ஞாயிறு, 19 மார்ச், 2017

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20.






உலக மகிழ்ச்சி தினம் மார்ச்  20.


இன்பம் எம்முள்ளே இருக்க அதைத் தொலைத்து விட்டு வெளியே தேடுவோர் அநேகமானோர் இக்காலத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
துன்பம் எம்மை கட்டாயம் அநுபவித்து கஸ்டப்படவேண்டும் என்று அதுவாக வருவதில்லை. நாமாகத்தான் அதை அநுபவித்து முடிக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டு தவிக்கிறோம். 20-3-14 ஆகிய இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் எனக் கூறப்படுகிறது.
பரபரப்பான இவ்வுலகில் கல்விக்கும், தொழிலுக்கும் பணத்திற்கும், மருந்துக்கும் என்று அதனைப் பெற்றுக்கொள்ள பறவையை விட வேகமாக பறந்தடித்துக் கொண்டு ஆணும் பெண்ணும் அல்லல் உறுகின்றனர். ஒருகணம் நாம் எவ்வளவுக்கு சந்தோசமாக இருக்கிறோம், என்று நினத்துப்பார்ப்பதில்லை. இன்றைய நாளிலாவது
மகிழ்ச்சியாக இருப்போம் என எண்ணம் கொண்டு விட்டால் எமது வாழ்வில் இனிமைப்பூ பூக்கத்தொடங்கி விடும்.
பாரதியார் கவிதைகளில் அம்மாக்கண்ணு பாட்டு பாரதி பாடியிருப்பதே அலாதிதான். அதில் இனிமையாக மகிழ்வு எங்கு உள்ளது என்று கூறுவது வித்தியாசமாக இருக்கிறது. பாடிப்பாருங்கள்,
“பூட்டைத் திறப்பது, கையாலே நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத்திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
ஏட்டைத்துடைப்பது கையாலே மனவீட்டைத் துடைப்பது மெய்யாலே
வேட்டையடிப்பது வில்லாலே அன்புக் கோட்டைபிடிப்பது சொல்லாலே
காற்றை யடைப்பது மனதாலே இந்தக் காயத்தைக் காப்பது செய்கையிலே
சோற்றைப் புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே”
எவ்வளவு அழகாக இன்பவீட்டை திறப்பது பெண் என்று கூறுவதில் இருந்து அன்புக் கோட்டையையே இனிய சொல்லால் பிடித்து விடலாம் என்கிறார். அதுதான் பெண்ணால் இன்ப வீடும் சொல்லால் அன்புக்கோட்டையும் பிடிக்க முடியுமாதலால்தான் தாய்மொழி என்றனரோ என எண்ணத்தோன்றுகிறது. அதோடு இன்னுமொன்றையும் கூறி எம்மைச் சிந்திக்க செய்கிறார், கடமை அறிவோம் என்று பாடுகிறார்.
“கடமை புரிவாரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்,
கடமை யறியோம் தொழிலறியோம் கட்டென்பதனை வெட்டெபோம்
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத்திங்கு களியுற்றென்றும் வாழ்குவமே”
தெரிந்த கடமையை தவறாது நாம் செய்து கொண்டே அதன்வழி இன்புற வேண்டும். அதற்கு மனதில் உறுதி வேண்டும் அத்தோடு வாக்கினிலே இனிமை வேண்டும். இனிமையாக எல்லோருடனும் பேசவேண்டும். நினைவு நல்லதாக இருந்து தேடும் பொருளும் நமக்கு கிடைக்கவேண்டும்.



கானும் கனவு உடனே நிறைவேறி இப்பூமி பெருமையடையும் வண்ணம் தனமும் இன்பமும் வேண்டும்.,அதற்கு இன்பத்தை நிலையாக பெற செய்யும் காரியங்கள் உறுதியாக கண்திறந்து உண்மையான உழைப்பில் இந்த மண் பயனுற விருப்பமோடு நற்செயல்கள் செய்யவேண்டும்.
சென்றது மீளாது என்று புத்தியில் படும்படி பாடி மகிழ்வாய் இருக்க வழிசொல்கிறார்.
“சென்றதினி மீளாது, மூடரே எப்போதும் சென்றதையே சிந்தனை செய்துகொன்றொழிக்கும்
கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
சென்றதனைக்குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவீர் எண்னமதைத் திண்னமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்
தீமையெல்லாம் அழிந்து போம்.
திரும்பி வாரா”
இப்படி தேற்றுகிறார். பாரதி இப்படி பாடி இருக்க நாம் துன்பத்தில் தோற்று விடுவோமா என்ன? இன்பத்தில்தானே வெற்றி பெறுவோம். கண்களுக்கு பார்வைபோல், செவிக்கு கேட்பது போல் வாய்க்கு உண்பதுபோல் மூக்குக்கு சுவாசம் போல் நாம் அனைவரும் இன்பத்தை சுத்தமான காற்றாய் உள்ளிளித்து துன்பத்தை அசுத்தமான காற்றாய் வெளியேற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக