சனி, 12 ஆகஸ்ட், 2017

கைவிளக்கு ஏந்திய தேவதையின் நினைவுநாள் ஆகஸ்ட் 13



கைவிளக்கு ஏந்திய தேவதையின் நினைவுநாள் ஆகஸ்ட் 13 -

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியரின் மூன்றாவது மகளாக இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் 12.5.1820 அன்று பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார்.

சிறுவயதில் மிகவும் துடிப்பாக இருந்த நைட்டிங்கேல் கணிதத்தை சிறப்புப் பாடமாக தேர்வு செய்து பயின்றார். மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாட்டு மொழிகளையும் கற்றார். செவியலராகி மக்களுக்கு தொண்டு செய்ய விரும்பிய தனது எதிர்கால திட்டத்தை பெற்றோரிடம் அவர் கூறியபோது அவர்கள் எளிதில் சம்மதிக்கவில்லை.

செவியலராகும் குறிக்கோளுக்காக தன்னை காதலித்தவரின் திருமண ஆசையை 1849-ம் ஆண்டில் நிராகரித்தார். 1850-51 ஆண்டுகளுக்கிடையில் ஜெர்மனியின் கைசெர்ஸ்வெர்த் பகுதியில் உள்ள பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து செவிலியராக மாறினார்.

பின்னர் லண்டன் நகரில் உள்ள ஹார்லே ஸ்டிரீட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கவர்னருக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையால் செவிலியர்களுக்கான மேற்பார்வையாளராக (சூப்பிரண்ட்) உயர்த்தப்பட்டார்.



அந்த காலகட்டத்தில் காலரா எனப்படும் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மிடில்செக்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் குழுவுக்கும் இவரே தலைமை தாங்கினார்.

கடந்த 1854-56 ஆண்டுகளுக்கு இடையில் ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரீமியனில் நடைபெற்ற போரில் சுமார் 18 ஆயிரம் வீரர்கள் காயம்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது.

கான்ஸ்டட்டின்நோப்புல் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதியின்றி மூட்டைப்பூச்சிகள் மற்றும் எலிகளுக்கு இடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரர்களுக்கு நைட்டிங்கேல் குழுவினர் இடையறாது மருத்துவ சிகிச்சை அளித்தும், ஆறுதல் மொழி பேசியும் குணப்படுத்தி வந்தனர்.

தண்ணீர்கூட அங்கு ரேஷன் முறையில் வழங்கப்பட்டதால் பல வீரர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சோகம் அவரது நெஞ்சைப் பிழிந்தது. முதலில் அந்த மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார்.



இரவு நேரங்களில் நைட்டிங்கேல் கையில் மெழுகு விளக்கை ஏந்தியபடி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களை நலம் விசாரித்து, ஆறுதல் மொழியுடன் அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, மனச்சுமையை போக்கி, விரைவில் குணப்படுத்தினார்.

இதைகண்ட ராணுவ வீரர்கள், ‘தங்களைக் காக்க விண்ணுலகில் இருந்து தேவதையொன்று மண்ணுலகுக்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர். போருக்குப்பின் தனது ஊருக்கு  திரும்பிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலை அங்குள்ள மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனால், விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக நன்கறியப்பட்ட பிரபலமாக பி.பி.சி. வானொலி இவரை அறிவித்தது.

இங்கிலாந்து ராணி விக்டோரியா ‘நைட்டிங்கேல் ஜுவல்’ எனப்படும் ஆபரணத்தை இவருக்கு விருதாக வழங்கி கவுரவித்தார். இந்த விருதுடன் அளிக்கப்பட்ட பணமான இரண்டரை லட்சம் டாலர்களை கொண்டு 1860-ம் ஆண்டு செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியை நைட்டிங்கேல் தொடங்கினார். இங்கு செவியர் பயிற்சி பள்ளி ஒன்றும் உருவானது.

அவரது அரிய சேவையை பாராட்டி அந்நாட்களில் கவிதைகள், கதைகள், பாடல்கள், நாடகங்கள் பல உருவாக்கப்பட்டு மக்களிடையே மிகவும் புகழுக்குரிய பெண்மணியாக உயர்ந்தார். பிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல் வாழ வேண்டும் என பல இளம்பெண்கள் சபதமேற்கும் அளவுக்கு அவர் விளங்கினார். மிக உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த பல பெண்கள் அவரது பள்ளியில் சேர்ந்து செவிலியர் பயிற்சி பெற்று நோயாளிகளுக்கு சேவையாற்ற முன்வந்தனர்.

இடைவிடாத பணியின்போது ‘கிரிமியன் காய்ச்சல்’ கடுமையான தொற்றுநோய்க்குள்ளாகி மேஃபேர் நகரில் உள்ள தனது வீட்டில் பல ஆண்டுகள் அவர் படுக்கையில் கிடக்க நேரிட்டது. இருப்பினும் தனது 38-வது வயதில் படுக்கையில் இருந்தபடியே மருத்துவ துறையில் செய்யப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார்.

நடமாட இயலாத நிலையிலும் நலிவுற்ற நோயாளிகளின் துயர்துடைக்கும் பல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இந்தியாவிலும் சுகாதாரத்துறையில் செய்யப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் அவர் பரிந்துரைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு விக்டோரியா மகாராணி செஞ்சிலுவை சங்க விருதை வழங்கினார்.
1907-ம் ஆண்டு பிரிட்டானிய மன்னரின் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விளங்கினார்.

1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமானது. ஆகஸ்ட் 12-ம் தேதி பல்வேறு நோய்கள் ஒருசேர தாக்கியதில் 13-8-1910 அன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த ‘கைவிளக்கு ஏந்திய தேவதையின்’ இன்னுயிர் பிரிந்தது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்றிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வந்த வாய்ப்பை அவரது குடும்பத்தார் நிராகரித்து விட்டனர். எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் தனது இறுதி யாத்திரை நடைபெற வேண்டும் என்ற பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

இங்கிலாந்தின் ஹேம்ப்ஷைர் அருகேயுள்ள செயிண்ட் மார்கரெட் சர்ச் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேலால் தொடங்கப்பட்ட செவிலியர் பயிற்சிப் பள்ளி தற்போது அவரது நினைவிடமாகவும் அருங்காட்சியகமாகவும் விளங்கி வருகிறது.

‘கிரிமியாவின் தேவதை’ என்றும் அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெற்ற விருதுகள், பரிசுகள் அவர் பயன்படுத்திய உபகரணங்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

1987-ம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் மாநாட்டில் உலகளவில் செவிலியர் தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, 1991-ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றியும், பாராட்டியும் வருகின்றன.

அவரது நினைவாக, ஆண்டுதோறும் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் உள்ள விளக்குகள் அங்குள்ள செவிலியர்களால் ஏற்றப்பட்டு, அங்குள்ள உயர்ந்த பீடத்தில் அவர்கள் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே மாதம் 12-ம் தேதி உலகின் பல நாடுகள் செவிலியர் துறையில் சிறந்த சேவையாற்றுபவர்களை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற சிறப்பு விருதால் கவுரவித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற செவிலியர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து இவ்விருதினை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக