புதன், 22 மார்ச், 2017

வீரத் தியாகிகள் தினம் மார்ச் 23,


வீரத் தியாகிகள் தினம் மார்ச் 23,

மார்ச் 23 அன்று, நம்முடைய வீரத் தியாகிகள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் ஈடுஇணையற்ற தியாகத்தை நாம் வணங்குகிறோம். இந்தியாவை ஆங்கிலேய காலனியர்களுடைய பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவும், மனிதனை மனிதன் சுரண்டுதலற்ற ஒரு சமுதாயத்தை நிறுவுவதற்காகவும், பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் அழைப்பு விடுத்தனர். அவர்களுடைய இந்த எழுச்சிமிக்க உணர்வு, எண்ணெற்ற தியாகிகளிடமிருந்தும், 1857 கெதர் எழுச்சியின் வீரமிக்க போராளிகளிடமிருந்தும், அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளிலிருந்தும், இந்திய மண்ணிலிருந்தும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலைக்காக 1915-இல் குரலெழுப்பியவர்களிடமிருந்தும் பெற்றனர். நமது நாட்டு மக்களுக்கு எதிராக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நடத்திய ஜாலியன் வாலா பாக் படுகொலைகள் போன்ற காட்டுமிராண்டித்தனமான கொடூரங்கள் தங்களுடைய நோக்கங்களுக்காகப் போராடுவதற்கான நம்முடைய தியாகிகளுடைய மன உறுதியை மேலும் வலுப்படுத்தியது. 19 வயது கர்த்தார் சிங் சாராபா போன்ற இளைஞர்களுடைய பணிகளால் அவர்கள் ஆர்வமூட்டப் பட்டனர்.
சுரண்டலற்ற ஒரு நியாயமான வளமான ஒரு சமுதாயத்திற்காக நமது தியாகிகள் கண்ட கனவுகள் இன்றுவரை நிறைவேறாமல் இருக்கின்றன. பெரும்பான்மையான நமது மக்களைக் கொள்ளையடிப்பது, சுரண்டுவது மற்றும் ஒடுக்கும் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அமைப்பை நிறுவினர். இந்தியாவிற்கு சுதந்திரம் என்ற பெயரில் அதிகாரத்திற்கு வந்த இந்திய முதலாளித்துவ வர்க்கம், ஆங்கிலேயர்கள் நிறுவிய அந்த அமைப்பை மேலும் பன்மடங்கு தீவிரப்படுத்துவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. பெரும் முதலாளிகளுக்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் பொருளாதாரத்தின் போக்கும், அரசு அமைப்பும் தீர்மானிக்கப்பட்டன. காங்கிரசு அல்லது பாஜக என எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவும், அவர்களுடைய நலன்களுக்காக ஆட்சி நடத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.
இன்று ஒரு பக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய முதலாளிகள், உலகிலுள்ள மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் நமது மக்கள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், வேலையற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும், சுகாதாரம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். நமது நாடு நீர், வனம், நிலம், மற்றும் கனிம வளங்கள் நிறைந்ததாக இருந்தாலும், கடன்களில் சிக்கிக் கொண்ட காரணத்திற்காக ஒவ்வொரு நாளும் உழவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். தொழிற் சாலைகள், ஆலைகள், இயற்கை வளங்களென எல்லா குறிப்பிடத்தக்க உற்பத்திக் கருவிகளும் ஆளும் முதலாளி வர்க்கத்தின் உடமைகளாக இருக்கின்றன. அவர்கள், மேலும் கொழுப்பதற்கும், உழைக்கும் மக்களை ஓட்டாண்டிகளாக ஒதுக்கித் தள்ளுவதற்கும் இந்த வளங்களை வெட்கமின்றி கொள்ளையடித்து வருகின்றனர். இந்தக் கொள்ளையில் மிகப் பெரிய இந்திய மற்றும் அன்னிய ஏகபோகங்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய நலன்களுக்கு ஏற்ப சட்டதிட்டங்கள் மாற்றப்படுகின்றன.
“மக்களுடைய கட்டளையை” வெளிப்படுத்தும் விதமாக, உலகின் மிகப் பெரிய சனநாயகத்தில் தேர்தல்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. வாக்களிப்பதற்கான உரிமை, சுதந்திரத்திற்கும் சனநாயகத்திற்கும் மிகப் பெரிய அத்தாட்சியாக கூறப்படுகிறது. ஆனால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவோ, தங்கள் பிரதிநிதிகளைத் தங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக ஆக்கவோ அல்லது அவர்களைத் திருப்பியழைக்கவோ மக்களுக்கு எவ்வித உரிமையையும் இல்லை. கொள்கைத் திட்டங்களைத் தீர்மானிக்கவோ, சட்டங்களை முன்வைக்கவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய எந்த வழிமுறையும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த சனநாயகமானது ஒரு மோசடியாகும். இந்த மாயைகளை நீடிப்பதற்கும், இளைஞர்களிடையே இதன் மீது நம்பிக்கையை உறுதி செய்வதற்கும், முதலாளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும், பாராளுமன்ற அரசியல் கட்சிகளும், முதலாளி வர்க்கத்தின் எல்லாவகையான கருத்தை உருவாக்குபவர்களும் காது செவிடாகும் வண்ணம் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அநீதிக்கு எதிராகப் போராடுவதில் நமது இளைஞர்கள் எப்போதுமே முன்னணியில் இருந்து வந்திருக்கிறார்கள். பாரம்பரியமாகவே, நமது நாட்டின் பாதுகாப்பிற்காகவும், வளமைக்காகவும் எந்தத் தியாகங்களைச் செய்வதற்கும் நமது நாட்டு இளைஞர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இன்றும் கூட இது உண்மையாகும். இன்றும் கூட நம்முடைய இளைஞர்களிடையே பகத் சிங்குகளுக்கும், கர்த்தார் சிங்களுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன்களுக்கும் ஜான்சி ராணிகளுக்கும் கொஞ்சமும் குறைவு இல்லை. எனவே தான், நம்முடைய இளைஞர்களைக் குழப்புவதற்கும், அவர்களுடைய புரட்சிகர எண்ணங்களை சிதறடிப்பதற்கும், இந்த அமைப்போடு அவர்களைக் கட்டிப்போடுவதற்கும் சுரண்டும் முதலாளி வர்க்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இந்த அமைப்பில், முதலாளிகளுக்குத் தேவைப்படும் உழைப்பாளர்களுக்கு ஆதாரமாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சுரண்டுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் முதலாளி வர்க்கம் தங்களுடைய இலாபத்தைப் பெருக்கி வருகிறார்கள். முதலாளி வர்க்கத்தின் போர்களில் இளைஞர்கள் தள்ளப்பட்டு, பீரங்கிகளுக்குத் தீனியாக ஆகிறார்கள். அவர்களுடைய பிணங்கள் மீது, முதலாளி வர்க்கம் தன்னுடைய ஏகாதிபத்தியப் பேராசைகளை அடைய முடியும். குற்றச் செயல்களிலும், போதைப் பழக்கங்களிலும் இளைஞர்கள் சிக்கிக் கொள்கிறார்கள், எனவே சமுதாயத்தின் உண்மையான பிரச்சனைகளைப் பற்றி அவர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். தேர்தல் மோதல்களாகட்டும் அல்லது அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத படுகொலைகளாகட்டும், எல்லா வகையான குற்றவியலான செயல்களுக்கும் இளைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சமுதாயத்தில் உள்ள பல்வேறு அநீதிகளுக்கு எதிராக இளைஞர்கள் குரலெழுப்பினால் அவர்களை பயங்கரவாதிகளென அவர்களுடைய கதையை முடிக்கிறார்கள் அல்லது சிறையிலடைக்கின்றனர். மதம், தேசியம் ஆகிய அடிப்படைகளில் குறிப்பாக இளைஞர்கள் பலியாக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பிலேயே அவர்கள் முன்னேற முடியுமென தவறான கனவுகளில் ஒரு பக்கத்தில் அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம், இந்த அமைப்பை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட முடியாதவாறு அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள்.



இந்திய மற்றும் அயல்நாட்டு சிறுபான்மையான சுரண்டல் பேய்கள், நம்மீது ஆட்சி செலுத்தி வரும் வரை, இந்தச் சுரண்டலிலிருந்தும் அநீதியிலிருந்தும் நாம் விடுதலை பெற முடியாதென நமது வீரத் தியாகிகள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். இந்த உண்மையானது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் இன்று மிகத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். சுரண்டலதிபர்களுடைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதும், பெரும்பான்மையாக உள்ள தொழிலாளி வர்க்கத்தின் அரசை அமைப்பதும் எப்படி என்ற சவாலை இன்று இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
நம்முடைய விடுதலைக்கு, நம்முடைய வீரத் தியாகிகள் சுட்டிக் காட்டியுள்ள புரட்சிகரப் பாதையே ஒரே வழியாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ், முன்னணி கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் எல்லா ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களோடு இளைஞர்கள் அணிதிரட்டப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அறிவியலான மார்க்சிசம்-லெனினிசத்தால் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும். ஒரு சில முதலாளிகளுடைய பைகளை நிரப்புவதற்காக இல்லாமல், எல்லா மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றுமாறு பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சமுதாயத்திற்காக நாம் போராட வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் எல்லா உற்பத்தியும் நடைபெறும், தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்கும். நமக்கு முன்னே இருக்கும் சவால், முதலாளிவர்க்கத்திற்கும், அதனுடைய அரசுக்கும் எதிராக வாளை உயர்த்துவதாகும். இதுவே இளைர்களுக்கு முன்னாலுள்ள சவாலாகும்.
நம்முடைய இளைஞர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே ஒரே வழியாகும்!
அணிதிரள்வோம், ஆளும் வர்க்கமாக ஆவோம், சமுதாயத்தை மாற்றியமைப்போம்!
நன்றி -   CGPI



இன்று பக்த்சிங்-ராஜகுரு-சுகதேவ்க்கு மரண தண்டனை உறுதி செய்த நாள் மார்ச் 23,.....

சுதந்திர இந்தியாவிற்கு பூரண சுதந்திரம், சுரண்டலற்ற சோசலிச சமூகம் என்ற லட்சியங்களை முன்வைத்து, தேச விடுதலையின் இன்பமே தங்களின் இன்பம் என சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீரமிக்க பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சிவவர்மா, பி.கே.தத், சந்திர சேகர அசாத், ஜதீன் தாஸ், துர்கா தேவி, யஷ்பால் மற்றும் தோழர்கள் தீவிரமாக பங்கேற்றனர்.
அகிம்சை என காந்திஜி புன்னகைத்தபோது மாற்று திட்டத்தின் மூலம் சுதந்திர போராட்டத்தின் வரலாற்றையே மாற்றியமைத்தனர், கேளாகாதர்களாக இருந்த பிரிட்டிஷ் பக்கிங்காம் அரண்மனையை அசைத்து பார்த்து இளைஞர்களையும், மாணவர்களையும் சுதந்திர போரில் ஈடுபட வைத்தனர். அதனால் தான் சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்களின் அடையாளமாக இவர்களையே வரலாற்று பக்கங்கள் நிருபிக்கின்றன. ஆனால், இவர்கள் கண்ட கனவுகள் தான் தற்போது பொய்த்து போனது.
விடுதலைப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்டோருக்கு மரண தண்டனையை ஆங்கிலேய அரசு
உறுதி செய்த நாள் பிப்ரவரி 14. மரண தண்டனையை உறுதி செய்து நிறைவேற்றும் தேதியாக மார்ச் 24-ஐ அறிவிக்கின்றார்கள்.
கடுமையான நெருக்கடிகள், போராட்டங்கள் காரணமாக யாருக்கும் தெரியாமல் மார்ச் 23 மாலையே தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். சிறை அதிகாரிகள் பகத்சிங் அறையை தட்டுகிறார்கள், அப்போது பகத்சிங் லெனினின் அரசும், புரட்சியும் புத்தகத்தோடு உறைந்து கிடக்கிறார், ஒரு புரட்சியாளனோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுக்கிறார். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது. தூக்கிலிடபட்ட பகத்சிங், சுகதேவ்க்கு வயது 23, ராஜகுருவுக்கு 24, தோழர்கள் வாழ்ந்த காலம் கொஞ்சம்தான், ஆனால் பல துறைகளில் கவனம் செலுத்தியதோடு அறிவுஜீவியாகவும் வாழ்ந்தார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக