திங்கள், 6 ஜூன், 2016

உலகக் கடல் நாள் ஜூன் 08



உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வு; 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின் இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில் முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

பூமியின் பெரும்பகுதியை வியாபித்துள்ள கடல், பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவதுபோல், பூமியின் நிலப்பகுதிக்கு, கடல்தான் மழையாகப் பொழிந்து செழிக்கச் செய்கிறது.

வாழ்வாதாரத்தில் கடலின் பங்கு
பூமியில் நாம் வாழ கடல் பெரும்பங்கு வகிக்கிறது. கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது. கடல், ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களை வழங்குகிறது. மற்றும் காலநிலை மாற்றங்களைச் சீராக்குகிறது. சில சமூகத்தினரின் வாழ்வாதாரம் கடலைச் சார்ந்தே அமைந்துள்ளது.



பூமியின் நுரையீரல் என்று கடலைச் சொல்லலாம். நாம் சுவாசிக்கும் காற்றில் பெருமளவை, மரங்களைவிடவும் கடலே உற்பத்தி செய்கிறது. நமக்குத் தேவையான பெருமளவு உணவு, மருந்துகள், உயிரின வளம் கடலிடமே இருக்கிறது.

இதைச் சிறப்பிக்கும் வகையில் உலகப் பெருங் கடல்கள் நாள் ஜூன் 8-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 1992 ஜூன் மாதம் 8-ம் தேதி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் புவி மாநாடு நடைபெற்றபோது, மனிதச் சமூகத்துக்குக் கடல் வழங்கும் எண்ணற்ற செல்வங்களை இனங்கண்டு, உலகக் கடல் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதியிலிருந்து உலகக் கடல் நாளைக் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது.

கடலின் மதிப்பு

உலகின் கடல்களால் நாம் பெறும் பயன்களை அளவிட்டுப் பார்க்கவும், அவை நமக்கு வழங்கும் கடல் உணவு வகைகள், மீன்கள், செல்லப் பிராணிகள், மதிப்புமிக்க பொருள்களையும், அவற்றின் பயன்களையும் நினைத்துப் பார்க்கவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

புவியின் மேற்பரப்பிலுள்ள கடல்கள் தனித்தனியானவை எனக் கருதப்பட்டாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல், இந்து மகா கடல், அண்டார்டிக் கடல், ஆர்டிக் கடல் என ஐந்து பெருங்கடல்கள் உலகில் உள்ளன.

கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் பெருங்கடல்களின் சிறிய பகுதிகள் அழைக்கப் படுகின்றன. இவற்றைத் தவிர நிலத்தால் சூழப்பட்ட சில பெரும் உப்பு நீர்நிலைகளும் நம் உலகில் உள்ளன (காஸ்பியன் கடல், சாக்கடல்).

கடல் சீரழிவு

கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல், எண்ணெய் துரப்பணம், துறைமுகக் கட்டுமானம், கடலில் பிளாஸ்டிக் முதலிய குப்பைகளைக் கொட்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் கடல்களின் சீரழிவுக்கு முக்கியக் காரணங்கள்.

அளவுக்கு அதிகமான மீன் இனங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகப் பெரும்பாலான கடல் உயிரினங்கள், மீன்களின் தொகை அதிவேகமாகக் குறைந்துவருகிறது. இன்னும் 12 வருடங்களில் உலக உணவு மீன் இனங்கள் வெகுவாகக் குறைந்துவிடலாம் எனச் சில ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வளம் தரும் கடல்

கடல்கள் சில நேரம் பெரும் இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தினாலும்கூட, கடல்களால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் அளவிட முடியாதவை. மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கைக்கும் கடல்கள் இன்றியமையாதவை. நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்டமிகு உணவையும் வழங்கும் கடல்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும், சாதாரண மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. கடல்வழி பல நாடுகளுக்குப் பயணிகள் பயணிக்கவும், சர்வதேச வர்த்தகப் பாதைகளாகவும் கடல்கள் விளங்குகின்றன. இப்படிப் பல்வேறு வகைகளில் மக்களின் வாழ்க்கையில் கடல் வளங்கள் மிக முக்கியக் பங்கை ஆற்றுகின்றன.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பெருங்கடல்கள், சிறு கடல்களின் பெருமையை இந்தத் தருணத்தில் நினைவுகூர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக