ஞாயிறு, 24 ஜூன், 2018

உலக வெண்புள்ளி தினம் ஜூன் 25.


உலக வெண்புள்ளி தினம் ஜூன் 25.

உலக வெண்புள்ளி தினம் நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவேஇ அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தோல் நிறமி இழத்தல் என்னும் இந்த சரும பாதிப்பு, தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பாகும். இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, விஷத்தன்மை உடைய அழுத்தம், நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது வைரஸ் காரணங்கள் போன்றவை இவற்றின் மூலமாக செயல்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக தோல் நிறமி இழப்பதை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல், மற்றொன்று கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்.
உலகளவில், தோல் நிறமி இழக்கும் இந்தப் பாதிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளது. [ஒரு சில குறிப்பிட்ட பகுதி மக்கள் தொகையில் மட்டும் சராசரியாக இரண்டு முதல் மூன்று சதவீத மக்கள் தொகையில் பாதிப்பு ஏற்படுகிறது, அத்துடன் சில இடங்களில் உள்ள மக்களுக்கு 16 சதவீத மக்கள் தொகையில் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடிசனின் நோய், ஹாஷிமோட்டோ தைராய்டியம் மற்றும் வகை 1 நீரிழிவு போன்ற நோய்கள் பெரும்பாலும் தோல் நிறமி இழத்தல் பாதிப்படைந்தவர்களைத் தாக்குகிறது. இதனைக் குணப்படுத்தும் தெளிவான முறை இல்லாவிட்டாலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் மேற்பூச்சு ஸ்டீராய்டு மருந்துகள், கால்சினெரின் தடுப்பான்கள் மற்றும் ஒளிக்கதிர் சிகிச்சைகள் போன்றவை முக்கியமானவை.


வகைப்படுத்துதல்

இந்த பாதிப்பினை, சமீபத்திய ஒருமித்த கருத்துக்களை மையமாகக் கொண்டு கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் மற்றும் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் கூறுபடுத்தப்படாத
தோல் நிறமி இழத்தலால் பொதுவாக பலர் பாதிக்கப்படுகின்றனர்.
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் வகை தோல் நிறமி இழத்தலில் சமச்சீர் முறையில் நிறமி இழக்கப்பட்ட சருமத்தில் பிணைப்புகள் தோன்றும். புதிய பிணைப்புகள் பெரிய பகுதிகளில் தோற்றமளிக்கும் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் தோற்றமளிக்கும். கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்பு எந்த வயதினருக்கும் வரும் சாத்தியக்கூறுகள் உண்டு (ஆனால் கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் 13 முதல் 19 வயதுடைய இளம்பருவத்தினருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்)
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தலின் உட்பிரிவுகள் பின்வருமாறு:
பொதுவான தோல் நிறமி இழத்தல்:
இது பொதுவாக ஏற்படும் தோல் நிறமி இழத்தல் ஆகும். நிறமிகள் இழக்கப்படும் அனைத்து உடல் பாகங்களிலும் இது ஏற்படும் வாய்ப்புள்ளது.
உலகளாவிய தோல் நிறமி இழத்தல்:
உடலின் பெரும்பகுதியினை தோல் நிறமி இழக்கும் நிகழ்வு சூழ்ந்துகொள்ளும்.
குவியும்படியான தோல் நிறமி இழத்தல்:
பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு பிரிவில், சருமத் தோலின் நிறப்புள்ளிகள் சிலவிடங்களில் மட்டும் குழிந்து காணப்படும்.
ஆக்ரோஃபேசியல் தோல் நிறமி இழத்தல்:
விரல்களில் அதிகமாக ஏற்படும் பாதிப்புகள்.
மியூகஸ் தோல் நிறமி இழத்தல்: கோழை போன்ற சவ்வுகளில் ஏற்படும் நிறமிகளின் இழப்பினால் ஏற்படும் பாதிப்புகள்.
கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல்
கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் வகை சருமப் பாதிப்பு இதர தொடர்புடைய நோய்களுக்கான காரணங்கள் மற்றும் நோய்த்தாக்கம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டவை. இதன் சிகிச்சை முறைகள் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்பில் இருந்து வேறுபட்டவை. முதுகெலும்பு தண்டுவடத்தின், முகுகுப்புற வேர்களுடன் தொடர்புடைய பகுதிகளில் இவ்வகைப் பாதிப்பு ஏற்படும். [கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்புகளை விட இவை விரைவாக பரவும் தன்மை கொண்டது. பொதுவான கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் பாதிப்பினைக் காட்டிலும் இதன் பாதிப்புகள் நிலையாகவும் அதிகமாகவும் இருக்கும்.

பாதிக்கப்படுபவர்கள்
உலக மக்களில் 0.5% முதல் 2% வரை மக்கள் இந்த தோல் நிறமி இழத்தல் பாதிப்புக்குள்ளாகின்றனர். அனைத்து இன மக்களும் இதில் சரிசமமாக பாதிப்படைகின்றனர். ஆண் மற்றும் பெண் என இருபாலரும் சம எண்ணிக்கையிலேயே பாதிக்குள்ளாகின்றனர். இருப்பினும் அதிகப்படியான பெண் நோயாளிகள் பற்றி வெளியில் தெரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 50 சதவீதம் நோயாளிகளுக்கு அவர்களின் சருமம் வெள்ளை நிறமாக மாற்றமடைதல் 20 வயதிற்குள்ளாகவே நடந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு இதுபோன்று நடப்பது பொதுவான நிகழ்வன்று. வயது முதிர்ந்தவர்களுக்கும், குழந்த பருவத்தினருக்கும் தோல் நிறமி இழப்பு ஏற்படும் நிகழ்வு மிகவும் குறைவு.
காரணங்கள்
வித்தியாசமான மாற்றங்களுக்குட்பட்டு இது மக்களைப் பாதிப்பதால் தோல் நிறமி இழப்புகள் எப்போது ஏற்படும், எப்படி ஏற்படும் மற்றும் எவ்வளவு தூரம் ஏற்படும் என்பது பற்றி துல்லியமாக கணிப்பது கடினம். இது குழப்பமான நோய்தோன்றும் வகையினைச் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில மரபணு சம்பந்தப்பட்ட காரணங்களால் கூட மெலனோசைட் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் 30% நோயாளிகள் தங்கள் குடும்பத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவரை கொண்டுள்ளனர்.
தூண்டுதல்கள்
தோல் நிறமிகள் இழத்தலைப் பின்வரும் காரணிகள் அதிகரிக்கின்றன.
குடும்ப தோல் நிறமி இழத்தலுக்கான வரலாறு
பீனால் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவது
கூடுதல் தைராய்டு சுரப்பி செயலாக்கத்தினால் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் அதிகரித்து மெலனோசைட்களை அழித்துவிடுதல்.
அழுத்தமான நிகழ்ச்சிகள்
நரம்பு மண்டல காரணங்கள்
வைரஸ் காரணங்கள்.

நாங்களும் சாதாரண மனுஷங்கதான்!


ஜூன் 25 உலக வெண்புள்ளி தினம்
நன்றி குங்குமம்

பிளாக் அண்ட் ஒயிட் - ஸ்கூல்ல என்னை இப்படித்தான் கூப்பிடுவாங்க. அந்தப் பேர்ல நான் அவ்ளோ பாப்புலர். ஆனாலும், வெண்புள்ளிப் பிரச்னையால என்னோட தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையலை. முதுகுக்குப் பின்னாடி பேசறவங்களை நான் கண்டுக்கறதே இல்லை. நீங்க நீங்களா இருங்க. அடுத்தவங்களோட கமென்டுகளை கண்டுக்காதீங்க. சிரிக்கவும் மறக்கவும் மன்னிக்கவும் கத்துக்கோங்க. வாழ்க்கை ரொம்பவே நல்லாருக்கும்...’’ 

- ஆயுஷி மேத்தா மற்றும் தரம் மேத்தா

வாழ்க்கை வாழ்வதற்கேனு நம்பறவ நான். தன்னம்பிக்கையோட இருங்க. உங்களை நீங்களே நேசிக்கக் கத்துக்கோங்க. உங்க இடத்தை வேற யாராலயும் ஈடுசெய்யமுடியாதுனு நம்புங்க. பாசிட்டிவா இருங்க... அதுதான் உங்களை உயரத்துக்குக் கொண்டு போகும்...’’ 

- மீனாட்சி

ஆரம்பத்துல இந்தப் பிரச்னையைப் பத்தி நிறைய யோசிச்சிருக்கேன். கவலைப்பட்டிருக்கேன். இப்ப அப்படியில்லை. இந்தப் பிரச்னை என்னை ஒண்ணும் செய்யாதுங்கிற மனநிலை வந்திருக்கு. முன்னைவிட இன்னும் தைரியமா மாறியிருக்கேன். வாழ்க்கைங்கிறது உங்களைக் கண்டுபிடிக்கிறதில்லை. உங்களை நீங்களே உருவாக்கிறதுனு இப்ப புரிஞ்சுக்கிட்டேன்’’

- திவ்யபாரதி

நான் யாரு... எங்க இருக்கேன்னு தெரியாம தவிக்க வச்ச பிரச்னை விடிலிகோ. துணி வாங்கறதுலேருந்து நல்ல போட்டோ எடுத்துக்கிறது வரைக்கும் எல்லாமே பிரச்னை. இது தொற்று நோயில்லைனு தெரிஞ்சாலும் மக்கள் எங்களை ஏத்துக்க மாட்டாங்க. நாங்களும் சாதாரண மனுஷங்கதான். ஒருத்தரோட சரும நிறம் என்பது அவங்களோட கேரக்டரோட அடையாளமில்லை’’ 

- பாஸ்கர்

இன்னும் இப்படிப் பலரின் அனுபவப் பதிவுகளுடன் கவனம் ஈர்த்தது அந்த புகைப்படக் கண்காட்சி. ஜூன் 25 உலக வெண்புள்ளி விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, `Vitiligo is beautiful'  என்கிற வித்தியாச புகைப்படக் கண்காட்சியை நடத்தி யிருக்கிறது வத்சன் சங்கரன், பிரவீண் லியோ, ஸ்மிதா ஜோஷி, பாஸ்கர், சுகன்யா, பரத்குமார் ஆகியோர் அடங்கிய அறுவர் குழு.

``புற அழகு பத்தின தாழ்வு மனப்பான்மை, வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யறது, வேலை, புது நபர்களை எதிர்கொள்றது, சமூக வாழ்க்கைனு வெண்புள்ளியால பாதிக்கப்பட்ட என்னை மாதிரி ஆட்கள் சந்திக்கிற பிரச்னைகள் கொஞ்சநஞ்சமில்லை. முகநூல் மூலமா என்னை மாதிரி உள்ளவங்களையும் அவங்களோட மன அழுத்தத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். 

இதைப் பத்தின ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி, பாதிக்கப்பட்டவங்களை தன்னம்பிக்கையோட நடமாடச் செய்யற ஒரு முயற்சியாதான் இந்தப் புகைப்படக் கண்காட்சியை திட்டமிட்டோம்...’’ என்கிறார் குழுவில் ஒருவரும் மாடலுமான பாஸ்கர்.``வெண்புள்ளி பாதிச்ச நண்பர்கள் சார்பா இப்படியொரு டாகுமென்டரி செய்யறதுக்கான கோரிக்கை வந்தது. பாதிக்கப்பட்டவங்களோட குரல்களோட, மக்களுக்கு அழுத்தமான ஒரு மெசேஜை சொல்ற முயற்சியா இதைச் செய்ய நினைச்சேன்...’’ என்கிறார் பிரதான புகைப்பட நிபுணர் வத்சன்.

என்னதான் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தொடர்ந்தாலும், வெண் புள்ளிப் பாதிப்பாளர்களை எதிர்கொள்வதில் மக்களின் தயக்கம் இன்னும் முற்றிலும் மறைந்த பாடாக இல்லை.``இது தொற்றக்கூடிய நோயல்ல... எனவே அவர்களுடன் தோழமை பாராட்டுவதில் தயக்கம் தேவையில்லை’’ என்கிறார் சரும மருத்துவ நிபுணர் விஜயலட்சுமி. இந்தப் பிரச்னைக்கான காரணங்கள், சிகிச்சைகள் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார் அவர்.

``வெண்புள்ளி எனப்படுகிற இந்தப் பாதிப்புக்கு, ‘லூகோடெர்மா’, ‘விடிலிகோ’ அல்லது ‘ஒயிட் லெப்ரசி’ என பல பெயர்கள் உண்டு.நமது சருமத்தில் மெலனின் என்ற நிறமி கள் இருக்கும். போர்க்களத்தில் போர்வீரனுக்குக் கேடயம் எப்படிப் பாதுகாப்போ, அது மாதிரி நம் சருமத்துக்கான கேடயம் இந்த மெலனின். 

வெயிலில் போகிற போது, அதன் தாக்கத்தால சருமம் பாதிக்கப்படாமலிருக்க, இந்த மெலனின் உடனடியாக விரைந்து வந்து பாதுகாப்பு தரும். சருமம் போதுமான அளவு மெலனினை உற்பத்தி செய்ய முடியாதபோதும், மெலனின் இயக்கத்தில் கோளாறு வரும்போதும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களால் அழிக்கப்படுவதால் இந்தப் பிரச்னை வரும்.

லூகோடெர்மாவுக்கான காரணங்கள் இதுதான் என இதுவரைக்கும் விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரோ, பரம்பரைத் தன்மையோ அதீத மனஉளைச்சலோ காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு, ரத்தசோகை, நீரிழிவு, மயஸ்தீனியா கிராவிஸ் (Myesthenia gravis) போன்ற நோய்களும் உடனிருக்கலாம் என்பதால் அவற்றுக்கும் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.

விடிலிகோ பிரச் னை இரண்டு வகைப்படும். முதல் வகையில் உடலின் ஒரு சிறு இடத்தில் மட்டும் வெண்புள்ளிகள் தோன்றும். இதைக் குணப்படுத்துவது சுலபம்.இன்னொரு வகை, மிக வேகமாக உடல் முழுவதும் பரவிவிடக்கூடியது. 

இதற்கு தொடர் சிகிச்சை தேவை.ஒரே நாளில் இது உடம்பு முழுக்க பரவிவிடாது. கை, கால்களில், கண்களைச் சுற்றி, வாயைச்சுற்றி... இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவும். ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டு கண்டுபிடித்தால் குணப்படுத்துவது சுலபம்.இதற்குப் பல விதமான சிகிச்சைகள் இருக்கின்றன. 

முதல் சிகிச்சை யுவிஏ மற்றும் யுவிபி கதிர்கள் மூலமாக கொடுக்கப்படுகிற ரேடியேஷன். பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் இந்த லைட்டை காட்டினால், மெலனின் உற்பத்தியாகும். ஆரம்பக்கட்ட பாதிப்புக்கு இது மிக அருமை யான சிகிச்சை. டாக்டரிடமோ, வீட்டிலோ செய்து கொள்ளலாம்.அடுத்து பியுவி என சொல்லப்படுகிற ஊதாக்கதிர் சிகிச்சை.

 குறிப்பிட்ட ஒரு மாத்திரையை உள்ளுக்குக் கொடுத்துவிட்டு, 1 மணி நேரம் கழித்து, பியுவி லைட்டுக்கு அடியில் உட்கார வைத்தால், மெலனின் உற்பத்தியாகும். சில பக்க விளைவுகளை இதில் தவிர்க்க முடியாது.மூன்றாவதாக மெலனோசைட் டிரான்ஸ்பிளான்ட்டேஷன், கிட்டத்தட்ட அறுவை சிகிச்சை மாதிரியே பண்ணக்கூடியது. இது மிகவும் காஸ்ட்லியான ஒரு சிகிச்சை.

நான்காவது Camouflage, பச்சை குத்துகிற மாதிரி என வைத்துக் கொள்வோம்... ஆனால், 2 வருடங்களுக் குப் பிறகு அந்த இடத்தின் நிறம் மறுபடி மாற ஆரம்பிக்கும்.
இவை எல்லாவற்றையும்விட சிறந்த, செலவில்லாத தீர்வு தோல் மாற்று சிகிச்சை (Skin grafting). எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதை இலவசமாகவே செய்கிறார்கள்.லேசான அறிகுறிகள் தெரிந்ததுமே, உடனடியாக சரும மருத்துவரைப் பார்த்தால், அது பரவாமல், அதிகரிக்காமல் இருக்க சிகிச்சை தருவார்கள். வருடங்களைக் கடத்திவிட்டு, உடல் முழுக்கப் பரவிய பிறகு சிகிச்சை அளிப்பது சிரமம்.

ஒருசிலருக்கு உடல் முழுக்க வெள்ளையாகி, ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் கருப்பாக இருக்கும். அவர்கள் அந்தப் பகுதிகளையும் வெள்ளையாக மாற்ற பிளீச்சிங் செய்து கொள்ளலாம். இது ஒரே சீரான தோற்றத்தைக் கொடுக்கும். இது தொற்று நோய் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 பொதுவாக இது அம்மாவிடமிருந்து குழந்தைக்குப் பரவாது. ஆனால், வரவும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தால், உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். பெரியவர்களைவிட, குழந்தைகளுக்கு சிகிச்சை இன்னும் சீக்கிரம் பலனளிக்கும்...’’
சில பொதுவான டிப்ஸ்...

நிறைய பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
மனதை ஒருமுகப்படுத்தும் தியானம், யோகா போன்றவற்றைச் செய்யவும்.
பாதுகாப்பின்றி வெயிலில் போகவேண்டாம்.
குடி, சிகரெட் பழக்கங்களைத் தவிர்க்கவும்.
சிகிச்சை அளிக்கிற மருத்துவரையோ, சிகிச்சை முறைகளையோ அடிக்கடி மாற்றக் கூடாது.

புற அழகு பத்தின தாழ்வு மனப்பான்மை, வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யறது, வேலை, புது நபர்களை எதிர்கொள்றது, சமூக வாழ்க்கைனு வெண்புள்ளியால  பாதிக்கப்பட்ட என்னை மாதிரி ஆட்கள் சந்திக்கிற பிரச்னைகள்  கொஞ்சநஞ்சமில்லை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக