திங்கள், 11 ஜூன், 2018

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12 .(World Day Against Child Labour )


உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12 .(World Day Against Child Labour ) 

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour ) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது . ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது  உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

நோக்கம்

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.

உடல் ரீதியான பாதிப்பு

உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்
உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு
உடல் ரீதியான பாதிப்பு
கொடிய வறுமை, உட்டசத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால்
ஆஸ்துமா , காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.

உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன.

உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.
கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்
சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .
சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்
கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.
"குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல" என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஓவ்வொருவருக்கும் ஒரு காலமும் இருக்கிறது.ஒரு கடமையும் இருக்கிறது.அந்தந்தக் காலத்தில் அந்தந்தக் கடமையைச் செய்து வர வேண்டும். இதுவே சரியான ஒழுங்குமுறையாகும். இந்த ஒழுங்குமுறை மீறப்படுமானால் அதுவே சமூகச் சீரழிவாக மாறிவிடும்.
அரும்பு, மொட்டு, மலர், காய், கனி என்ற வளர்ச்சிப் பருவம்தான் தாவரங்களின் இயற்கை நியதி.இதில் மாறுபாடுகள் ஏற்படுமானால் அது அரும்பிலேயே அழுகி, மொட்டிலேயே கருகி, பூவிலேயே சருகாகி, பிஞ்சிலேயே வெம்பிப் போய்விடும் அல்லவா ? இந்த இயற்கை நியதி எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். மனிதர்களுக்கு மட்டும் பொருந்தாமல் போகுமா என்ன ?
மனித குலம் குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள், முதியவர்கள் என வளர்ச்சி பெறுகிறது. இந்தப் படிநிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இது மாறுபடுமானால், சமுதாயம் சீரழிவுக்கு உள்ளாகும்.
இளமைப் பருவம் கல்விக்கானது. “இளமையில் கல்’ என்றும், “இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்றும் கூறப்படுவது அதனால்தான். படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும்; பணியாற்ற வேண்டிய வயதில் பணியாற்ற வேண்டும், இதற்கு ஏறுமாறாகப் படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியாமல் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவது சமுதாய சீர்கேட்டின் அடையாளமாகும்.
இதனை எதிர்த்துதான் ஜூன் மாதம் 12-ஆம் திகதி உலகம் முழுவதும் “குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின’மாகக் கொண்டாடப்பட்டடு வருகின்றது. நமது நாட்டிலும் கூட விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்கங்களும், கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்படுகின்றன.
“”குழந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம், வீட்டுக்கு அவமானம்” என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளில் அனைத்துப் பெற்றோர்களும் குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதோடு 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதி பூணவேண்டும்.
நாடெங்கும் பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கலாம். தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், கூலி வேலை, எடுபிடி வேலை என எங்கும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதைக் கண்டும் காணாததுபோல நடந்து கொள்கின்றனர்.
எந்தக் கொள்கையானாலும், திட்டமானாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்க முடியாது.
குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 1974 முதல் நடைமுறையில் இருந்தாலும் அது குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக, அரசின் கடமைகளை ஓரளவு அங்கீகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
“”மனிதன் பிறந்த நிலையிலேயே விட்டுவிடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும். பலபேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து போகும். கல்வியற்ற மனிதனும் அழிபட்டுப் போவான்…” என்றார் கல்வியியலைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ.
படிக்க வேண்டிய வயதில் தொழில் செய்ய அனுப்பப்படும் குழந்தைகளின் நிலையும் அப்படித்தான்.
குழந்தைகளை வேலைக்கு வைப்பதை அனைவரும் எதிர்ப்போம் என இந்த நாளில் உறுதிபூணுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக