செவ்வாய், 30 மே, 2017

உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31 .

 
உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31 .

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.


அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை மோசமானதுதான்.
அதிகரிக்கும் இறப்புகள்
உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக Lancet oncology journal-ன் சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.
உலக அளவில்
புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதே இதை நிரூபித்துவிடும். இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகை பிடிக்கிறனர்.
இந்திய அளவில்
சரி, இந்தியாவின் நிலைமை? இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பாதிப்புகள் என்ன?
புகை பிடித்தால் எப்படிப் புற்றுநோய் வருகிறது? புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
யாருக்குப் பாதிப்பு
“ஒரு பாக்கெட், இரண்டு பாக்கெட் என ஒரே நாளில் அதிகம் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதே எண்ணிக்கையில் ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டு புகை பிடித்தால் போதும், புற்றுநோய் நிச்சயமாக வந்துவிடும். வீட்டிலும், பொது இடத்திலும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருப்பதால், முன்பைவிட அவர்களும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதால் புண் ஏற்படுகிறது. இது நாளடைவில் புற்றுநோய் புண்ணாக மாறிவிடுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்" என்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பெல்லார்மின்.
நிறுத்துவோம்
இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? புகை பிடிப்பது, பான், குட்கா, புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களை நிறுத்துவதுதான் ஒரே வழி. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட முதலில் எளிய வழிகளான யோகா, ஆசனங்களைச் செய்யலாம். தொடர்ந்து தியானத்துக்கு நகரலாம். புகையிலை அடிமைத்தனத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விஷயங்களில் ஈடுபட வேண்டும். அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். நமது மனஉறுதியின் வீரியத்தைப் பொறுத்து அது வேகமாக நிகழும்.
புகையிலை எதிர்ப்பு நாள்
புற்றுநோய் இல்லா உலகை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைக்கு உலக விருப்பமாக உள்ளது. இதை 27 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டுக்கான வாசகம், புகையிலை மீதான வரியை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.



நிறுத்தினால் கிடைக்கும் நிச்சயப் பலன்:

புகைப்பதைக் கைவிடுவது அவ்வளவு எளிதல்ல. அதேநேரம், முயற்சி எடுத்துப் புகைப்பதைக் கைவிட்டால் அடுத்தடுத்துக் கிடைக்கும் பலன்கள், உங்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடும். ஒருவர் புகைப்பதை நிறுத்திய நிமிடத்திலிருந்து உடல் எப்படியெல்லாம் மீட்டெடுக்கப்படுகிறது தெரியுமா?
20 நிமிடங்களில்
# ரத்த அழுத்தம் இயல்பாகும்.
# இதயத் துடிப்பு இயல்பாகும்.
8 மணி நேரத்தில்
# ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு உடலிலிருந்து வெளியேறும்.
# ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்புக்குத் திரும்பும்; அதனால் உடல் சக்தி முன்பைவிட மேம்பட்டிருக்கும்.
2 நாட்களில்
# நரம்புமுனைகள் திரும்ப வளர ஆரம்பிக்கும். நாக்கின் சுவை மொட்டுகளும் மணங்களை உணரும் தன்மையும் அதிகரிக்கும்; அதனால் உணவின் சுவை முன்பைவிட மேம்பட்டிருக்கும்.
2-12 வார இடைவெளியில்
# உடலில் மேல் தோல் மேம்படும்.
# ரத்தவோட்டம் மேம்படும்.
# சுவாசமும் நுரையீரல் செயல்பாடும் மேம்படும்.
# நடை எளிதாகும்.
1-9 மாத இடைவெளியில்
# இருமல், சைனஸ் இறுக்கம் தளரும்.
# மூச்சிளைப்பு குறையும்.
# உடல் சக்தி குறிப்பிடத்தக்க அளவு மேம்படும்.
# நுரையீரலின் சுயசுத்தம் செய்துகொள்ளும் தன்மை மேம்படும். நோய்த்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.
1 ஆண்டில்
# புகைபிடிக்கும்போது இதயக் கோளாறு ஏற்படுவதற்கு இருந்த ஆபத்து 50 சதவீதமாகக் குறையும்.
5 ஆண்டுகளில்
# பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் புகை பிடிக்காதவருக்கு உள்ள அளவுக்கே மாறிவிடும்.
# வாய், தொண்டை, உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைபிடிப்பவரைவிட பாதியாகக் குறையும்.
10 ஆண்டுகளில்
# புகை பிடிக்காதவருக்கு உள்ள சராசரி ஆயுட்காலம் மீண்டும் கிடைக்கும்.
# நுரையீரல் புற்றுநோயால் இறப்பதற்கு உள்ள சாத்தியம் 50 சதவீதம் குறையும்.
# வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறுநீரகப்பை, சிறுநீரகம், கணையப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் குறையும்
# புற்றுநோயாக மாற வாய்ப்புள்ள செல்கள், இயல்பு செல்களாகப் பதிலிடப்படும்
15 ஆண்டுகளில்
# இதயக் கோளாறு ஏற்படுவதற்கான ஆபத்து, புகை பிடிக்காதவருக்கு இருப்பதைப் போலவே ஆகிவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக