புதன், 10 மே, 2017

மகான் அவதரித்த புத்த பூர்ணிமா



மகான் அவதரித்த புத்த பூர்ணிமா

நாடுமுழுவதும் நாளை முதல் புத்த பூர்ணிமா வெகு விமரிசையாக கொண்டாடப்பட.உள்ளது.

 பௌத்தமதத்தினர் வெண்ணிற ஆடை அணிந்து புத்த விகாரங்களுக்கு மலர்களை தூவி வழிபடுவர். வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.

அந்த நாளில்தான் விசாக நட்சத்திரத்தில்  வைகாசி பவுர்ணமியன்றுதான் உலகிற்கே அமைதியை போதித்த கௌதம புத்தர் அவதரித்துள்ளார்.

மகான் அவதரித்த நாள்

மன்னரின் மகனாக அவதரித்து ரோகிணி நதி நீர் பங்கீட்டுக்காக போரினால் சாக்கியர்களும் கோலியர்களும் இறப்பதை தவிர்க்க.

மக்களின் நல் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.

கௌதமபுத்தரான சித்தார்த்தன்

பீகார் மாநிலம் கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார்.

அதுமுதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்..

புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80 – வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது. நாளை முதல் புத்த பூர்ணிமா விழா இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும். நேபாளத்தில் உள்ள லும்பினியிலிம் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியா மட்டுமல்லாது. நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புத்த பூர்ணிமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது

வழிநடத்தும் போதனைகள்

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கௌதம புத்தர் பிறந்து 2,561 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது. புத்த பூர்ணிமா நாளானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாமும் அந்த மாதிரி நிலையை அடையலாம் என்று நமக்கு உணர்த்துகிறது.

"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம். புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக