புதன், 9 ஆகஸ்ட், 2017

உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 09



உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 09.

உலகின் 90 நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி பழங்குடியின மக்களின் உரிமைகளும், கலாச்சாரங்களும், பாரம்பரிய நிலங்களும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9ம் தேதியன்று, உலக பழங்குடியினர் நாளைக் கடைப்பிடிக்கப்படுகின்றது ஐ.நா. நிறுவனம்.
உலக மக்கள் தொகையில் ஐந்து விழுக்காட்டினராக உள்ள பழங்குடியின மக்கள், உலகின் மொத்த ஏழைகளில் 15 விழுக்காட்டினராவும் உள்ளனர் என, ஐ.நா. கூறியுள்ளது.

உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள ஏழாயிரம் மொழிகளில், பெரும்பாலான மொழிகள், பழங்குடியினத்தவரால் பேசப்படுகின்றன என்றும், இவர்கள் ஐந்தாயிரம் விதமான பலதரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஐ.நா. கூறியுள்ளது.
2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, ஐ.நா.பொது அவை, பழங்குடியினத்தவரின் உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிக்கையை உருவாக்கியது. இதன் பத்தாம் ஆண்டு நினைவு இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்படுகின்றது.


ஆதிவாசிகள் தினம்!

ஐக்கிய நாடுகள் சபை 2005-15 காலக்கட்டத்தை மரபின மக்களின்(ஆதிவாசிகள்) தசாப்தமாக கடைப்பிடிக்கிறது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி சர்வதேச ஆதிவாசிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“Indigenous Media, Empowering Indigenous Voices” (சுதேச ஊடகங்கள் மரபின மக்களின் குரல்களை பலப்படுத்துதல்) என்ற முழக்கத்தை இவ்வாண்டு முழக்கமாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது. ஆதிவாசி சமூகங்களின் பொருளாதார-சமூக முன்னேற்றம், கலாச்சார-சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு, சுகாதாரம் பேணல், மனித உரிமைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதே இத்தினம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
ஆதிவாசிகளின் பிரச்சனைகளை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் உள்ளூர் ஊடகங்கள் நல்லதொரு பங்கினை ஆற்றி வருகின்றன. கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி பிரிவுகள் உலக முழுவதும் வாழ்கின்றனர். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மரபின பிரிவினரின் மக்கள் தொகை எட்டரை கோடிக்கும் அதிகமாகும். தமிழகத்தில் பழங்குடி மக்கள் இன்றைக்கும் மலைத் தொடர்களில் வனங்களில் நிறைந்து வாழ்கின்றார்கள். இயற்கை எழில் மிக்க மேற்கு மலைச்சாரலில், கிழக்குமலைத் தொடரிலும் வாழ்ந்து வருகிறார்கள்
கானா பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் ஃபார் சோசியல் பாலிசி’ நடத்திய ஆய்வில் உலகில் அதிகரித்து வரும் நகர மயமாக்கலே ஆதிவாசி மக்களை ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் 2002-ஆம் ஆண்டு மனித உரிமை கமிஷன் தயாரித்த அறிக்கையில் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசி மக்களின் இறையாண்மையின் மீதான அத்துமீறலே மனித உரிமை மீறலுக்கு வழிவகுப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை இரண்டையும் ஆராயும் பொழுது வளர்ச்சியடைந்த சமூகத்தின் கலாச்சாரத்தை இவர்கள் மீது திணிக்க முயல்வது ஆபத்தானது என்பத நாம் புரிந்துகொள்ள முடியும்.
உலகமெங்கும் உள்ள ஆதிவாசிகள் வாழ்வதற்காக போராடி வருகின்றார்கள்.
ஆதிவாசி மக்களின் இருப்பு, வாழ்க்கை சூழல், பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலைக் கொள்கிறது. உலகில் வறுமையில் வாடுவோரில் 15 சதவீதமும் பழங்குடியினர் ஆவர்.
இந்தியாவில் மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரால் ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம்,
சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு அநியாயமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
1990 களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை. தொழிற்சாலை வளர்ச்சி. தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற ‘வளர்ச்சி திட்டம்’ என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.
இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச் செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும் நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டது.
அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன் மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்கு தடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யும் என அஞ்சப்படுகிறது.
பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது.
அதாவது “ஏழையைக் கொல்வோம். ஏழ்மையை அல்ல” என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது. இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும், இத்தகைய முயற்சியில் குறுகிய கால வெற்றியும் கூட சந்தேகத்திற்கு உரியதாயினும் சாதாரண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும். எனவே இந்திய அரசு ராணுவ படைகளை உடனே வாபஸ் வாங்கி. ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம் பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகை செய்யக் கூடிய திறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை உடனே கைவிட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களான அருந்ததி ராய், நோம் சோம்ஸ்கி, மைக்கேல் லெபோவிட்ஸ் போன்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினர்.
ஆனால் இந்திய நடுவண் அரசும், மாநில அரசுகளும் இவற்றையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அதன் உச்சக்கட்ட நடவடிக்கைதான் கடந்த ஜூன் 28-ஆம் தேதி சட்டீஷ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம் கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமத்தில் 19 அப்பாவி பழங்குடியின மக்கள் கொடூரமாக சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவமாகும்.
இவ்வாண்டின் விதைப்பு திருவிழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என கூடி பேசிக்கொண்டிருந்த பழங்குடியின மக்களை பயங்கர மாவோயிஸ்டுகள் என கூறி மத்திய ரிசர்வ் படை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது. மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை இதுதான் என்றும், இது மிகப் பெரிய வெற்றி என்றும் அறிவித்து, மத்திய ரிசர்வ் போலீசுப் படை பெருமிதம் கொண்டது. அதற்கு ஒத்து ஊதினார் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், உண்மைச் சம்பவத்தை உள்ளூர் ஊடகங்கள் கசியவிட்டன. அப்பொழுதுதான் அந்த பயங்கரம் உலகிற்கு தெரியவந்தது. இச்சம்பவத்தை பார்க்கும் பொழுது நமது அரசு சீருடை அணிவித்து ஆயுதங்களை கொடுத்து மாதம் தோறும் சம்பளமும் அளித்து மனநோயால் பீடிக்கப்பட்ட பயங்கரவாதிகளை மாவோயிஸ்ட் வேட்டைக்கு அனுப்பியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.
செவ்விந்திய பழங்குடி மக்களின் இரத்தத்தை குடித்து இன சுத்திகரிப்பை அரங்கேற்றிவிட்டு உருவானதுதான் அமெரிக்கா என்ற தேசம். இன்று அமெரிக்கா-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யெமன் போன்ற நாடுகளில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் தீவிரவாத வேட்டை என்ற பெயரால் தாக்குதல்களை நடத்தி அப்பாவிகளை கொன்று குவித்து வருகிறது.
மரபின மக்களை குறித்து ஆண்டுக்கு ஒரு தினம் மட்டுமே கவலைக் கொள்ளும் ஐ.நா, இத்தாக்குதல்கல் குறித்தெல்லாம் வெறும் ஒரு பார்வையாளராகவே இருந்து வருவது துரதிர்ஷ்ட வசமானதாகும்.
இலாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்ட உலமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளினால் பெரும் நிறுவனங்கள் தங்களின் சந்தைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் நடத்தும் படையெடுப்புகளால் பாரம்பரியமாக கட்டி காத்துவரும் வாழ்க்கை முறைகளும், பண்பாடுகளும் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் வாழ்வதற்காக போராடும் மரபின மக்களுக்கு ஆதரவாக மனிதநேயத்தை விரும்புவோர் களமிறங்க வேண்டும் என்பதே இத்தினத்தில் நாம் வைக்கும் கோரிக்கையாகும்.



வனங்களை இழக்கும் பழங்குடிகள்!

© ‘தி கார்டியன்’  தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்...

வனப் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வனப் பகுதிகள் அறிவிக்கப்படுவதுடன், வேட்டைத் தடுப்புப் படைகளும் அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. ஆனால், இதன் விளைவாக ஏராளமானோர் குறிப்பாகப் பழங்குடியினர் விரட்டியடிக்கப்படுவதுடன் துன்புறுத் தலுக்கும் ஆளாகின்றனர். மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளும் அதிகரித்திருக்கின்றன. எனவே, இவ்விஷயத்தில் புதிய அணுகுமுறை அவசரத் தேவையாக இருக்கிறது. வனப் பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட மக்களின் நில உரிமையை பாதுகாப்பது என்பதை வனப் பாதுகாப்புத் திட்டங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
தங்களின் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதிலும் கவனித்துக் கொள்வதிலும் மற்ற எவரையும்விடச் சிறந்தவர்கள் பழங்குடியினர்தான். அவர்களது வாழ்வே அதைச் சார்ந்துதான் இருக்கிறது. 1974-ல் தான்சானியாவின் கோரோங்கோரோ கிரேட்டர் வனப் பகுதியிலிருந்து மாசாய் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதியில் வன விலங்கு வேட்டை அதிகரித்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் பார்க் பகுதியிலிருந்து பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், எல்க் எனப்படும் காட்டு மான்களாலும் மற்றும் பைசன் என்றழைக்கப்படும் காட்டெருமைகளாலும் அதிக அளவு மேய்ச்சலுக்குட்பட்டு அப்பகுதி நிலங்கள் பாழாகின. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, ஆஸ்திரேலியாவின் அபராஜின்கள் கட்டுப்பாடான எரிப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர். பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
வனங்களைக் காத்தவர்கள்
தெற்காசியக் காடுகளின் பழங்குடி மக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் புலிகளின் அருகில் வாழ்ந்துவந்தவர்கள். ஆனால், இன்று ‘புலிகள் பாதுகாப்பு’ என்ற பெயரில் அம்மக்கள் காடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். நேபாளத்தின் சிட்வான் தேசியப் பூங்காவின் சில பகுதிகளிலிருந்த பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதிகளைவிடவும் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
இந்தியாவில் பழங்குடி மக்களின் நில உரிமையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அதிகமான எண்ணிக்கையில் வனவிலங்குப் பூங்காக்களை நிறுவி, அங்கிருந்த பழங்குடி மக்களை வெளியேற்றிவருவதுடன், அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவர முயற்சிக்கின்றன அரசுகள்.
அமேசான் காடுகளில் பழங்குடி எல்லைகள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, பழங்குடி மக்களாலேயே நிர்வகிக்கப்படும் நிலையில், அமேசான் வனப் பகுதிகள் அதிகப் பாதுகாப்புடன் இருப்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. இதற்கு மிக எளிய காரணம் உண்டு. பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாகத் தங்கள் நிலங்களை நிர்வகித்து, பாதுகாத்துப் பராமரித்தவர்கள். எனவே, மற்ற எவரைவிடவும் வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் அறிவும் முனைப்பும் கொண்டவர்கள் அவர்கள்தான்.
பிடுங்கப்படும் வேர்கள்
தற்போதைய வனப் பாதுகாப்பு முறையில் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளை மூன்று உதாரணங்கள் விளக்குகின்றன.

தென்கிழக்கு கேமரூனில் பாக்கா பிக்மி மக்கள் தங்கள் மூதாதைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்த வனப் பகுதிகள் தேசியப் பூங்காக்களாகவும் வேட்டைச் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. விலங்குகளை வேட்டையாடி உண்பதை வாழ்க்கை முறையாகக் கொண்ட பாக்கா மக்கள் தற்போது வேட்டைக்காரர்களாகக் குற்றம்சாட்டப்பட்டு காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவருகிறார்கள். வேட்டைத் தடுப்புப் படைகளால் துன்புறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாவதுடன் தங்கள் உயிரையே பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். காட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், தங்கள் உடல்நிலை சீர்குலைந்துவிட்டதாக அவர்களில் பலர் தெரிவிக்கிறார்கள். அம்மக்கள் வேட்டைக்காரர்களாகச் சித்தரிக்கப்பட்டு சித்திரவதையை அனுபவிக்கும் அதேவேளையில், வன விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைக் கடத்தும் சட்ட விரோதத் தொழில் மறுபுறம் துரிதமாக நடந்துவருகிறது.
போட்ஸ்வானாவின் புஷ்மேன் பழங்குடியினர் கலஹாரி பாலைவனத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்தனர். இன்று அவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர். அம்முகாம்களை ‘மரணப் பிரதேசங்கள்’ என்றே அழைக்கிறார்கள் புஷ்மேன் பழங்குடிகள். ‘சென்ட்ரல் கலஹாரி கேம் ரிசர்வ்’ பகுதியில் வசிக்கவும் வேட்டையாடவும் அவர்களுக்கு உரிமை உண்டு என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பு கூறினாலும், வேட்டையாடுகிறார்கள் என்று காரணம்காட்டி, வனத்துறை அதிகாரிகள் அவர்களைக் கைது செய்வதுடன் தாக்கியும் வருகிறார்கள். இன்று ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று அழைக்கப்படும் அம்மக்கள் வசித்த இடங்களில் வைரம் மற்றும் புதுப்பிக்கவியலாப் பொருட்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களும், சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு விடுதியும், நீச்சல் குளமும் இருக்கின்றன. புஷ்மேன் பழங்குடிகள் வாழ்ந்ததாலும், வேட்டையாடியதாலும் வன உயிர்களுக்கு மிகப் பெரிய அழிவு ஏற்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு மையங்களில் ஏராளமான பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் அல்லது துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். தங்கள் வனப் பகுதியை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இழப்பீடுகள் மிகச் சிறியவை. பழங்குடி மக்களின் குடும்பங்கள் சிதைந்துவிட்டிருக்கின்றன. பிளாஸ்டிக் தகடுகளாலான ‘வீடு’களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் தன்னிறைவு வாழ்க்கையையும் பெருமையையும் இழந்துநிற்கும் அவர்கள், இன்று பிறரிடம் உதவிகளை எதிர்பார்க்கும் நிலையிலும், கூலி வேலைகள் செய்து பிழைக்கும் நிலையிலும் இருக்கிறார்கள்.
அக்கறை தேவை
பழங்குடி மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் மிகச் சில உதாரணங்கள் இவை. உலகம் முழுவதுமே வனப் பாதுகாப்பு முறைகளின் பாதகமான விளைவுகளை அம்மக்கள் சந்திக்கிறார்கள்.
எத்தனையோ கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டாலும், பழங்குடிகளைத் தனிமைப்படுத்துவதிலும் துன்புறுத்துவதிலும் தான் வனப் பாதுகாப்புத் துறை தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், வனப் பாதுகாப்புக் கொள்கையில் துரிதமான மாற்றம்தான் இப்போது தேவை. வன உயிர்கள் விஷயத்திலும் சரி, பழங்குடி மக்கள் விஷயத்திலும் சரி, நேரம் அதிகமில்லை. வனப்பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் பழங்குடிகளின் நில உரிமையைப் பாதுகாப்பதுடன் அவர்களது வார்த்தைகளுக்குச் செவிமடுத்து அவர்களை ஆதரிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக