புதன், 25 ஏப்ரல், 2018

வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874


வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874

மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர்.

இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897-ல் மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர், வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

மார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன்-அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ, புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது.

இளமைப் பருவத்தில் இவர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகம். வீட்டிலேயே இருந்து நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 1905-ல் மார்க்கோனி ஓபிரெயின் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். ஒரு மகள் சில வாரங்களிலேயே இறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமண முறிவு செய்து கொண்டு பிரிந்தனர்.

மார்க்கோனி தன் இல்லத்திலும் தனியே ஆய்வுகளைச் செய்து வந்தார். எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும் என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894-ல் மின் அலைகள் மூலமாக சைகைகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார். வானொலி அலைகளைக் கொண்டு கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி அதற்கான 1895-ம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய திசைதிரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். இந்த அரிய முயற்சியில் இத்தாலி அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.

எனவே, லண்டன் சென்ற மார்க்கோனி அங்கு தன்னுடைய ஆய்வினைப் பற்றிய செய்திகளை விளக்கினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் வில்லியம் ஃப்ரீஸ் என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1897-ம் ஆண்டு மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பியை (Transmitter) உருவாக்கினார். 1897-ல் மே 13-ந்தேதி நீரின் வழியாக நீங்கள் தயாரா? என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்துகின்ற ஒலிபரப்பியை உருவாக்கினார்.

இவருடைய இந்த ஆய்வில் மனங்கவர்ந்த ஃப்ரீல் பொது மக்களிடையே கம்பியில்லாத் தந்தி முறை (Telegraph without wire) என்ற தலைப்பில் 11 டிசம்பர் 1896-ல் டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார். பிறகு அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897-ல் 'மார்க்கோனி நிறுவனம்' இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.1897-ல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899-ல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார்.

இவற்றைக் கவனித்த இத்தாலி அரசாங்கம், பிறகுதான் மார்க்கோனி மீது கவனத்தைச் செலுத்தியது. அதன் விளைவாக இவர் பிறந்த மண்ணில் 1897-ல் ஜூலை மாதம் லாஸ்பீசியா(La Spezia) என்ற இடத்தில் தன்னுடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். அங்கு அரசு தனக்களித்த உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அவர் அங்கிருந்து செய்தி சுமார் 20.கி.மீ. அப்பால் இருந்த போர்க்கப்பல்களுக்கு எட்டியது. 1898-ல் கிழக்குக் காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொலிக்கருவி ஒன்றை அமைத்திருந்தார். சில காலத்திற்குப் பிறகு அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியது. அதனால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலிச் சாதனம் மூலம் அதில் இருந்தவர்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையைக் குறித்த செய்தியைப் பரப்பினார்.

அதை அறிந்த கலங்கரை விளக்கப் பகுதியில் இருந்த உயிர் மீட்புப் படகுகள் அவர்களைக் காப்பாற்றினர். 1905-ல் வர்த்தகக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியற்ற தகவல் தொடர்பு கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைக்கு அதிகமாகப் பயன்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக