வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

தமிழ் பற்றாளர் கிருபானந்த வாரியார் வாரியார் பிறந்த தினம் ஆகஸ்ட் 25.



தமிழ் பற்றாளர் கிருபானந்த வாரியார் வாரியார் பிறந்த தினம் ஆகஸ்ட் 25.

வாரியார்
தமிழ்க்கடவுள் முருகனை முதற்கடவுளாகக் கொண்டு தமிழில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும், சிலர் இவரை வடமொழி ஆதரவாளர் என்று வாதிட்டவர்களும் உண்டு.

தமிழை இவர் எவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருந்தார் என்பதை அவருடைய சொற்பொழிவாலேயே உணர முடிகிறது.

தமிழ் மிகத் தொன்மையானது. மற்ற மொழிகளைப் போலப் பின்னே வந்த மொழி அல்ல. தமிழின் பெருமையைச் சொல்லுகிறேன்.

கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம். முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது.

என்ன பண்ணுவது?

இமயமலை உச்சியில் எல்லாரும் உட்கார்ந்திருக்கின்றார்கள்.

சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார்.

"அப்பனே வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. நீ பொதிகை மலைக்குப் போ" என்றார்.

அகத்திய முனிவரோ "அடிக்கடி நடக்கின்ற கல்யாணமா சுவாமி இது! இந்தப் பாவி இந்தக் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே" என்றார்.

 "நீ வருத்தப்படாதே; இந்தக் காட்சியை
உனக்கு அங்கே தருகின்றேன்"
என்றார் சிவபெருமான்.

அவருக்குத் தமிழ் தெரியாது.

இது தமிழ்நாடு.

மூன்றே முக்கால் நாழிகையிலே தமிழ் சொல்லிக் கொடுத்தாராம்.

கற்பூர புத்தி.
உடனே தெரிந்து
கொள்பவர்களும் உண்டுதானே?

ஓரளவு
தமிழ் பேசுவதற்கு
ஞானம் வேண்டும்.

அப்புறம் அங்கு
மகாவித்வான்கள்
எல்லாம் வருவார்களே?

அவர்களுடன்
பேசத்தான் தமிழ்
கற்றுக் கொண்டார்.

இலக்கணம் படித்தால்தானே எல்லோரும் மதிப்பார்கள்.

முருகப் பெருமானை வேண்டித் தவம் செய்தார்.

கந்தக் கடவுள் வந்தார்.

எனக்குத் தமிழ் சொல்லிக் கொடு என்றார்.

முருகப்பெருமான்தான் அகத்தியருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார்.

அவர் அகத்தியம் என்று
ஓர் இலக்கணம் செய்தார்.

இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதில் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன.

கடல்கோள்களால் அநேக பாடல்கள் அழிந்து விட்டன.

அந்த அகத்தியம் சிதைந்த பிறகு அவருடைய 12 சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர்தான் தமிழ் இலக்கணம் செய்தார். அதுதான் தொல்காப்பியம்.

நம்முடைய வாழ்க்கை நான்கு வகையாகும். கிடத்தல், இருத்தல், நிற்றல், நடத்தல்.

படுத்திருபோம்;
எழுந்து உட்காருவோம்;
நிற்போம்; நடப்போம்.
இந்த நான்கைத் தவிர
வேறு கிடையாது.

யுகங்கள் நான்கு. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்.

நிலம் நான்கு.
குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல்.

பெண்மைக்கு நான்கு.
அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம்.

ஆண்களுக்கு
புருஷார்த்தங்கள் நான்கு.
அறம், பொருள், இன்பம், வீடு.

எழுத்து நான்கு.
உயிரெழுத்து,
மெய்யெழுத்து,
உயிர்மெய்யெழுத்து,
ஆயுத எழுத்து.

சொல் நான்கு
பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல்.

பாட்டு நான்கு.
வெண்பா, ஆசிரியப்பா,
வஞ்சிப்பா, கலிப்பா.

எல்லா மொழிகளிலுமே
நான்கில்தான் அடக்கம். சுழி, பிறை, நேர்க்கோடு,

குறுக்குக்கோடு. இரண்டு நேர்கோடு போட்டால் "ப"
இப்படி போட்டால் "H" .
இப்படிப் போட்டல் "L".

அறிவுக்குச் சிந்தனை.
"அ" கரத்தில் இந்த
நான்கும் வைத்தார்கள்.

"மெய்யின் இயக்கம்
அகரமொடு சிவணும்"

*- தொல்காப்பியம்*

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"

*- திருக்குறள்.*

"அகர உயிர்போல் இறை"

*-திருவருட்பயன்.*

"அகரமு மாகி, அதிபனு மாகி"

*- அருணகிரியார்.*

சில நுட்பங்களையெல்லாம் தொல்காப்பியத்திலே மிக அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். நான்கு நிலங்களை வகுத்தார்.

அந்த நிலங்களுக்குத் தெய்வத்தைச் சொன்னார்.

நிலத்தை ஒப்புக் கொண்டால் தெய்வத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.


இங்கு உயர்ந்த நிலை எது? மலை. "தணிகை மால் வரையே" என்பது கந்தபுராணம். வரை என்றால் மலை. வரை என்றால் கோடு. எதுவரை நீங்கள் போனீர்? ஆகவே, மலைதான் உயரமாய் இருக்கும். அந்த உயர்ந்த இடத்தில் முருகப்பெருமானை வைத்துச் சொல்கின்றார் தொல்காப்பியர்.

"சேயோன் மேய மைவரை உலகு" தமிழைச் சொல்ல வந்தவர், தமிழின் நிலத்தைச் சொல்ல வந்தவர், அந்த நிலத்துத் தெய்வத்தைச் சொல்லுகின்றார். - இப்படி தமிழின் பெருமையை உயர்த்திக் காட்டியவர் வாரியார்.

ஒருமுறை ஒரு சொற்பொழிவில் ஒரு பாடலைப் பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார்.

அந்தப் பாடலில் "அம்மை" என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் "சுவாமி! "அம்மை" யில் வரும் "ஐ" இரண்டு மாத்திரையாயிற்றே!" என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார்,

"ஆம், "ஐ" க்கு 2 மாத்திரைதான், ஆனால் இந்த 'ஐ'க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்" என்று விளக்கினார். இப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது,

"தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்" என்று கம்பர் கூறுகிறார். "தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?" என்று கண்ணதாசன் கேட்டார்.

அதை "தாம் அரைக் கண்ணால்"' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?" என்று விளக்கம் கூறக் கவியரசர் அசந்து போனார்.

வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார்.

அப்போது
திராவிடர் கழகத்தினர்

"கிருபானந்த "லாரி" வருகிறது"
என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள்.

தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார், அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது.

"வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!" என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.

வாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது.

இவரிடம் திருமணம் மற்றும் விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவுடனே அவர்களுக்கு வெண்பா மூலம் உடனுக்குடன் வாழ்த்துப்பாடல் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவர் தமிழ் மேல் பற்று கொண்டிருந்தார் என்பதை விட தமிழ் இவர் மூலம் பலரிடம் பற்றிக் கொண்டது தமிழ்  என்பதே பொருத்தமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக