உலக காடுகள் தினம்
பன்னாட்டு வன நாள் ( International Day of Forests ) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்யவதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012 ,
நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியும் வருகிறது.
பருவ கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.
வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. ஆனால் தற்போது பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நம் இந்தியாவில் சுமார் 24% காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன. நாட்டில் நில பரப்பில் 35 சதவிகிதத்தை காடு வளர்ப்பு மற்றும் மர வளர்ப்பின் கீழ் கொண்டு வர மத்திய திட்டமிட்டுள்ளது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் காடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
உலக மக்கள் தொகை அதிகரித்து , பிற உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சமச்சீரற்ற நிலை நிலவுகிறது. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என ஐ.நா., கூறுகிறது.
இந்தியாவில் வனப்பரப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்து 400 ச.கி.மீ. இது மொத்த நிலப்பரப்பில் 19.32 சதவீதம். 1951 முதல் 1980 வரை அணைகள் மற்றும் பாசனத்திற்காக 5 லட்சம் எக்டேர் வனம் அழிக்கப்பட்டது. ஆண்டுதோறும் 0.6 சதவீத காடுகள் அழிக்கப்படுகின்றன. ஜப்பான் போன்ற தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்த சிறிய நாடுகள் கூட, 60 சதவீத காடுகளை கட்டிக்காத்து வருகின்றன. இஸ்ரேலில் 1948 ல் 250 மி.மீ., இருந்த சராசரி மழையளவு, தற்போது 900 மி.மீ., அதிகரித்துள்ளது.பூமி சூட்டைத்தணித்து, வாயுமண்டலத்தை சுத்தப்படுத்துபவை மரங்களே. நாம் வெளியிடும் கரியமில வாயுவை உட்கொண்டு, நாம் சுவாசிக்க பிராண வாயுவை கொடுப்பவை மரங்களே. மரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள். மரங்களை நட்டு வளர்த்த மன்னர்கள், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமியின் பாதுகாப்பு கவசமாக திகழும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால், சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலுக்கு நாம் ஆளாக, நீண்டகாலம் பிடிக்காது.
மனிதன் இம்மண்ணில் வாழ எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ, அதே உரிமை தாவரம், பறவை, விலங்கினங்களுக்கும் உண்டு. மனிதனுக்காக மட்டும் இந்த உலகம் படைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும், உலகம் பொதுவானது. சுத்தமான பூமியை நம் சந்ததிக்கு விட்டுச் செல்ல முடியுமா? என சவால் எழுந்துள்ளது.
இன்று ( மார்ச் 21) உலக வனநாள். வனங்களை பாதுகாப்பது பற்றி வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:ராஜசேகரன், மதுரை வனவிரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர்: மன்னராட்சியில் மரங்களை வெட்டியோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் வனங்கள் அழிக்கப்பட்டு, தேக்குமரங்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நம் வனங்களில் யூகாலிப்டஸ், தேயிலை நட்டனர். அனைத்து நதிகளும் உற்பத்தியாவது வனங்களில்தான். அதன் மதிப்பை நாம் உணரவில்லை.ஜப்பான் வனங்களை பாதுகாத்து, இந்தியா, தாய்லாந்திலிருந்து மரங்களை இறக்குமதி செய்கிறது. பசுமை போர்வையை அதிகரிக்க ஒரே வழி தனியார், புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்கள், கல்வி நிறுவனங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் மரம் வளர்ப்பதுதான்.
டாக்டர் ராஜ்குமார், இயக்குனர், வனம் அறக்கட்டளை, தேனி: வனங்களில் மூங்கில் மரங்களின் உராய்வால், தீப்பற்றுவதாக கூறுவது தவறு. மனிதர்களால்தான் 100 சதவீதம் தீ விபத்து ஏற்படுகிறது. ஆடு, மாடு மேய்ச்சலுக்காக புல் மீது தீ வைக்கின்றனர். மழை பெய்ததும், சாம்பலிலிருந்து பசும்புற்கள் முளைக்கின்றன. வனத்தீயை அணைப்பது சாதாரண விஷயமல்ல.மக்கள் குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனவளத்தை கண்டறிய ஆராய்சி செய்ய வேண்டும். மதுரை உட்பட 5 மாவட்டங்களின் 90 லட்சம் பேருக்கு குடிநீராதாரம் வைகை. முன்பு ஆண்டுக்கு 10 மாதம் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்தது. நீராதாரமாக இருந்தது வனப்பகுதியே. தற்போது, ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே தண்ணீர் செல்கிறது. வனவளத்தை காப்பாற்றினால் மட்டுமே, வைகையை ஆற்றை காப்பாற்ற முடியும். வைகையை காக்க, மேகமலையை வன உயிரின கோட்டமாக அரசு அறிவித்துள்ளது.
சுப்பிரமணியராஜா, செயலாளர், வன உயிரின பாதுகாப்பு அமைப்பு,
ராஜபாளையம்: காவல்துறை போல், வனத்துறைக்கு கூடுதல் அதிகாரம் தேவை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். வனங்களில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதை குறைக்க வேண்டும். மலையிலிருந்து வடியும் மழை நீரை உள்வாங்குவது தரைக்காடுகள். தரைக்காடுகள், மலை புல்வெளி மற்றும் சோலைக்காடுகளை பாதுகாத்தால்தான் தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியும். அடுத்து குடிநீருக்கான போர் ஏற்பட வாய்ப்புள்ளது. வனப்பகுதி அருகே வனப்பாதுகாவலர் அலுவலகங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
காடு... அதை நாடு...-உலக காடுகள் தினம்-:காடுகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும் மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1971ம் ஆண்டு, இத்தினம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. உலகின் நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதற்கு முன் இது 50 சதவீதமாக இருந்தது. பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்பட போகும் ஆபத்துகள் கடுமையானதாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நன்மைகள் பலவிதம்: காடுகள் என்பது வெறும் மரங்களை மட்டும் குறிப்பிடுவதல்ல. இது வாழ்க்கை கட்டமைப்பில் (உயிர்க்கோளம்) ஒன்று. மரங்களுக்கும், காடுகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. காடுகளின் உதவியால் தான், நாம் சுவாசிக்க முடிகிறது. இதைத் தவிர வீடுகளிலும், பொது இடங்களில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்து தப்பித்துக் கொள்ள மரங்களின் நிழலை தேடிச் செல்கிறோம். காடுகள் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பையும் தடுக்கின்றன. தட்ப வெட்ப நிலை, சீராக இருப்பதற்கு காடுகள் உதவுகின்றன.
நமது கடமை: இன்றைய சூழலில் மரங்களை பார்ப்பது அரிதாகி விட்டது. சாலை, ரயில் பணிகளுக்காக அரசு, ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டித் தள்ளுகிறது. இதைத்தவிர வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதின் மூலம் பல மரங்கள் எரிந்து விடுகின்றன. மக்களும் வருமானம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு விளை நிலங்களை, குடியிருப்பு பகுதிகளாக மாற்றி வருகின்றனர். இதனால் வெப்பநிலை, பருவநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
ஒன்றுக்கு பத்து: உலக வனத்துறையின் சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும் போது, அதற்கு பதிலாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. அப்படியிருந்தும் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சதவீதம் மட்டுமே புதிதாக மரங்கள் நடப்பட்டுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
என்ன செய்வது: பல வழிகளிலும் மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும் பயன்படும் காடுகளை, அதன் அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். புதிதாக காடுகள் வளர்ப்பதற்கும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு மரம் வளர்ப்பது அவசியம். இவ்வாறு அனைவரது வீடுகளில் மரம் வளர்ப்பதுடன், ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரித்தால், பூமிக்கு தேவையான அளவில் காடுகள் நிலைப்பெறும். இதற்கு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்திய பொருளாதாரம், விவசாயத்தை பெருமளவில் சார்ந்துள்ளது. எனவே காடுகளை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக