வெள்ளி, 24 மார்ச், 2017

எழுத்தாளர் தி. க. சிவசங்கரன் நினைவு தினம் மார்ச்- 25 2014.



எழுத்தாளர் தி. க. சிவசங்கரன்  நினைவு தினம் மார்ச்- 25 2014.
தி. க. சிவசங்கரன் ( Thi. Ka. Sivasankaran , 30 மார்ச் 1925 - 25 மார்ச் 2014),  மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான
வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார்.
திறனாய்வாளர்
நா. வானமாமலை , தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர்.
புதுமைப்பித்தனை ஒரு இலக்கிய முன்னுதாரணமாக க. நா. சுப்ரமண்யம் முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி "அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களை மாற்றிக் கொண்டார்.
இளம் எழுத்தாளர் அறிமுகம்
தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார்.
சாகித்ய அகாதமி விருது
இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்கு
2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
ஆவணப்படம்
தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது. ”21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன.
மறைவு
சிவசங்கரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 2014 மார்ச் 25 இரவு 11.30 மணியளவில் காலமானார்.  மறைந்த தி.க.சிவசங்கரனுக்கு 3 மகள்கள் மற்றும் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக