புதன், 3 ஜனவரி, 2018

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் பிறந்த தினம் ஜனவரி 03,


இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் பிறந்த தினம் ஜனவரி 03,

*வீரப்பேரரசி  வேலு நாச்சியார்!*

*இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.*

*இராணி வேலு நாச்சியார்*
*(கி.பி 1730 - 1796)*

ஆட்சி கி.பி 1780- கி.பி 1783
*முடிசூட்டு விழா கி.பி 1780
முன்னிருந்தவர் முத்து வடுகநாதர்
துணைவர் முத்து வடுகநாதர்
அரச குலம் சேது மன்னர்
தந்தை செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி
தாய் முத்தாத்தாள் நாச்சியார்

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.

1772இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதின் படி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் அவகாசியிலிக் கொள்கை (ஆங்கிலம்: Doctrine of Lapse) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர். மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர்.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

1793இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.

வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.

ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.

*வீரப்பேரரசி வேலு நாச்சியார் 288 வது பிறந்தநாள் வீரவணக்கம்!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக