செவ்வாய், 2 மே, 2017

உலக பத்திரிகை சுதந்திர தினம் மே 3 .( World Press Freedom Day )





உலக பத்திரிகை சுதந்திர தினம்  மே 3 .( World Press Freedom Day ) 

உலக பத்திரிகை சுதந்திர நாள் ( World Press Freedom Day ) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" ( Declaration of Windhoek ) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது
கொலம்பியப் பத்திரிகையாளர்
கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.
இந்நாள் அன்று, உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000
டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.



உலக பத்திரிகை சுதந்திர தினம் (World Press Freedom Day) இன்று(03) “தகவல்களையும் அடிப்படை உரிமை­களையும் பெறுவது உங்களின் உரிமை” எனும் கருப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்­றுடன் உலக பத்திரிகை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்­கதாகும்.
பத்திரிகை சுதந்திரத்தை பரப்புவ­தற்கும் அதனை பாதுகாக்கும் நோக்­கிலும், “மனித உரிமைகள் சாச­னத்தின் 19 ஆம் பிரிவின் பிரகாரம் கருத்து சுதந்திரத்தை உலக நாடு­களின் அரசாங்கங்களுக்கு நினை­வூட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த தினம் பிரகடனப்ப­டுத்தப்பட்டது.
இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட, 'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்­திரத்திற்கானதும் ஊடகச் சுதந்திரத்­தினதும் பாதுகாப்பிற்கும் மேம்ப­டுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்­கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக ஒவ்­வொரு வருடமும் மே மாதம் 3 ஆம் திகதி பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
அத்துடன் 1991ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆபிரிக்கப் பத்திரிகை­களால் கூட்டாக ஒன்றிணைந்து இத்­தினத்தில் "பத்திரிகை சுதந்திர சாச­னத்தை” (Declaration of Windhoek) முன்­வைத்தனர். இந்த தினத்தில் உலகின் சமாதானத்திற்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்தி­ரிகை தர்மத்திற்காகவும் பல இன்னல்­களைத் தாண்டி போராடிய பத்தி­ரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான யுனெஸ்கோ நிறுவனத்தின் “யுனெஸ்கோ/ கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருதை” (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றது.
கொலம்பியாவில் Guillermo Cano Isaza எனும் பத்திரிகை எழுத்தாளர் 1986 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அவரது அலுவலகம் முன்பாக வைத்து படு­கொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்­திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப் பெற்றது. அதனால் அவரின் நினைவாக அவரின் பெயரும் தினத்தின் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் இத்தினத்தை Guillermo Cano World Press Freedom day என்று அழைக்­கப்படுகிறது. இவரின் நினைவா­கவே யுனெஸ்கோ நிறுவனம் இந்த விருதை வழங்குகின்றமை குறிப்­பிடத்தக்கதாகும்.சுமார் 14 நபர்­களைக் கொண்ட சுயாதீன குழுவால் குறிப்பிட்ட “ சுதந்திர எழுத்தாளர்” தெரிவு இடம்பெறு­கின்றது.
இவ்வருடத்திற்கான சுதந்திர பத்திரி­கையாளராக ரஷ்யாவை அண்டி­யுள்ள அசர்பைஜான் (Azerbaijan) நாட்­டைச்சேர்ந்த கதீஜா இஸ்மாயிலோவா (Khadija Ismayilova) எனும் புல­னாய்வு ஊடகவியலாளர் (investigative journalist) தெரிவு செய்யப்பட்­டுள்ளார்.மனித மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானதே தொடர்பாட­லாகும்.
ஆரம்ப காலத்தில் "தீமூட்டல்" மூலம் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மனிதர், பின்னர் சீனர்கள் காகிதங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக கடிதம், தந்தி, பத்தி­ரிகை மூலம் எண்ணங்களை வெளிப்­படுத்தத் தொடங்கினர். இன்றைய நவீன காலமோவானொலி, தொலைக்­காட்சி மற்றும் இணையம், மின்­னஞ்சல், முகநூல், டியூட்டர், வட்ஸ் அப் போன்ற சமூக வளைத்தளங்களாக மாற்றம் கண்டுள்ளது.
நவீன ஜனநாயகத்தின் அச்சாணியா­கவும், உலகின் மூன்றாவது கண்­ணாகவும் கருதப்படும் பத்திரிகைத்­துறை இன்று பல அச்சுறுத்தல்க­ளையும் சவால்களையும் எதிர் நோக்கி வருகின்றமையை நாம் தேசிய, சர்வதேச ரீதியாக அவதா­னிக்கக் கூடியதாகவுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீது இன்று தாக்­குதல்கள், அச்சுறுத்தல்கள், கடத்தல்கள், கொலைகள் மற்றும் அவர்களின் உபகர­ணங்கள், உடமைகளை சேதப்படுத்தல் போன்ற தளங்களில் ஆக்கிரமிப்பு சக்­திகள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இன்று ஜனநாய­கத்தை 100 வீதம் பின்பற்றுகின்றோம் என கூக்குரல் எழுப்பும் அமெரிக்க, ஜரோப்பிய நாடுகளில் கூட இந்த வன்முறைகள் விதிவிலக்கல்ல.
உலகில் கடந்த 10 வருடங்களில் 700 இற்கும் அதிகமான ஊடகவியலா­ளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடகவியலாளர்­களுக்கு எதிராக குற்றங்களை கண்­டிக்கும் விசேட அறிக்கை தெரிவிக்­கின்றது.எல்லைகளற்ற செய்தியா­ளர்கள் அமைப்பு (RSF - Reporters Without Borders) வெளியிட்டுள்ள தகவலின்­படி கடந்த வருடம் 110 ஊடகவியலா­ளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்ப­டுகிறது.
இவ்வாறு கொல்லப்பட்டுள்ள 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்­காக அல்லது வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்­டுள்ளனர். 18 பேர், அவர்களது பணி­யின்போது கொல்லப்பட்டுள்ளனர். மீதி 43 பேர், தெளிவற்ற காரணங்­களால் கொல்லப்பட்டுள்ளனர். இவர்க­ளுக்கு மேலதிகமாக, மக்கள் ஊடகவி­யலாளர்கள் 27 பேரும், ஊடகப் பணியா­ளர்கள் 7 பேரும், இவ்வாண்டில் கொல்­லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்­ளது.
இதன்படி, 2005ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 787 ஊடகவியலாளர்கள், அவர்களது பணியுடன் தொடர்புபட்ட காரணங்களுக்காகக் கொல்லப்பட்டுள்­ளனர் என அவ்வறிக்கை தெரிவிக்கி­றது. இதில் குறிப்பிடத்தக்கதாக, கடந்­தாண்டு கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர், போர் வலயங்­களில் சிக்கி மரணமடைந்திருந்தனர்.
ஆனால், கடந்த வருடம் கொல்லப்பட்ட மூன்றில் இரண்டு ஊடகவியலா­ளர்கள், சமாதானம் நிலவுகின்ற நாடுகள் எனத் தெரிவிக்கப்படும் நாடுகளிலேயே கொல்லப்பட்டுள்­ளனர்.அதிக உயிரிழப்புகளை ஏற்ப­டுத்திய நாடுகளாக, ஈராக், சிரியா ஆகியன காணப்படுகின்றன. இரு நாடுகளிலும் முறையே 11, 10 ஊடக­வியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 9, பிரான்ஸில் 8, யேமனில் 8, மெக்ஸிக்கோவில் 8, தென் சூடானில் 7, பிலிப்பைன்ஸில் 7, ஹொன்டூரஸில் 7 என, இந்த எண்­ணிக்கை நீள்கிறது. இந்தியாவில் கொல்லப்பட்ட 9 பேரில் 5 பேர், ஊடக­வியல் பணிகளுக்காகக் கொல்லப்பட்ட­தோடு, 4 பேர், வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காகக் கொல்லப்பட்டுள்­ளனர் என அறிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஓர் ஊடகவியலாளரே உயிரிழந்துள்ளார். அவர், தனது ஊடகப் பயணத்தின்போது, யானையால் தாக்கப்பட்டுக் கொல்லப்­பட்டுள்ளார். 54 ஊடகவியலாளர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்­டார்கள் எனவும், 153 ஊடகவியலா­ளர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்க­ளினால் பலஸ்தீன ஊடகவியலாளர்க­ளுக்கு எதிரான 574 வன்முறைச் சம்ப­வங்கள் கடந்த வருடம் பதிவாகியுள்ள­தாக குத்ஸின் ஊடக அறிக்கை தெரி­விக்கின்றது. பலஸ்தீனத்தில் இஸ்லா­மிய வானொலி யூனியன் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேலிய ஆக்கிர­மிப்பாளர்களினால் சென்ற ஆண்டு இரு பலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 194 பலஸ்தீன ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்­ளனர்.
மேலும் 89 பலஸ்தீன ஊடகவியலா­ளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 144 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்­ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்­ளது.இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்தும் பலஸ்தீன மற்றும் நடுநி­லையான ஊடகங்களை நசுக்குவ­துடன் அவர்களின் நாசகார நடவடிக்­கைகளையும் பலஸ்தீனின் குர­லையும் வெளி உலகிற்கு கொண்டு செல்வதற்கு தடையா­கவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
.
கடந்த வருடத்தில் மாத்திரம் ஈராக்கில் 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்­டுள்ளதாக ஈராக்கில் இயங்கும் சுதந்­திர ஊடக பரிந்துரைப்பு சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இரணுவ நடவடிக்கைகளின் போது செய்தி சேகரிக்கச் சென்ற 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்­பதுடன் 25 ஊடகவியலாளர்கள் காயம­டைந்துள்ளனர். 4 ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்க­வில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்­ளது.
இந்த அறிக்கையின் படி கொலை அச்­சுறுத்தல்கள், கைது, துன்பு­றுத்தல், தடுத்துவைத்தல், தாக்குதல் உட்பட 180 ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.எமது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்க­ளாக நிலவிய கொடிய யுத்தத்தி­னாலும் கடந்த காலங்களில் ஆட்சிபீடத்­திலிருந்த ஆட்சியாளர்களின் கெடு­பிடிகளாலும் நூற்றுக்கும் அதிக­மான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பல ஊடகவியலாளர்கள் கடத்­தப்பட்டும் சித்திரவதைகளுக்கு உட்ப­டுத்தப்பட்டும் தாக்குதல்களுக்கு உள்­ளாகியும் உடமைகளுக்கு சேதம் ஏற்­படுத்தப்பட்டும் பாதிக்கப்பட்டுள்­ளனர்.எமது நாட்டில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஊட­கத்துறையின் பாதுகாப்பை ஓர­ளவு உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதை அவதானிக்க முடியுமா­கவுள்ளது.
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் கடந்த வருடங்களை விட தற்போது இலங்கை ஓரளவு முன்னே­றியுள்ளதாக எல்லைகளற்ற ஊடக அமைப்பு (RSF - Reporters Without Borders) வெளியிட்டுள்ள அறிக்­கையில் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் ஊடக சுதந்திரம் தொடர்­பான விடயத்தில் உலக நாடுகளில் கடந்த வருடம் வரை 165 வது இடத்­துக்கு அப்பால் இருந்த இலங்கை இந்த ஆண்டு 141 வது இடம் வரை முன்­னேறியிருப்பது ஒரு பாரிய வெற்­றியாகும்.
எனினும் இலங்கையில் ஊடகவியலா­ளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்கள் முழுமையாக குறைவடையாத நிலையில் இலங்கை இன்னும் அபாயகரமான நாடுகள் பட்டியலிலேயே உள்ளடக்கப்­பட்டுள்ளது.180 நாடுகள் உள்ளடக்கப்­பட்டுள்ள இந்தப் பட்டியலில் பின்­லாந்து முதலாம் இடத்தைப் பெற்­றுள்ளது.
தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக முதலாம் இடத்தை பின்லாந்து தக்க­வைத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம், மூன்றாம் இடங்களில் நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்­ளன.இலங்கையை இந்த வரிசையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், தெற்காசியாவின் ஏனைய நாடுகளான இந்தியா 133, ஆப்கானிஸ்தான் 120, நேபாளம் 105, பூட்டான் 95, ஆகிய நாடுகள் இலங்­கையை விட ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முன்னிலையில் உள்ளன.
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நாடுகளின் வரிசையில் உலகின் பலம்வாய்ந்த நாடுகளான அமெ­ரிக்கா 44 ஆவது இடத்திலும் ரஷ்யா 148ஆவது இடத்திலும் சீனா 176ஆவது இடத்திலும் உள்ளன. வடகொரியா, துர்க்மெனிஸ்தான், எரித்ரியா ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் மற்றும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் கடந்த காலங்களில் மட்டும் ஊடகவியலாளர்கள் 44 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களை படுகொலை செய்த யுகம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அந்த யுகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாட்டின் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் தகவல் அறியும் சட்ட மூலம் அமுல்படுத்தப்படும் என கடந்த ஜனாதிபதி மற்றும் பாரளுமன்ற தேர்தல்களில் உறுதியளிக்கப்பட்டாலும்கூட இது இன்னும் அமுல் படுத்தப்படாமல் உள்ளமை சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
கடந்த காலங்களில் பலமுறை பாராளுமன்றத்தில் இச் சட்ட மூலம் பராளுமன்ற மறுசீரமமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் சமர்ப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது பிற்போடப்பட்ட வண்ணமே உள்ளது .இச் சந்தர்ப்பத்தில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படாமல் போய்விடுமோ என ஊடகவிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.




மே 3 - உலக பத்திரிக்கை சுதந்திர தினம்!
ஆண்டு தோறும் மே 3 - ம் தேதி உலக பத்திரிக்கை சுதந்திர தினமாக (World Press Freedom Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்றவற்றை விளக்கும் விதமாக, உலக பத்திரிகை சுதந்திர தினத்தை மே 3&ம் தேதி கொண்டாட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. பத்திரிக்கைகள் எத்தனையோ சோதனைகளைத் தாண்டி இன்றைய சுதந்திர நிலையை எட்டியுள்ளன.
பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியை இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்டு இவர் ‘வங்காள் கெஜட்’ என்ற பத்திரிக்கைக்கு தொல்லை கொடுத்து, அதன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.
1799 ஆம் ஆண்டு வெஸ்லி பிரபு பத்திரிக்கைகளுக்கான புதிய சட்ட திட்டங்களை உருவாக்கினார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. பத்திரிக்கையின் ஆசிரியர், உரிமையாளர் ஆகிய இருவரைப் பற்றிய விவரங்கள், முகவரி ஆகியவற்றை அரசின் செயலாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
2. பத்திரிக்கையை அச்சிடுபவரின் பெயரைப் பத்திரிக்கையில் வெளியிடுவது கட்டாயம்.
3. ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரிக்கை வெளியிடக்கூடாது.
4. அரசின் செயலாளர் அல்லது அரசின் பிரதிநிதி ஒருவரால் பரிசோதித்த பிறகே பத்திரிக்கை வெளியிடப்பட வேண்டும்.
5. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
முதல் இரு நிபந்தனைகள் இப்போதும் அமலில் உள்ளன.
1818-ல் ஹேஸ்டிங்ஸ் பிரபு, பத்திரிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான விதிமுறையை சிறிது தளர்த்தினார்.
இந்தியா முழுவதற்கும் பொருந்துகிற வகையில் தடைகளை நீக்கி பத்திரிக்கையை வெளியிடுவது சம்பந்தமான சட்டத்தை 1835-ம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி சார்லஸ் மெட்கால்ப் கொண்டு வந்தார்.
இதன் மூலமும் பத்திரிக்கைச் சுதந்திரம் முழுமையாகக் கிடைக்கவில்லை. 1879-ம் ஆண்டில் தேசிய மொழிச் செய்தி இதழ்கள் சட்டம் ஏற்பட்டுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எழுத்து உரிமையை வலியுறுத்தி இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் புதிய இதழ்கள் வெளிவந்தன.
1877-ம் ஆண்டு இந்தியாவின் ராணியாக விக்டோரியா மகாராணி பதவி ஏற்றார். அப்போது அவரது அரசுப் பிரதிநிதியாய் இருந்த லிட்டன் பிரபு, இந்தியாவில் நடந்து வருகிற கிளர்ச்சிகளை அடக்குகிற வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். இதனால், பத்திரிக்கைகளை வெளியிடுவதில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர், லிட்டன் பிரபு அடக்குமுறைச் சட்டத்தை ரத்து செய்து பத்திரிக்கைகளுக்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கினார்.
1894-1898 காலக் கட்டத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்த எல்ஜின் பிரபு, பத்திரிக்கை ஆசிரியர்கள்,நிருபர்கள் ஆகியோரின் நன்னடத்தையைக் கண்காணிப்பதற்கு நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கினார். அவருக்கு அடுத்து வந்த மின்டோபிரபு (1905 - 1910) எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான உரிமைகளை மேலும் குறைக்க பல சட்டங்களை கொண்டு வந்தார். 1910-ம் ஆண்டு ‘பத்திரிக்கைச் சட்டம்’ இயற்றப்பட்டு அமலாக்கப்பட்டது.
1916- 1920-ம் ஆண்டு அரசப் பிரதிநிதியாய் இருந்த செம்ஸ்போர்டு, ரௌலட் சட்டம் மூலம் எழுத்துரிமையையும் பேச்சுரிமையும் ஒடுக்கினார். 1931-ம் ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்த்தின் போது இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன். பிறகு, இர்வின் பிரபு புதிய சட்டத்தை அமல்படுத்தினார். காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை மீறும் வகையில் புதியதாக அச்சு மசோதா, புதிய பத்திரிக்கை மசோதா ஆகிய இரண்டும் கொண்டு வரப்பட்டன.
1931&ம் ஆண்டின் ‘இந்திய செய்தி நிறுவனச் சட்டம்’, 1935-ம் ஆண்டின் ‘இழப்பீடு கோரும் சட்டம்’, 1952-ம் ஆண்டை ‘நஷ்டம் பற்றிய சட்டம்’, 1956-ம் ஆண்டின் ‘இளைஞர்களுக்கு ஊறு விளைவிக்கும் செய்தி வெளியீட்டுத் தடுப்பு சட்டம்’, 1957-ம் ஆண்டின் ‘உரிமைப் பதிப்புச் சட்டம்’, 1961-ம் ஆண்டின் ‘குற்றம் செய்யத் தூண்டும் மற்றும் ஏனைய ஆட்சேபனைக்குரிய விவகாரங்களை அச்சிடுதல், வெளியிடுதல்’ ஆகியவற்றைத் தடுக்கும் சட்டம், 1967- ம் ஆண்டின் ‘ரகசியங்கள் காப்புத் திருத்தச் சட்டம்’ ஆகியவை அமலுக்கு வந்தன. 1961-ம் ஆண்டின் சட்டம் பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
1975-ம் ஆண்டு நெருக்கடி காலப் பிரகடனத்தின் போது வெளியான ஆட்சேபணைக்கு உரிய விவகாரங்களை வெளியிடுவதைத் தடை செய்யும் சட்டம் 1977-ம் ஆண்டு நீக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு உரிமைப் பதிவுத் திருத்தச் சட்டமும், அவதூறு சட்டமும் அமல்படுத்தப்பட்டன.
தற்போது பத்திரிக்கைச் சுதந்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வரைமுறைப்படுத்தும் மத்திய அரசின் பத்திரிக்கைச் சட்டம் எதுவும் இல்லை என்றாலும் சில சமயங்களில் தேவையில்லாமல் பத்திரிக்கைகள் மீது வழக்கு போடுவது நடக்கத்தான் செய்கிறது. .
நாட்டின் நான்கு தூண்களாக சட்டம் இயற்றுதல், நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிமை இருக்கின்றன.பத்திரிகை நான்காவது தூண் என்று அழைக்கப்படுகிறது.
பத்திரிக்கை:சில சுவையான செய்திகள்!
* சென்னையிலிருந்து 1856 &ம் ஆண்டு தமிழ் வார இதழ் ‘தின வர்த்தவானி’ முதன் முதலில் வெளிவந்தது.
* இந்தியாவில் முதல் வார இதழ் ‘தேசோப்காரி’ 1861&ம் ஆண்டு வெளிவந்தது. இது ஒரு தமிழ் இதழ்.
* இந்தியாவில் முதல் அரசியல் பத்திரிக்கையாக ‘இந்தியன் ஹெரால்டு’ உத்தரபிரதேசத்திலிருந்து 1879-ம் ஆண்டு வெளிவந்தது.
* முதல் தமிழ்த் தினசரி ‘சுதேசமித்திரன்’, 1882-ம் ஆண்டு
* இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கை ஆசிரியை ஸ்வர்ணகுமாரி. அவர் 1889-ல் வெளிவந்த ’பாமா போதினி’ என்னும் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றினார்.
* இந்தியாவில் குழந்தைகளுக்க்கான முதல் பத்திரிக்கை 1840-ம் ஆண்டு தமிழில் வெளிவந்தது. அதன் பெயர் ’பாலதீபிகை’
P - People (மக்கள்),
R - Royal (ராஜ்ஜியம்),
E - Education (கல்வி),
S - Sound- (காதால் கேட்பது),
S - Sight- (கண்களால் பார்ப்ப்து).
இவை எல்லாம் இனணந்துதான் ’பிரஸ்’ என்ற ஆங்கிலச் சொல் உருவானது.
* ‘செய்தி’ என்பதை ஆங்கிலத்தில் ‘News’ என்கிறோம்.இது எப்படி ஏற்பட்டது?
நான்கு திசைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.அதைக் குறிக்கும் விதமாக வடக்கு (North) கிழக்கு (East) மேற்கு (West) தெற்கு (South)என்னும் சொற்களின் முதல் எழுத்துகள் இணைந்துதான் ‘நியூஸ்’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக