக வளம் காக்கும் உலக வன தினம்

இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு.
மனிதர்கள் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்
பருவ காலங்கள் மாறும் போது ஏற்படும் சூழல் மாறுதலில்,மெல்லிய காற்று நம்மை வருடி செல்வதை, தென்றல் நம் உடலை சிலிர்க்க வைப்பதை, குளிர் காற்று நம்மை நடுங்க செய்வதை, குயில் கூவுவதை, ஆந்தை அலறுவதை, நம் இல்லத்து தோட்டத்தில் இருக்கும் செடிகளில் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்வதை, பருவ காலத்திற்குகேற்ப பூச்சிகள், வண்டுகள் அதிகமாகி பிறகு அழிவதை,என இயற்கைக் காட்சிகளை நுணுக்கமாக இரசிப்பதால் நல்ல மன நலத்துடன் வாழ முடியும்.
மலைகளும்,காடுகளும்,நதிகளும்-இயற்கையின் இயக்கத்தில் இயக்கப்பட்டு காலபோக்கில் செதுக்கப்பட்டு,பல்வேறு விதமான உயிரின சூழலும், வாழ்விடங்களும்,பல்லுயிர்க்கு ஏற்றவாறு அமைந்து, உயரினங்கள் பல்கி பெருக எதுவாக அமைந்தது.
பல வகையான உயிரினங்களும், மரங்களும், செடிகளும், அதில் விதவிதமான மலர்கள், காய்கள், கனிகள், உயிரினங்கள், என்று காலகாலமாக பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கை என்று சொன்னாலே மனம் மகிழ்ச்சி அடைய கூடிய வகையில் இயற்கைக் காட்சிகள் நமது உள்ளத்தை பூரிப்படைய வைக்கும் திறன் கொண்டது ..!
நமது இயற்கை பிணைப்பை, தொடர்பை மீட்டெடுக்க வேண்டும்.
இயற்கை சார்ந்த அறிவொளி மரபு உண்டாக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் பொதுவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். '
நீரின்றி அமையாது உலகு'என்று அறிந்திருப்போம் ஆனால்
நீர் ஆதாரங்ககளை காப்பாற்ற, பாதுகாக்க தவறுவோம்,
நீரை அசுத்தப்படுத்துவோம், விரையமாக்குவோம்,
நீர் இல்லை என்றால் சாலை மறியல் செய்வோம்.
ஆகவே அனைத்து மக்களுக்கும் இயற்கைப் பற்றி
அறிவியல் ரீதியாக விளங்க வைக்க வேண்டும்.
அனைவரும் இயற்கையை புரிந்து, அறிந்து கொள்ள முயற்சிப்போம்,
இயற்கையை பாதுகாக்க முயற்சி செய்வோம் என மார்ச் 21 உலக வன தினத்து அன்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
புல், பூண்டு முதல் விலங்குகள் வரை உயிரின பரவல்
முறையாக இருந்தால்தான், உயிரின இயக்கமும் முறையாக
இருக்கும். மரங்கள் வளரும். மழை கிடைக்கும்.
 மேற்கு தொடர்ச்சி மலையில் மருந்து தயாரிக்கப் பயன்படும்
மூலிகைகள் நிறைந்துள்ளன.
மிளகு, அரிசி, காட்டு மஞ்சள், முருங்கை போன்ற
மலைத் தொடர்பான இயற்கை தாவரங்கள் உள்ளன.
இதுபோன்ற தாவர வகைகளின் 'ஜீன்' பிரித்து தரமான
தாவரங்களை உருவாக்கி, மனிதனுக்கு தேவைப்படும்
வகையில் அவற்றை பயன்படுத்தலாம்.
உலகமே 'ஓசோன்' ஓட்டையால் வெப்பம் அதிகரிப்பதை
எதிர்த்து ஓங்கி குரல் கொடுத்து வருகிறது.
அடர்ந்த மரங்களால், பரந்த வனங்களை வெட்டி வீழ்த்தியதே,
தட்ப வெப்ப நிலை தடுமாற்றத்திற்கு காரணம்...!
அதனால் வெப்பத்தைத்தாங்கும் திறன் இயல்பாகவே
குறைந்த வெள்ளையர்கள் தோல் புற்று நோயால் மிகவும்
பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்..
தங்கள் தோலை வெள்ளை நிறத்திலிருந்து பிரவுன் நிறத்திற்கு மாற்றிக்கொள்ளும் தோல மாற்று அறுமை சிகிச்சைக்கு எக்கச்சகமாக செலவளிக்கிறார்கள்..
நாமோ சிவப்பழகு மோகம் கொண்டு பெருதொகையை அழகு நிலையங்களுக்கும் , சிவப்பழகு கிரீம்களுக்கும் செலவழிக்கும் கொடுமையை என்ன சொல்வது . .! அக்கரை பச்சை கதை தான் ..!


உலக காடுகள் தினம்! – மார்ச் – 21
 :aanthai

பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மனித இனம அதன் வரலாற்றில் சந்தித்துள்ள நெருக்கடியான பிரச்னைகளில் இது வரை சந்திக்காதது புவி வெப்பமடைதலால் ஏற்படும் பல்வேறு அழிவுகள். முக்கியமாக காடுகளை அழிப்பதை நிறுத்துவது மற்றும் புதிதாக அதிக மரங்களை வளர்ப்பது மூலம்தான் புவி வெப்பம் அடைதலை தடுக்க முடியும்.வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது. அங்குள்ள மரங்களை நாம் வெட்டி விடுவதால் மழை குறைந்துவிடுகிறது. இதனால், விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றன.
நம் இந்தியாவில் சுமார் 24% காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 2.2 கோடி பேர் வன நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளார்கள். சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன. நாட்டில் நில பரப்பில் 35 சதவிகிதத்தை காடு வளர்ப்பு மற்றும் மர வளர்ப்பின் கீழ் கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. காடுகளை அவைகளின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அக்கறையுடன் வளர்க்கப்பட இருக்கிறது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் காடுகள் மற்றும் மரங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.


காடுகள் அதிகரித்திருப்பதாக சொல்லும் மத்திய அரசு... ஆனால், உண்மை என்ன?
"அதிக மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் தேவைகளையும் தாண்டி வனங்களைப் பாதுகாத்ததோடு, இந்தியாவில் வனப்பரப்பு 1% அதிகரித்தும் இருக்கிறது" என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. ஹர்ஷவர்தன் பெருமையாகக் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியக் கானக அளவை நிறுவனம் வனப்பரப்பு தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிடும். அதன் 2017-வது அறிக்கையின் படி இந்தியாவில் 1% அளவிற்கு வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதை வைத்துக்கொண்டுதான் அவர் மேற்கூறிய கருத்தினைப் பதிவு செய்துள்ளார். அது ஒரு பக்கம் இருக்கட்டும். கானக அளவை நிறுவனம் நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் வனப்பரப்பினை அளப்பதற்கு அவர்கள் வைத்துள்ள அளவுகோல் என்னவென்றால், 1 ஹெக்டேர் அதாவது 2.45 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 10% மரங்கள் இருந்தாலே போதும், அது காடு என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

2015-ஆம் ஆண்டு 7,64,566 சதுர கிலோ மீட்டரிலிருந்து 2017-ஆம் ஆண்டில் 7,67,419 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்று கூறும் நாம், 2013-ஆம் ஆண்டில் இருந்த 4,402 ச.கி.மீ காடுகளை இழந்துவிட்டோம் என்பதை மறக்கக்கூடாது. காடுகளுக்கு வெளியே உள்ள மரங்களின் அளவு முன்பை விட 1,243 ச.கி.மீ அதிகரித்தது ஆரோக்கியமானதே. மக்களுக்கு இயற்கை மீதான அக்கறை வளர்ந்து கொண்டிருப்பதை இது காட்டுகிறது. ஆனால் அரசாங்கம் அதே உத்வேகத்துடன் செயல்படுகிறதா?
2015-ஆம் ஆண்டினை விட 2017-இல் முன்னேற்றம் இருந்தாலும், 2013-ஆம் ஆண்டின் இழப்பை நாம் இன்னும் ஈடுசெய்யவில்லை.

மத்திய அமைச்சர் நாட்டின் பசுமைப் போர்வை பற்றி மகிழ்ச்சியோடு எடுத்துரைத்து இருந்தாலும், அதன் முன்னேற்றம் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. வன அளவைக் கூறும் அதிகரித்த வனப்பகுதிகளை கவனித்தால், அழிக்கப்படும் காடுகளைப் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது புரியும். 2017-ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில் காட்டப்பட்டுள்ள பசுமைப்போர்வை முற்றிலுமாக இயற்கைக் காடுகளால் உருவானது அல்ல. முதலில் இவர்கள் இயற்கைக் காடுகள் மற்றும் செயற்கைக் காடுகள் என்று தனித்தனியாகப் பதிவு செய்யவே இல்லை. பொருளாதார லாபத்திற்காக யூகலிப்டஸ், தேக்கு, சந்தன மரம், கால்நடைகளுக்கான தீவனம் என்று பயிரிடப்பட்ட பகுதிகள் கூட காடு என்ற வரையறைக்குள் தான் இங்கே திணிக்கப்பட்டுள்ளது.
காப்புக் காடுகள் (Reserved forests), உள்ளூர்க் காடுகளோடு சேர்த்து 31,840 ச.கி.மீ அளவிலான காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது காப்புக் காடுகளில் 10,657 ச.கி.மீ மற்றும் வெளிப்புறக் காடுகளில் 21,183 ச.கி.மீ என்று இழந்துள்ளோம். அதே சமயம் வேறு சில வெற்றிடங்களில் சுமார் 24,000 ச.கி.மீ அளவிற்குப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையாக ஒரு வனப்பகுதி தோன்றுவதற்கு முழுமையாகப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்ளும். ஆனால், இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு வனப்பரப்பு எப்படித் தோன்றியது? விரைவான வளர்ச்சிக்கு இயற்கையோடு மனிதர்களும் இணைந்து பணிபுரிந்து இருந்தால்கூட இத்தனை விரைவாக வளர்வது அசாத்தியமானது. அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருக்கக்கூடிய பரப்பு, அரசாங்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரப்பளவு 21.55% இல் 12.37% தான். மீதி 10.58%, வனங்களுக்கு வெளியே ஆங்காங்கே இருக்கக்கூடிய தொடர்பற்று இருக்கும் துண்டாக்கப்பட்ட காட்டுப் பகுதிகள்.
அந்த பாதுகாக்கப்பட்ட காடுகளில் கூட வெறும் 2.99% மட்டுமே அதிகமான அடர்த்தியுள்ள காட்டுப்பகுதி. இங்குதான்
அரிய வன விலங்குகள் வாழ்கின்றன; அதிகமான அரிய வகை பூர்விகத் தாவரங்கள் இருக்கின்றன. எங்கே இயற்கையின் செயல்பாடு அதிகம் இருக்குமோ அங்கே வனப்பரப்பு மிகவும் குறைவு. பாதிக்கும் மேல் வெட்டவெளிக் காடுகள் என்பது அடர்த்தியான காடுகளில் வாழக்கூடிய யானை, புலி போன்ற பேருயிர்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கின்றன. அதிலும் பெரும்பாலானவை இயற்கையாக உருவானது இல்லை. அதிவேகமாக வளரக்கூடிய மரங்களை நட்டு மனிதர்களால் பராமரிக்கப்பட்டவை. இத்தகைய செயற்கைக் காடுகளால் கிடைக்கும் பயன்களைவிட பாதிப்புகளே அதிகம். பல்லுயிர்ச்சூழல் இயற்கைக் காடுகளில் இருப்பதைவிட இங்கே மிகவும் குறைவாகவே இருக்கும். நீர்வழிகள் இயற்கையாகப் பராமரிக்கப்படுவது தடைப்படும். கரிமத் தன்மயமாக்கல் எனப்படும் கார்பன் சுத்திகரிப்பு முறை நடைபெறாது. இவ்வாறு இன்னும் பல குறைபாடுகள் இதில் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு நியாயமான கணக்கெடுப்பை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். நல்லது செய்துவிட்டோம் என்று சமாளிக்காமல் நாட்டிற்கு எது நன்மையோ, எது தேவையோ அதைச் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக