வியாழன், 23 மார்ச், 2017

உலக காச நோய் தினம் மார்ச் 24.

  

உலக காச நோய் தினம் மார்ச் 24.


அனைத்துலக காச நோய் நாள் ( World Tuberculosis Day ), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும்
மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

வரலாறு

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர்
றொபேர்ட் கொக் ( Robert Koch ) என்பவர் காசநோய்க்கான காரணியை ( TB bacillus )
பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும்
அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.
1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.


காச நோய் எனப்படும் டி.பி. ஒரு காலத்தில் உயிர்க்கொல்லி நோய். இன்றைக்கும் அந்த நோய் பரவும் முறைகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கும் குறைவில்லை. ஆனால், அந்த நோயை குணப்படுத்துவதற்கு மருந்துகள் இருப்பதுதான் ஒரே மாற்றம்.
டியூபர்செல் பாசிலஸ் அல்லது டியூபர் குளோசிஸ் என்பதன் சுருக்கம்தான் டி.பி. வீட்டில் உள்ள ஒருவருக்கு இந்நோய் வந்தால், மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலை முன்பு இருந்தது. இன்றோ காச நோய் உயிரைக் காவு வாங்கக்கூடிய அளவுக்குக் கொடிய நோயாக இல்லை. நோய் வந்தால் சில மாதங்களுக்கு முழுமையாக மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டால் போதும். நோயை விரட்டிவிடலாம்.
மோசமான நோய்
காச நோய்க்கு இன்று மேம்பட்ட சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும்கூட, இன்றும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்க்கு 17 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கூறுகிறது உலகச் சுகாதார அமைப்பு. ஆண்டுதோறும் 80 - 90 லட்சம் பேர் காச நோயால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது.
பொதுவாக மூச்சுத் தொகுதியில், நுரையீரலைத் தாக்கி நோயை உண்டாக்கக் கூடியவை காச நோய்க் கிருமிகள். இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, இரைப்பை-குடல் தொகுதி, எலும்பு மூட்டுகள், ரத்த சுழற்சிப் பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் வெங்கட் ரமணி.
‘‘இருமல், தும்மல், எச்சில் ஆகியவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது காச நோய். எனவேதான், அந்தக் காலத்தில் இந்நோய் பெரும் அச்சத்தை உண்டாக்கியது. இன்றைக்கும் அதே வழிமுறைகள் காரணமாகவே பெருமளவு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
திருப்புமுனை
1880களின் தொடக்கத்தில் ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களில் காச நோய் தீவிரமாக இருந்த காலம். பல மருத்துவ விஞ்ஞானிகளும் நோய்க்கான காரணங்களைக் கண்டறிய ஆய்வில் ஈடுபட்டிருந்த நேரம். அந்த நேரத்தில் 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி ஜெர்மனி மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் காஹ் என்பவர் காச நோயை உண்டாக்கும் பாசிலஸ் என்ற நுண்ணுயிரியைக் கண்டறிந்தார். அந்தக் காலத்தில் மருத்துவ உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு இது.
இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகே காச நோயின் தன்மை குறித்து மருத்துவ உலகம் அறிய முடிந்தது. மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும், இதன் பின்னரே தீவிரமடைந்தது. இன்று இந்நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை முறைகள் இருப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பே முன்னோடி. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1905ஆம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ராபர்ட் காஹுக்குக் கிடைத்தது.
இந்தக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா 1982ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கு எதிரான அனைத்துலக அமைப்பு, இந்நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ஆம் தேதியை உலகக் காசநோய் நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று 1996ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் உலகக் காச நோய் தினம் கடைபிடிக்கப்படும் என உலகச் சுகாதார அமைப்பு அறிவித்தது.
எச்சில் துப்பாதீர்கள்...
# உலகிலேயே காச நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. 2012ஆம் ஆண்டு உலகச் சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி 20 முதல் 30 லட்சம் நோயாளிகள் நம் நாட்டில் உள்ளனர்.
# இந்த நோய் மிகச் சுலபமாகப் பரவக்கூடிய ஒரு நோய். காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமினாலோ, சளி மற்றும் எச்சிலைத் துப்பினாலோ அதிலிருந்து வெளிவரும் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கிவிடும்.
# நம் நாட்டில் பொது இடங்களில் எச்சில், சளி துப்புவது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இருமும்போது வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவாகவும் அலட்சியம் அதிகமும் உள்ளவர்கள் நம்மிடையே அதிகம். இந்த நோய் அதிகம் பரவ இது முக்கியக் காரணம்.
# கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் இருக்கும்போதும் மருத்துவமனைகள், சிறைகள், ஆதரவற்றோர் முகாம்கள் என எந்தப் பொது இடத்துக்குச் சென்றாலும், முகமூடியை அணிவது நல்லது. இதேபோலப் பேருந்து, ரயில் பயணங்களின்போதும் இதைக் கடைபிடிப்பது காசநோய்த் தடுப்புக்குப் பலனளிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக