ஞாயிறு, 19 நவம்பர், 2017

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம் - நவம்பர் 19.



ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம் - நவம்பர் 19.

வாரணாசியில் பிறந் தவர். இயற்பெயர் மணிகர்ணிகா. மனு என்று அழைக்கப்பட்டார். 4 வயதில் தாயை இழந்தார். தந்தை, பித்தூர் பேஷ்வாவிடம் பணிபுரிந்தார். பேஷ்வா இவரைத் தன் சொந்த மகள்போலவே வளர்த்தார். படிக்கும் வயதிலேயே குதிரை ஏற்றம், கத்திச் சண்டை மற்றும் தற்காப்புப் பயிற்சிகளைப் பயின்றார்.

1842-ல் ஜான்சி மன்னர் கங்காதர ராவுடன் திருமணம் நடைபெற்றதும் ‘ஜான்சி ராணி லட்சுமிபாய்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இவர்களுக்குப் பிறந்த குழந்தை 4 மாதங்களில் இறந்ததால் வேறொரு குழந்தையைத் தத்தெடுத்தனர். ஆனாலும், மகனை இழந்த சோகத்தில் ராஜா இறந்தார். அதன் பிறகு, நாட்டை ஆளத் தொடங்கினார் லட்சுமிபாய். பெண்களுக்கு போர்ப் பயிற்சி அளித்து, தனது ராணுவத்தில் பெண்கள் படையை உருவாக்கினார். அண்டை நாடுகள் மீது படையெடுத்து வென்றார்.

ஆங்கிலேயரின் அவகாசியிலிக் கொள்கைப்படி நேரடி வாரிசு இல்லாத அரசுகள் ஆங்கில ஆட்சியின் கீழ் வந்துவிடும். ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ஜான்சியை விட்டு வெளியேறுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது. லட்சுமிபாய் ஒப்புக்கொள்ளவில்லை.

கிழக்கிந்தியத் தலைவர்களைக் கொன்றதாக லட்சுமிபாய் மீது குற்றம் சாட்டி ஜான்சி மீது படையெடுத்தது ஆங்கிலப் படை. இறுதியில் ஜான்சி நகரைக் கைப்பற்றினர். ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாய், தன் மகனுடன் மதில் மேலிருந்து பாய்ந்து தப்பினார்.

தன் படைகளை மீண்டும் திரட்டி தாந்தியா தோபேயின் படைகளுடன் இணைந்துகொண்டார். இருவரும் இணைந்து குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயப் படை குவாலியரைத் தாக்கியது.

அவர் சளைக்காமல் போரிட்டார். போர் ஒரு வாரம் நீடித்தது. ஆங்கிலேயரின் அதிநவீன போர்க் கருவிகளை எதிர்கொள்ள முடியாமல் அந்த போரில் கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்தபோது லட்சுமிபாய்க்கு வயது 29.

அவர் ஏற்கெனவே கூறியபடி படைவீரர் ராமச்சந்திரா என்பவர் குவாலியர் அருகே புல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு லட்சுமிபாய் உடலை தகனம் செய்தார். தன் உடல்கூட ஆங்கிலேயருக்குக் கிடைக்கக் கூடாது என்பது அந்த இளம் வீராங்கனையின் விருப்பம்.

அவரது வீரதீரச் செயல்களைப் பற்றிய பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாடகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளிலும் கதைகள் எழுதப்பட்டுள்ளன. திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.

ஆங்கிலேயருக்கு எதிராக தான் உருவாக்கிய மகளிர் படைக்கு ‘ஜான்சி ராணி படை’ என்று பெயரிட்டார் நேதாஜி.

அமரத்துவம் பெற்ற வீராங்கனையாக என்றென்றும் இவரது பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. இவரது வீர வரலாறு அடுத்தடுத்து வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக