செவ்வாய், 5 ஜூன், 2018

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஜூன் 6 .


தமிழீழ மாணவர் எழுச்சி நாள்  ஜூன் 6 .

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
சிவகுமாரனின் நினைவு நாளாகிய
ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.


தமிழீழ மாணவர் எழுச்சி தினம்!
ஈழ தமிழர்களின் மனதில், போராட்டகுணத்தை ஊட்டிய தியாகி.பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக இன்று (சூன் 6) தமிழீழ மாணவர் எழுட்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1950களில் , இலங்கையில் சிங்கள இனவாதத்தால், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டுக்கொண்டிருக்கையில் தான், தமிழ் சுதந்திர வேட்கை ஆரம்பமானது. உரும்பிராயை சேர்ந்த தியாகி பொன். சிவகுமாரன் மாணவராக இருந்த காலத்திலேயே தமிழின உணர்வும், விடுதலை வேட்கையும் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைளையும் நிலை நாட்ட, சிங்கள அரசுக்கு எதிரான ஆயுதப்போரட்டமே சிறந்தது என்று தமிழ் விடுதலை போரட்டத்திற்க்கு வித்திட்டவர் தியாகி. பொன்.சிவகுமாரன்.
சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை. புரட்சியும், போரட்டகுணமும் இளைஞர்களிடம் மிகுந்திருந்தது. மாணவர்களின் கல்வியை மட்டுப்படுத்துவதால், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில், மாணவர்கள் மீது வன்முறைகள் நடந்தன. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமல்படுத்தப்பட்டது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு அதிகாரிகள் மீதும், அமைச்சர்கள் மீதும் ஆயுதபோரட்டங்கள் நடைப்பெற்றது. சில முயற்சிகள் தோல்வி அடைந்து, சிறை செல்ல நேர்ந்தாலும், விடுதலை சிந்தனையை சிறைப்படுத்த இயலவில்லை. வன்முறை சார்ந்த போராட்ட முறை, உரிமைகளை நிலை நாட்ட வழியே தவிர, வன்முறையை கொள்கையாக இருக்கக்கூடாது என்பது, மாணவர்களுக்கு தாய்வீரனின் ஆலோசனை.தமிழ் மக்களின் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார்.
சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார். சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்லாமல், தமிழ் மக்களிடையே இருந்த சாதியம், பெண்களின் மீதான அடக்குமுறை, மணக்கொடை போன்ற பின்னடைவுகளுக்கு எதிராகவும் கடுமையாக போராடினார். விடுதலைக்காகவும், சமத்துவ வாழ்வுக்காகவும், துணிந்து போராடிய, சிவகுமாரன் அவர்கள், களசெயற்பாட்டில் ஈடுபட்டுகொண்டிருந்த போது, எதிரிகளால், சுற்றிவளைக்கப்பட்ட போது எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு ஜூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக, உலகமெங்கும் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட தாய்வீரனின் தியாகமும் வீரமும் தமிழீழத்திலும் உலகத்தமிழர்கள் மனதிலும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக