புதன், 22 நவம்பர், 2017

கவிஞர் சுரதா பிறந்த நாள் நவம்பர் 23 , 1921.



கவிஞர் சுரதா பிறந்த நாள்  நவம்பர் 23 , 1921.

சுரதா ( நவம்பர் 23 , 1921 - ஜூன் 19 , 2006 ) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை
சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
பாரதிதாசனுடன் தொடர்பு
1941 சனவரி 14 இல் பாவேந்தர்
பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

கவிதை இயற்றல்

சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார் , கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
திரைப்படத் துறையில்
சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு
மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார்.
சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

எழுத்துப்பணி

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம் . இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பெற்ற சிறப்புகள்

1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மறைவு

இவர் தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
குடும்ப உறுப்பினர்கள்
சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். பெயரர்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர்.
சுரதாவின் படைப்புகள்
தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
அமுதும் தேனும் , 1983
பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வெட்ட வெளிச்சம்


தனக்குவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா

          ராசகோபாலன் என்னும் இயற்பெயர் கொண்ட... தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்த... உவமைக் கவிஞர் என்று அனைவராலும் உவகையுடன் அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 90 வது பிறந்த நாளினை ( நவம்பர் 23)  தமிழக அரசு,  அரசு விழாவாக எடுத்து சிறப்பித்தது.  அதனையொட்டி அன்று மாலை சுரதாவின் மொத்த நூல்களின் வெளியீட்டு விழாவினை சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடன் சிறப்புற நடத்தினார். இவ்விழா சென்னை அண்ணாசலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கில் தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

சுரதாவின் 28 நூல்களுடன் சுரதாவின் மகன் கல்லாடன் எழுதிய ‘கனவின் சாம்பல்’ மற்றும் சுரதாவின் மருமகள் ராஜேஸ்வரி கல்லாடன் எழுதிய ‘மௌனமும் பேசும்’ ஆகியன உட்பட 30 நூல்களையும் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது. இந்த நூல்களை நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட நல்லி குப்புச்செட்டியார் சார்பில் பொதிகை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் நடராஜன் பெற்றுக்கொண்டார்.

மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றால், சுப்புரத்தினம் என்னும் தனது இயற்பெயரை ‘பாரதிதாசன்’  என மாற்றிக்கொண்டார் பாவேந்தர்.அவரின் மீது கொண்ட பற்றிதலினால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை ‘சுப்புரத்தின தாசன்’ என்று மாற்றிக்கொண்டவர் சுரதா. இவரின் பெற்றோர் திருவேங்கடம், செண்பகம் அம்மையார். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாச்சல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்று, தமிழுக்கு தன் எழுத்துக்களால் மணிமகுடம் சூட்டிய சுரதாவின் இந்த 90 வது பிறந்த நாள் விழாவில்... சீர்காழி கோ.சிவசிதம்பரம் சுரதாவின் மூன்று பாடல்களை பாடி தனது குரலால் சுரதாவிற்கு சிறப்புச் சேர்த்தார்.

நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், குமரி அனந்தன், கவிஞர் வாலி, கவிஞர் கலி.பூங்குன்றனார், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உவமைக் கவிஞரின் பல உவமைக் கவிதைகளை எடுத்துக்காட்டாக கூறி வாழ்த்தியவை  சுரதாவுக்கு உவமையில்லா வாழ்த்தாக அமைந்தன.

தன் பெயரை நிலைநாட்டிய கவிஞர் - முனைவர் மு.பி.பா :


தமிழ் சான்றோர் பலர் நிறைந்த இவ்விழாவில் சுரதாவை பற்றி நான் கூறித்தான் தெரிய வேண்டிதில்லை. சுரதா தமிழுலகம் அறிந்த ஒப்பற்ற கவிஞர்.

சுரதாவின் உவமை ஆளுமை சாலச்சிறந்தது. அவர், ‘இடுகாடு’ பற்றி கூறும் கவிதையில்,

“இங்கு வருவதற்கு யாரும் விரும்புவதில்லை - ஆனால்
 இங்கு வந்தவர் யாரும் திரும்புவதில்லை...  என்று பளிச்சென்று மனதில் பதியும்படி கூறியிருப்பார். இப்படி சுரதாவின் எத்தனையோ கவிதைகளை அவரின் சிறப்பாக கூறிக்கொண்டே போகலாம்.  சுரதாவைப்பற்றி அனைவரும் நன்கறிவோம் என்பதால் அவரின் மகன், மருமகள் ஆகிய இருவரைப்பற்றி கூறலாம் என நினைக்கிறேன்.

சுரதாவின் மகன் கல்லாடனும் சிறந்த கவிஞர் என்பது அவரின் ‘கனவின் சாம்பல்’ என்னும் நூலை படிக்கும்போது உணர முடிகிறது. அதேபோல்தான் ராஜேஸ்வரி கல்லாடனும். ராஜேஸ்வரி கல்லாடன் எழுதியிருக்கும் ‘மௌனமும் பேசும்’ எனும் நூலில் தனது கணவர் கல்லாடன் பற்றி குறிப்பிடும்போது,

ஒரு புள்ளியான நான் -
வெள்ளியாக வெளிச்சமிட
அவரே காரணம் - ஆம்
என் கணவர் கல்லாடனே காரணம்... என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரின் நூலுக்கும் அணிந்துரை எழுதியிருக்கிறார் வாலி, ராஜேஸ்வரியின் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் ‘என் மகள்போன்றவர்’ என்று வாலி குறிப்பிட்டுள்ளார்.அது அவருக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு.

பாரதிதாசனின் மீது கொண்ட பற்றால் வைத்துக்கொண்ட சுப்புரத்தின தாசன் என்னும் பெயரை சுரதா என சுருக்கிக்கொண்டு நூல்கள் எழுதிய காலத்தில், சுரதா என்றப் பெயர் புலக்கத்தில் பிரபலமாகுமா என்று பலரும் அவரிடம் கேட்டதற்கு,“ நிச்சயம் புகழடையும். அதை நிகழ்த்திக் காட்டுகிறேன்” என்றார். அதே போல் சுரதா என்றப் பெயர் தமிழ் உலகில் தனித்த நின்று சிறப்படைந்துவிட்டது.

சுயமரிதை மிக்க கவிஞர் சுரதா - கவிஞர் கலி.பூங்குன்றன் :

சுரதா சுயமரியாதை மிக்கவர்.  அவரிடம் ஒரு நேர்காணலின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு கணிப்பொறியிலிருந்து பதில் வருவது போல் துரிதமாகவும் துள்ளியமாகவும் பதிலளித்திருக்கிறார்.

உங்களுக்கு மிகவும் பிடித்த கட்சி ?

திராவிடம்.

யாரையும் பின்பற்றாததன் காரணம் ?

நான் நாத்திகன். நான் பெரியார் வழியில் நடப்பவன். கவிதை  என்பது வரப்பிரசாதம் என்று கூறுவதைக்கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படிக்கும் தோறும், பழகும் தோறும் ஒருவன் கவிதையில் தேர்ச்சிப் பெற்றவனாகிறான்.

பிடித்த கடவுள் ?

அப்படி ஒருவர் இருந்தால் தானே.

இவ்வாறு சுயமாரிதை சிந்தனையுடன் பதிலளித்துள்ளார் சுரதா.

உரை நடையைப் பற்றிக்கூறும் போது, “உரை நடை - பசிக்கு சோறு” என்கிறார்.

நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்கள் ? என்ற கேள்விக்கு,
இது நீ ஏன் உயிர்வாழ்கிறாய் என்று கேட்பது போலிருக்கு. என்று பதிலளித்திருப்பார் சுரதா.



குறைந்து வரும் புத்தகம் படிக்கும் ஆர்வம் - சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் :
நன்றி நக்கீரன்.
சுரதாவின் ‘அமுதும் தேனும் எதற்கு’ என்ற அருமையான பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்னும் இனிமையாக இருக்கும். இந்தப் பாடல் சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். சுரதா தஞ்சாவூர் பகுதிக்காரர் என்பதால், இன்னும் அவர் எனக்கு நெருக்கமானவராக தெரிந்தார். மருதுபாண்டியர்கள் போன்ற பல வரலாற்று சிறப்பு மிக்கவர்கள் குறித்த அரிய தகவல்களை ஆவணப்படுத்தி புத்தகமாக்கியிருக்கிறார் சுரதா. அற்புதமான கவிதைகள், ஆவண நூல்கள், சிறுகதை என பல்துறையின் வழியில் தமிழுக்கு தொண்டாட்டிருக்கிறார் சுரதா.
 
இனிவரும் தலைமுறையினரிடம் புத்தகம் படிக்கும் ஆர்வம் இருக்குமா என்பது சந்தேகம்தான். நான் ஆயிரக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளேன். எனது மறைவுக்கு பிறகு எனது பிள்ளைகள் அவற்றை எல்லாம் குப்பை என்று ஒதுக்கிவிடுவார்கள்.

சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் நான் பேசிய

கன்னிப் பேச்சின் போது, “அரசு சார்பில் நூல்கள் வாங்கும் போது, 500 படிகள் வாங்கப்பட்டு வருவதை, 1500  படிகளாக உயர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தேன். இந்த எனது பேச்சை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை ஏற்று 1000 படிகள் வாங்குவதற்கு வழிவகுத்தார் கலைஞர்.  

புத்தகம் உருவாக்கும் தனிப்பட்ட எழுத்தாளரின் நலனுக்காக,  எழுத்தாளர் உரிமம், வெளியிடல், விநியோகித்தல் போன்ற பலவற்றில் ஒரு நெறிமுறையை வகுத்து கொள்கையாக வரையறைப்படுத்துதலை மத்திய அரசு செய்கிறது. இதை மாநில அரசும் செய்யவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சில தனியார் பதிப்பகங்கள்தான் தொடர்ந்து புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றன. பல சிறு பதிப்பகங்கள் பொருளாதாரச் சிக்கலால் நசிந்துவிட்டன. நல்ல புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட, "மாநில புத்தக ஆதரவுக் கொள்கை" ஒன்றை எழுத்தாளரும், தமிழ் காப்பாளருமாக இருக்கும் முதல்வர் கலைஞர் ஏற்படுத்த வேண்டும் என, நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர் தலைமையேற்றுள்ள இந்த விழாவில் இதை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். இந்தப் புத்தக மேம்பாட்டுக் கொள்கை மூலம் ஏராளமான நல்லப் புத்தகங்களை வெளியிட அரசு உதவ வேண்டும்.

சுரதா தமிழுக்கு கிடைத்த வரப்பிரசாதம் - பேராசிரியர் க.அன்பழகன் :


அந்தக் கவிஞரை(சுரதா) பற்றி இந்தக் கவிஞர்(வாலி) கூறியது அருமை. நாத்திகக் கவிஞரை ஆத்திகக் கவிஞர் படம் பிடித்துக்காட்டிவிட்டார். இலக்கியச்செம்மல் குமரி அனந்தன் கூறியது போல் சுரதாவின் கவிதைகள் அருகில் இருக்கையில் அமுதும் தேனும் எதற்கு.

சுரதாவை எனக்கு 47 ஆண்டுகளாகத் தெரியும். ஆனால் சுரதாவை பற்றிய நினைவுகளை சுரதாவைப் போல உவமை காட்டி என்னால் பேச இயலாது. வாலியைப் போல் ஆழ்ந்த கவிதை அனுபவிப்புடன் சுட்டிக்காட்டவும் தெரியாது.அந்தத் திறன் எனக்கு வாய்க்கவில்லை.

நான் உணர்ந்த வகையில் சுரதா, ஒரு சுயசிந்தனையாளர். பாரதிதாசனிடம் பழகி அவர் கற்றுக்கொண்டவை ஏராளம் என்றாலும் தான் யாரையும் முன் உதாரணமாகக் கொள்ளவில்லை எனக் கூறியவர். அதன்படியே தனக்கென ஒரு தனி நடையை உருவாக்கி அதன் வழியில் தன் படைப்புகளை பரவவிட்டவர்.

நாத்திகம் ஆன்மிகம் என்ற இரண்டையும் கடந்த நிலையில் மனித மாண்புகளைப் போற்றியவர். அவருடைய எழுத்துகளைப் படிக்கும்போது அன்பு,அறிவு ஆகியவற்றைவிட அவர் ஒழுக்கத்தைத்தான் அதிகமாக நம்புவது தெரிகிறது. அதை தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தியவர்.

தமிழில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். ஆனாலும், புதுக்கவிதை எனப்படுவது எண்ணங்களின் வெளிப்பாடுதான். அது கவிதை அல்ல என்றும் புதுக்கவிதையைச் சாடுகிறார்.

ரவிக்குமார், வருங்காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்காது என்றார். நிச்சயம் புத்தகங்களுக்கான மதிப்பு எந்தக் காலத்திலும் குறையாது. தமிழை படித்தவர்களால் ஆங்கிலத்தையும் ஆள முடியும். ஆங்கிலத்தின் மூலம் பிழைப்பு நடத்திவந்தாலும் தமிழன் தன் தாய்மொழியை விட்டுவிடமாட்டான். தமிழ்மீது பற்று கொண்ட ஒரே ஒருவன் இருந்தாலும்கூட போதும் தமிழ் தழைத்தோங்கி வளர்ந்துவிடும்.

தமிழ் மொழி இப்போது இருப்பதை விட சொல்லளவில், பொருள் அளவில், வடிவத்திலும், நவீன காலத்திற்கேற்ற வகையில் தன்னை வளப்படுத்தி வளர்ந்து விடுமே ஒழிய, தமிழ் என்றும் அழிவதில்லை.   தமிழ் மொழியில் இருப்பது போல் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கிய, இலக்கண வளம் கொண்ட நூல்கள் எந்த மொழியிலும் இல்லை. வடமொழியில் மிகப்பழமையான இலக்கிய எடுத்துக்காட்டுக்கு காளிதஸன் மட்டுமே உண்டு. ஆனால் தமிழில் அப்படி இல்லை, தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை என எத்தனையே இலக்கியச் செல்வங்கள் ஏராளமாக இருக்கின்றன.

அத்தகைய தமிழுக்கு தொண்டாற்றிய சுரதாவின் எண்ணங்களும் எழுத்துகளும் தமிழ் மொழியின் ஏற்றத்துக்குப் பயன்பட்டிருக்கின்றன. இன்னும் பயன்படும். தமிழ்ப்பற்று, இனப்பற்று, இலக்கியப்பற்று மிகுந்தவர்களுக்கு சுரதாவின் புத்தகங்கள் வரப்பிரசாதமாக அமையும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக