திங்கள், 28 மே, 2018

உலக தம்பதியர் தினம் மே 29.





உலக தம்பதியர் தினம் மே 29.

உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக அளவில், பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது...


உலக தம்பதியர் தினம் கொண்டாடலாமே!

உலக அளவில், பல சம்பவங்களின் அடிப்படையில், பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், அப்படியான தினங்கள் ஒவ்வொன்றும், ஏதாவது ஒரு வகையில் மனித உறவுகளை மையப்படுத்தி தான் இருக்கும். இப்படியான தினங்களை அறிவித்து, அதை கொண்டாடுங்கள் என அறிவிப்பது, உலகமே உறவுகளாலும், நட்பு, காதலாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தான்.
ஆனாலும், மேலைநாடுகளில் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடப்படும் பல தினங்களை, நம் நாட்டில் நாம் கண்டு கொள்வதில்லை.
மிக விமரிசையாக அந்த தினங்களை அனுபவிக்கவில்லை என்றாலும் இப்படியான தினங்கள் உண்டு. இதுவரை இந்த தினங்களை கொண்டாடியிருக்கிறீரா; இனியாவது கொண்டாடுவீரா என, நம் நாயகியரை அவர்களின் நாயகருடன் கேட்ட போது...
எனக்கும், ரவிக்கும், 1988ல், கோவையில் திருமணம் நடந்தது. பொதுவாக, மார்ச், 8ம் தேதி எப்படி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறதோ அதே போன்று, மே, 29ல் தம்பதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. என் கணவர் படப்பிடிப்புகளுக்காக மேலைநாடுகளுக்கு போய் வருவதால், இது மாதிரியான தினங்களை ஞாபகமாய் கொண்டாட வைத்து விடுவார். இதுவும் நல்லதற்கு தானே. கடந்த கால நினைவுகளை, மலரும் நினைவுகளாய் அசை போட இது உதவும். இடையில் இருவருக்கும் மட்டுமல்ல; இரு குடும்பங்களுக்கும் இடையில் இருக்கும் மன கசப்புகள் கூட மறையலாம். உலக குடும்ப தினம் எப்படி, அனைத்து உறவுகளாலும் கொண்டாடப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவத்துடன், இந்த உலக தம்பதியர் தினம் கொண்டாடப்படுவதும் நல்லது.
திருமதி விஷ்ணுபிரியா நிழல்கள் ரவி
எங்களுக்கு, சென்னை, வடபழனி முருகன் கோவிலில், 1972ல் திருமணம் நடந்தது. என்னவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி; மேலும், ஒரு பத்திரிகையாளர். நாங்கள் எங்கள் பிறந்த நாள், கல்யாண நாள், பிள்ளைகளின் பிறந்த நாள், பேரன், பேத்திகளின் பிறந்த நாள் என, ஏதாவது விஷேசமாக கொண்டாடிக் கொண்டே தான் இருப்போம். பண்டிகைகளும், விரதம், சடங்குகள், இப்படியான தினங்கள் கொண்டாடுவதே, உறவுகளுடன் நேரம் செலவழிக்கவும், உறவை பலபடுத்திக் கொள்ளவும் தானே! மகளிர் தினம், அம்மா, அப்பா, குழந்தைகள், குடும்பம் என, சிறப்பு தினங்கள் கொண்டாடுவது போல, இந்த தம்பதியர் தினத்தையும் கொண்டாடுவதில் தவறொன்றுமில்லை. இது தேவையான நல்ல விஷயம் என நினைத்து கொண்டாடுங்கள்.
திருமதி கஸ்தூரி லோகநாதன்
எங்கள் திருமணம், 1987ல் திருவேற்காட்டில் நடந்தது. குடும்பம் என இருந்தால், பல உறவுகள் வேண்டும். அப்படி உறவுகள் இருந்தால், குடும்ப பிரச்னைகளுக்கும் குறைவிருக்காது. அத்தனை மனக் கசப்பையும் நீக்கி சரிபடுத்தி, குடும்ப உறவுகளிடம் மட்டுமல்லாமல், தம்பதியரிடமும் சுமுகமான உறவை ஏற்படுத்த, இப்படி ஏதாவது தினத்தைக் கடைபிடித்து கொண்டாடுவது. என் கணவர் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் என்பதால், எப்போதுமே வேலையென்றே இருப்பார். அதனால் கிடைக்கும் நேரத்தில், பெரிதாக மெனெக்கெடாமல் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை தினங்களை கொண்டாடுவது போல, இதையும் கொண்டாடினால் கூடுதல் மகிழ்ச்சி தானே! அதனால் இனிமேலாவது, மே, 29 ஞாபகமாய் தம்பதியர் தினத்தையும் கொண்டாடிடுவோமே!
திருமதி ப்ரியா சிவன் சீனிவாசன்
எங்கள் திருமணம், 1979ல் நடந்தது. இப்படி ஏதாவது தினத்தை முன்னிறுத்தி வாழ்த்துகளையும், பரிசுகளையும் ஒவ்வொருவருக்குள் பரிமாறிக் கொள்வதற்காகவாவது, தம்பதியர் தினத்தை கொண்டாடலாமே. அன்று போஸ்டர் அடித்து, மேடை போட்டு, உறவுகளுக்கு சொல்லி, விருந்து வைத்தா செய்யப் போகிறோம். தம்பதியருக்குள் வாழ்த்துகளை பரிமாறி, பழைய மலரும் நினைவுகளை அசை போட்டு, பேரப் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது தான். இதனால், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் செலவோ, வேலையோ நாம் வைக்கப் போவதில்லை. அதனால் கண்டிப்பாய் இப்படியான தினங்களை தேடி கண்டுபிடித்து கொண்டாடினால், நம் வரும் காலங்கள் வசந்தமாய் இருக்கும்.
திருமதி பத்மா நடராஜன்
இந்த ஆண்டு, 2016ல் தான் எங்கள் திருமணம் திருச்செந்தூரில் நடந்தது. நீங்கள் சொல்லி தான் இப்படி ஒரு நாள் இருப்பதே, எங்களுக்கு தெரிய வந்துள்ளது. அதனால், கண்டிப்பாய் எங்களின் முதல் வருட பிறந்த நாள், திருமண நாள், பிறக்க போகும் குழந்தைகளின் பிறந்த நாள் வரிசையில், இந்த தம்பதியர் தினத்தையும் கொண்டாடப் போகிறோம். உறவுகளுக்குள் ஏற்படலாம் என்கிற மாதிரியான சின்ன சின்ன மனக் கசப்பைக் கண்டுபிடித்து சரி செய்து கொள்ள, இப்படியான தினங்களை கொண்டாடுவதில் தயக்கம் ஒன்றுமில்லை. மகிழ்ச்சியான விஷயம் தான். எங்களின், 50வது திருமண நாளை எப்படி கொண்டாட திட்டமிடுகிறோமோ அதே அளவு, எங்களின் தம்பதியர் தினத்தையும் கொண்டாட, இதோ இன்றே தீர்மானித்துவிட்டோம்.
திருமதி கலையரசி சரவணன்
நாட்டில் ஆயிரம் அரசியல் மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் என, எது நடந்தாலும், அதையெல்லாம் எதிர் கொள்ளவும், சமாளிக்கவும் நாம் நம்மை முதலில் திடமும், தெளிவும் குடும்ப அளவில் ஏற்படுத்திக் கொள்ள இது மாதிரியான தினங்கள் மிக அவசியமாகவே இருக்கின்றன. நன்றி  தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக