ஞாயிறு, 19 மார்ச், 2017

உலகசிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20.




உலகசிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20.


உலக சிட்டுக்குருவிகள் நாள் ( World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும்
மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள்
2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான
உயிரியற் பல்வகைமை ( biodiversity ) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.
2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" ( We will save our House Sparrows ) என்பதாகும்.
அழியும் குருவிகள்
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை
1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:
வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால்,
காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு , குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.



‘சி ட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா’…, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’… ‘ஏய் குருவி, சிட்டுக் குருவி’ என்று தொடங்கும் பல சினிமா பாடல்கள் நமக்கு சிட்டுக்குருவியை நினைவுப்படுத்துகின்றன.
தொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவியின் பெருமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புறநானூற்றுப் பாடலில் உள்ள ‘‘குரீஇ’’ என்ற சொல்லே மருவி குருவி என்று ஆனது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் ‘மனையுறை குருவி’ என்று நம்முடைய சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
காடு, மேடு, வயல்வெளி, வீடுகள் என சுதந்திரமாக திரிந்த சிட்டுக்குருவியின் இனம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. இதற்கு, நம்முடைய வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் தான் காரணம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர்புறங்களில் உள்ள வீடுகளில் கூடுகள் கட்டி, சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை இன்று எங்குமே பார்க்க முடியாத வகையில் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டன.
சிட்டுக்குருவிக்கு இன்று பலர் அடைக்கலம் கொடுத்து அந்த இனத்தை காப்பாற்றி வருவதால், ஆங்காங்கே சிட்டுக்குருவிகள் நம் கண்ணில் தென்படுகின்றன.
உருவத்தில் சிறியதாகக் காணப்படும் சிட்டுக்குருவி மனிதனுடைய வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. இருப்பினும், அவைகளை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள். சிட்டுக்குருவிகளில் ஆண், பெண் என்பதை ரோமத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவிகள் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சிட்டுக்குருவிகளை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கின்றனர். யாரையும் துன்புறுத்தாத அமைதியான சுபாவம் கொண்டது இந்த சிட்டுக்குருவி இனம்.
அதே நேரத்தில், எதிர்களிடமிருந்து எந்த நேரத்திலும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கும். உருட்டும் விழிப்பார்வை, அதிகாலை நேரத்தில் கீச்சு, கீச்சு என்று கத்தும் மெல்லிய இசை, மென்மையான உடலைமைப்பு கொண்ட இவைகளை பிடிக்காதவர்கள் யாருமில்லை. இவைகள் 27 கிராம் முதல் 39 கிராம் வரை எடை உடையது. 8 செ.மீ முதல் 24 செ.மீ வரை நீளமுடையது. சுமார் 13 ஆண்டுகள் வாழக் கூடியது. மூன்று முதல் 5 மூட்டைகள் இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்திலிருக்கும் என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள்.
முன்பெல்லாம் ஓலை, குடிசை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். அதோடு மாட்டுத் தொழுவமும் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இவைகள் தான் சிட்டுக்குருவிகளின் வாழ்விடமாக திகழ்ந்தன. ஆனால் இன்று வானுயர்ந்த கட்டிடங்கள், காற்று உட்புகாத அளவுக்கு கான்கிரீட் கட்டிடங்களாகவே நகரமும், கிராமும் காணப்படுகின்றன. இதனால், சிட்டுக்குருவியின் இருப்பிடம் அழிக்கப்பட்டு விட்டன. அடுத்து செல்போன் கோபுரத்திலிருந்து வெளியேறும் கதீர்வீச்சு சிட்டுக்குருவியின் இனப்பெருக்கத்துக்கு தடையாக இருப்பதாக பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இந்த இனம் அழிந்துக் கொண்டு வருகிறது. அடுத்து, ரசாயண உணவுகளை உட்கொள்வதாலும் இந்த இனம் அழிவதாக சொல்கிறார்கள்.
அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்து தானியங்கள் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக்குருவிகள் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி எளிதில் உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு 90 சதவீத சிட்டுக்குருவிகளை அழித்துவிட்ட பெருமை மனித இனத்தையே சேரும்.
எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவு சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பவைகள். கொசு முட்டைகளை விரும்பித் திண்ணும் சிட்டுக்குருவிகள் அழிந்தால், கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதுவே டெங்கு காய்ச்சலுக்கு காரணம் என்கிறார்கள். சிட்டுக்குருவிகள் கொண்டக்கடலை மாவு, திணை, கோதுமை, பச்சரிசி, பருப்பு, சாமை ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடுமாம். பூச்சி, புழுவையும் இவைகள் விட்டுவைப்பதில்லை. ஆனால், இன்று இத்தகைய உணவுகள் மனிதனுக்கே கிடைக்காதபட்சத்தில் சிட்டுக்குருவிகளுக்கு எப்படி கிடைக்கும்? இதுவும் சிட்டுக்குருவி அழிவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
வேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. மக்களிடையே சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினம் என்று அறிவித்து அதை கடைப்பிடித்து வருகிறது. இதன்பிறகு ஓரளவு மக்கள் மத்தியில் சிட்டுக்குருவி பாதுகாப்பு எண்ணம் தோன்றி இருக்கிறது. அதோடுவிடாமல், மாநில பறவையாக சிட்டுக்குருவியை அறிவித்து மத்திய அரசு அசத்தியுள்ளது. ஏற்கனவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிட்டுக்குருவிக்கு இப்போது கூடுதல் மவுசு.
கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே அதிகமாக சிட்டுக்குருவிகளை இப்போது காண முடிகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு, இல்லை..இல்லை கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும் அதில் தோட்டம் அமைத்து பயிரிட வேண்டும். சிட்டுக்குருவி வாழ வாழ்விடத்தை அதில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோடை காலம் என்பதால் வீட்டின் மொட்டை மாடிகளில் தானியங்கள் தூவுவதோடு குவளைகளில் தண்ணீர் வைக்க வேண்டும். வைக்கோல், புற்கள் வைத்தால் குருவிகள் கூடு கட்ட அவைகள் பயன்படும் என்று பட்டியலிடுகின்றனர் பறவை ஆர்வலர்கள்.
நம் பகுதியில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டைமாடியில் ஓர் இடத்தில் அட்டைப் பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் துண்டுகளையும் அரிசி, தானிய வகைகளையும் வையுங்கள். சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான தேங்காய் நார்கள், பயன்படுத்தாத துடைப்பக் குச்சிகள், வைக்கோல் போன்றவற்றையும் வைக்கலாம். வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகள் இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும். பின்னர் சிட்டுக்குருவிகளின் இனிமையான கீச்… கீச்… குரலை மீண்டும் நம்மால் கேட்க முடியும்.
சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு அதற்கான உணவு தானியங்களை வழங்கி வரும் ‘ட்ரி பேங்க்’ நிறுவனம் முல்லைவனம் கூறுகையில், “சிட்டுக்குருவிகள் இருந்தால் அந்தப்பகுதி சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டு சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு கிலோ தானியத்துடன் கூடிய பாக்ஸ் வழங்கினோம். இந்த ஆண்டும் தானியம் அடங்கிய பாக்ஸை கொடுத்துள்ளோம். அந்த பாக்ஸில் 2 மாதங்களுக்கு தேவையான கோதுமை, பச்சரிசி, சாமை, திணை, கொண்டைக்கடலை உள்ளிட்டவைகளை அரைத்து கொடுக்கிறோம்.
சென்னையில் இன்றும் வில்லிவாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ், ராமாவரம், குன்றத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வீடுகள் சிட்டுக்குருவி வாழ்வதற்கு தகுதியானதாக இருக்கின்றன. அவைகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. அவைகளை காப்பாற்றவே இந்த தானிய பாக்ஸை வழங்கியுள்ளோம். சிட்டுக்குருவியின் கீச், கீச் என்ற சத்ததை கேட்பதை இனிமை” என்றார்.
நன்றி: விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக